அமாவாசையும்..புலிகளின் அதிரடித் தாக்குதல்களும்!

கண்ணின், கருவிழிகளைக் குத்தும் கும்மிருட்டுதான் கெரில்லாப்
போர்க்களத்துக்கு சாதகமானது!
*******************
13.11.1993இல்..
வெற்றிகரமாக புலிகள்..தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பூநகரி இராணுவ முகாமை கைப் பற்றினார்கள்..
********************************************************
மு.வே.யோகேஸ்வரன்
*******************
1990 கு பின்னர் ஈழத்தில் நடந்த பெரும்பாலான தாக்குதல்களை உற்று நோக்கிப் பார்த்தால், அவை பெரும்பாலும் அமாவாசை நாட்களிலோ,அல்லது அதை நெருங்கிய நாட்களிலோதான் நடை பெற்றுள்ளன.அது ஏன்? என்று அன்பர்கள் யாராவது சிந்தித்தீர்களா?
அமாவாசைக்கும் நடிகர் வடிவேலுக்கும்(வடிவேல் அவர்கள் இதை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்)என்ன ஒற்றுமையோ,அதே ஒற்றுமைதான் புலிகளின் அதிரடி முகாம்கள் மீதான தாக்குதல்களுக்கும்,அமாவாசைக்கும் உண்டு.மிகப் பெரிய தாக்குதலான பூனகேரி ராணுவ முகாம் தாக்குதல் ஆகட்டும்..அல்லது
தலைவரின் நேரடி தலைமையில்-வழி நடத்தலின் கீழ் நடந்த மண்டைதீவுத் தாக்குதல் ஆகட்டும்.முல்லை முகாம் மீதான தாக்குதல் ஆகட்டும், மாங்குளம்,கிளிநொச்சி, முகாம்கள் மீதான தாக்குதல் ஆகட்டும்..
பெரும்பாலும் அமாவாசை நாட்களிலும் அதற்கு முந்திய சில நாட்களிலும்,அல்லது அமாவாசைக்கு ஒருசில பிந்திய நாட்களிலுமே நடந்தேறியுள்ளன அது ஏன் என்பதை அன்பர்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அப்போது சிந்தித்ததும் இல்லை.
ஆனால், முக்கிய புலிகளின் உறுப்பினர்களுக்கு அதன் காரணம் நன்கு தெரியும்.அமாவாசைக் கும்மிருட்டில் ஓர் அடிக்கு பக்கத்தில் நிற்பவரையே சரியாக தெரியாதபோது, எப்படி ஐம்பது அடி தூரத்துக்கு அப்பால் இருந்து தாக்குதலுக்கு வரும் புலிகளை அடையாளம் காண முடியும்?..எனவேதான் புலிகள் அமாவாசையை..அல்லது அதை அண்டிய நாட்களை இலங்கை முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தினர்.அப்படிஎன்றால் புலிகளுக்கு மட்டும் எப்படி ராணுவத்தை அடையாளம் காணமுடியும்? என்று நீங்கள் கேட்கலாம்.உண்மை!அதற்கான விடையோ மிக சுலபம்.
இராணுவ முகாம்களை வேவு பார்க்க அனுப்பப்படும் வேவுப் புலிகள் இரவு நேரத்தில்தான் தங்களின் கடமையை பெரும்பாலும் ஆரம்பிப்பர்.அதனால், குத்தும் இருட்டு என்பது புலிகளுக்கு பழக்கப் பட்ட ஒன்று.பூனைகளுக்கு,புலிகளுக்கு,வவ்வால்களுக்கு எப்படி இரவில் தெளிவாக கண்கள் தெரியுமோ அப்படித்தான் இதுவும்.
தினம் தினம் இரவில் நடமாடும் மனிதர்கள், இருட்டில்தம் கண்களைப் பழக்கப் படுத்திக் கொள்வார்கள்.எமது ராணுவ வேவுப் புலிகளும் அப்படித்தான்.ஒரு முகாம் தாக்குதலுக்கு இருட்டு நேரத்தில் போகும்போது சில தளபதிகளுக்கு வேவுப் புலிகள் பல நாட்கள் இரவுநேர நகர்தல் பற்றி பயிற்சி அளிப்பதுண்டு ஏனெனில் ஒரு முகாமின் ராணுவ வரை படத்தை,அதன் சூழ் நிலையை, வேவுப் புலிகளின் வரை படத்தைக் கொண்டுதான் தலைவர் நிச்சயிப்பார்..அந்த தளபதிகள் பின்னர் தமது படைப் பிரினருக்கு அந்தப் பயிற்சியை அளிப்பார்கள்.
தாக்குதல் தொடங்கும்போது யாரும் இருட்டை பற்றி கவலைப் படாமல் முன்னேறுவார்கள்..இதுதான் புலிகளின் வெற்றியின் ரகசியம்.
ஆயினும், இன்னும் ஓர் சிறப்பு உத்தியும் போர்க்களத்தில் புலிகளால் அவ்வப்போது கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.
அது என்ன தெரியுமா? தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சிறைச் சாலைகளுக்கு சென்று அங்கேயுள்ள முக்கிய திருடர்களிடம் கேளுங்கள்- அது என்ன உத்தி என்று சொல்வார்கள்.நானே சொல்லிவிடுகிறேனே..ஒரு பரம்பரைத் திருடன் நள்ளிரவில் ஒரு வீட்டில் கன்னமிட நினைத்தால்,நள்ளிரவுக்கு பின்னர் ஒரு பிளேட்டை எடுத்து தன கையில் வைத்திருப்பானாம்.அதற்கு கீழே மறு கையை வைப்பான்.ஆனால் கொட்ட, கொட்ட விழித்திருப்பான்.கூரிய பிளேட் அவனது வலக் கையில் வெட்டுவதற்கு தயாராய் இருக்கும்.ஒரு கட்டத்தில் அந்த திருடனின் கண்கள் உறங்க முயலும்போது, அவனை அறியாமலே அவனது கை கீழே தாழும்.அப்போது கையில் இருந்த பிளேட் இடது கையை தூக்க கலக்கத்தில் வெட்டிவிடும்.உடனே இரத்தம் பீறிட்டுப் பாயும்.அதற்கு ஒரு கட்டுப்போட்டுக் கொண்டு, அவன் தான் தெரிவு செய்த வீட்டை கொள்ளை அடிக்க போய்விடுவான்.அங்கே மக்கள் நன்கு தூங்கி கொண்டிருப்பார்கள்.அவன் எதுவித சிரமமும் இன்றி தன் வேலையை முடித்துவிட்டு திரும்பி விடுவான்.
அதாவது, அன்றைய சூழ் நிலையில் இயற்கையின்பருவ நிலை மாறுதலுக்கு ஏற்ப உயிரினம் தூங்கும் நேரம் வரும்போது தூக்கம் வரும். திருடனுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அது ஒன்றுதான்.பெரும்பாலும் நள்ளிரவுக்கு ஒரு சில மணி நேரம்(அல்லது நள்ளிரவில்) கழித்தே புலிகள் தம் தாக்குதல்களை ஆரம்பிப்பது வழக்கம்.ஆனால், இதையே எதிரி நோட்டமிட்டு அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் இருக்க, தலைவர் அவர்கள் தாக்குதல் யுக்திகளை பின்னர் அடிக்கடி மாற்றி வந்ததும் உண்டு.மாலை,ஆறு- ஏழு மணிக்கும்…ஏன் பட்டப் பகலில்கூட சில தாக்குதல்கள் இதனால்தான் நடை பெற்றன.இது தாக்குதல் யுக்திகளை எதிரிக்கு காட்டி கொடுக்க கூடாது என்பதற்காக செய்யப்பட்ட தாக்குதல்கள்..

