அமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த தேசியத்தலைவர் 
திரு.பிரபாகரன் அவர்கள்!

விழிபிதுங்கி நிற்கும் இந்தியா

ஈழப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடானது சர்வதேச படைகள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையிட்டு குழப்பகரமான முடிவை எடுக்க வைக்கும் என 32 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் பிரபல சஞ்சிகையான நியூஸ் வீக் 32 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1986 இல் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பேட்டி எடுத்திருந்தது.

இந்தப் பேட்டியின் போது, அமெரிக்க சஞ்சிகைக்கு பதில் வழங்கிய தூரநோக்கு சிந்தனையாளனான தலைவர், இந்தியாவைப் பற்றி அப்போதே தெளிவாகக் கூறியிருந்தார்.

குறித்த சஞ்சிகை தலைவர் பிரபாகரனிடம் எவ்வளவு போர்வீரர்கள் இருக்கின்றனர் என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், அது ஒரு இரகசியமான விடயம் , அத்தோடு நீண்டகால கெரில்லா யுத்தத்தை தொடர்வதற்கான ஆட்பலமும் ஆயுத பலமும் வாய்ந்தவர்களாக நாம் இருக்கின்றோம் எனக் கூறி வியக்க வைத்துள்ளார். அதாவது சர்வதேச சஞ்சிகையே என இவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என புழுகாமல் அதையே இரகசியமாக வைத்திருந்திருக்கிறார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் ஏனைய கெரில்லா இயக்கங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று விளங்குவதற்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

“நமது கட்டுப்பாடும் நல்லொழுக்கமும், நாட்டுப்பற்றுமே அதற்கு காரணம்” என்று கூறி வாயடைக்க வைத்திருக்கிறார் பிரபாகரன்.

ஈழத்தில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் இனப் படுகொலை தொடர்பான தகவல்களை நன்கறிந்திருந்த நியூஸ்வீக், ஈழப் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, இனப்படுகொலையைத் தடுப்பதற்கு இந்திய இராணுவத்தை அழைப்பதற்கு நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா என்று இன்னொரு கேள்வியை தொடுத்தது.

இந்தக் கேள்விக்கு தூர நோக்கோடு பதில் கொடுத்த தலைவர் பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தலையீடு அவசியமில்லை.

உண்மையில் சொல்லப்போனால் இந்திய இராணுவத்தினது தலையீடானது ஏனைய சர்வதேசப் படைகள் சிறிலங்காவில் தலையிட்டு ஒரு குழப்பமான நிலையை உருவாக்கவே வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பேட்டி கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் பிரபாகரன் தனது 32வது வயதில் கொடுத்தது. இளம் போராட்ட வீரனாக, ஒரு அமைப்பின் தலைவனாக இருந்து கொண்டு, வளர்ந்து வரும் அமைப்பின் முதன்மையலானாக இருந்த பிரபாகரன், தூர நோக்கு சிந்தனையோடு பதில் அளித்திருக்கிறார்.

பல அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்தது ஈழம். ஆனால், தன்னுடைய மனவலிமையையும், தூர நோக்கு சிந்தனையையும் பிரபாகரன் அப்போதே நம்பியிருந்தார் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்.

குறிப்பாக, இலங்கையின் அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இருக்கும் இந்திய தேசம், தன்னை மீறி இலங்கை விடயத்தை எவரும் கையெலெடுப்பதை அது விரும்பவில்லை. இதனால் முழுமையாக தான் இலங்கை களத்தில் இறங்கி வேலை செய்யத் துணிந்தது.

இந்தியாவின் இந்த ஆதிக்கப் போட்டி, சீனா, பாகிஸ்தான், அமெரிக்க போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே போட்டி போட்டுக் கொண்டு இலங்கை விவகாரத்தை கையிலெடுக்க அத்தனை நாடுகளும் துணிந்தன.

இது தான் இறுதிக் கட்டப் போராட்டத்தில் மற்றைய நாடுகள் இலங்கை விவகாரத்தில் இவ்வளவு நெருக்கமான உதவிகளை மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு கொடுக்க காரணமாக இருந்தது.

2009ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்த நிகழ்வுகளை மிகத் தெளிவாக அப்போதே அதாவது 1986 இல் நியூஸ் வீக் சஞ்சிகையில் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டு பேசியிருப்பது அவரின் சிந்தனை தளத்தின் விருத்தி.

ஆனால், இந்திய தேசம் தன்னுடைய வெளியுறவுக் கொள்கை என்ற பேரில் இலங்கை விடயத்தில் மூக்கை நுழைத்து மூக்குடைந்து நிற்பதும் இன்னொரு பாடமாக இந்தியாவிற்கும் அமைந்திருக்கிறது.

ஒருவேளை தலைவர் பிரபாகரன் சொன்ன கருத்தை அன்று இந்தியா ஏற்று இருந்திருக்குமாயின், இன்று சீனாவின் ஆதிக்கத்திற்கு பயந்து கொள்ள வேண்டிய தேவையிருந்திருக்காது. அல்லது இந்தியாவைச் சுற்றி சீனா போடும் இரும்பு வேலியை தடுத்திருக்க முடிந்திருக்கும்.

“இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டால்” என்று தலைவர் சொன்னதன் பொருள், இலங்கை விவகாரத்திற்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் அரசியல் நலனுக்காக மட்டுமல்ல, இந்திய தேசத்தின் புறவழிச் சூழல் பாதுகாப்பிற்குமானது.

ஈழப் பிரச்சினையில் மூக்கை நுழைத்ததாலேயே, இன்று இந்தியாவிற்கு பெரும் தலைவலி ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம்.