13.11.1993இல்..
வெற்றிகரமாக புலிகள்..தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பூநகரி இராணுவ முகாமை கைப் பற்றினார்கள்..
கும்மிருட்டின் கோரப் பிடிக்குள் உலகம் துயின்று கொண்டிருந்த அந்த நாளில்..தரை மூலமும், கடல்மூலமும் புலிகள் பாய்ந்தார்கள்..
வாடர் ஜெட் ..என்று அழைக்கப் படும் 8 நீரூந்துக் கப்பல்களை எதிரியிடம் இருந்து கைப் பற்றிக் கொண்டுவந்தார்கள்..அவற்றில் இரண்டு, தாக்குதலுக்கு உட்பட்டு சேதம் அடைந்து விடவே ஏனையவை கடற் புலிகளால்..பின்னர் ..பாவனைக்கு உட்படுத்தப் பட்டன..அது மட்டுமல்ல..இராணுவ பீரங்கி வண்டிகளையும் இராணுவ முகாமில் இருந்து கைப்பற்றி அவற்றை தாமே ஒட்டிக் கொண்டு வந்தார்கள்..ஆட்டிலறிகள்..பீரங்கிகள்..எறிகணை ஏவிகள்….இன்னும் எண்ண முடியாத ஆயுதங்கள் யாவும் அள்ளப் பட்ட தாக்குதல்தான் பூனகேரி முகாம் தாக்குதல் ஆகும்..

பூனகேரி முகாமை சூழவுள்ள பகுதிகளில் இருந்து…இராணுவத்துக்கு .வரும் கடல் மூலமான உதவிகளை..கடற்புலிகள்..இன்னும் ஒரு பகுதியில் தம் விசைப் படகுகளின் துணையோடு வீரப்போர் புரிந்து தடுத்தார்கள்..அதில் ,முன்னாள் கடற்புலிகளின் தளபதி, கங்கை அமரனின் பங்கும், வேறு பல கடற்புலிகளின் கமாண்டோக்களின் பங்கும்.. மகத்தானது.தளபதி…கங்கை அமரன்..வேறு ஓர் சமரின்போது வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்.. ..ஆனால் அவரின் நினைவுகள் என்றும் அழியாமல் உள்ளன..

நாகதேவன்துறை(பூனகேரிக்கு அண்மையில்) என்ற இடத்தில் உள்ள சிங்களக் கடற்படை முகாமை
அழித்தால்தான் பூனகேரி முகாம் பிடிபடும் என்ற நிலையில், அதைத் தாண்டித்தான் மற்றொரு பகுதிமூலம்,பூனகேரி முகாமைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில்..கிளாலிக் கடல் ஊடாக..நூற்றுக்கு மேற்பட்ட அதிரடிக் கடற் புலிகள்..தண்ணீருக்கு அடியில், பிராண வாயுச் சிலிண்டர்களோடும் ..முதுகில் தானியங்கிகளோடும் சில கிலோ மீட்டர்..தம் தலைகளைக் கூட, தூரத்தில் காவல் காத்து நிற்கும் கடற்படைக்கு காட்டாமல் அதிரடியாக அந்த முகாமை சென்று தாக்கி அழித்தார்கள்..இதுவே பூனகேரி இராணுவ முகாம் பிடிபடுவதற்கு போடப்பட்ட முதல் அத்திவாரம் ஆகும்..இல்லையென்றால்..ஆனை இறவு இராணுவ முகாம் உட்பட.. பல பகுதிகளில் இருந்த சிங்கள இராணுவத்தினரை சிங்களக் கடற்படை பூனகேரிக்கு நகர்த்தி, புலிகளின் தாக்குதலை முளையிலேயே கிள்ளியிருக்கும்..

….இதற்காகவே பல மாதங்கள் விசேட கடற் புலிகளின்..ஆண்கள்..பெண்கள் அடங்கிய குழு ஒன்று வடமராச்சிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது..கடற்புலிகள் அமைப்பு ஏற்படுத்தப் பட்டு இரு வருடங்களில் இந்த மாபெரும் தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தியது,என்பதுதான் இதன் சிறப்பு ஆகும்..
இவைகள் போர்க்கால.. புலிகளின் வரலாற்றில் முதன் முதலாக நிகழ்ந்த புதிய போரியல் பரிமாணங்கள் ஆகும்..என்
நினைவில் இருந்து என்றும் நீங்காத நினைவுகள் அவை..