அன்புள்ள அம்மாவுக்கு…!

அம்மா நான் இயக்கத்துக்கு போகிறேன். நீங்கள் அரசியல் பணிக்காக வரும் போராளிகளுக்கு உணவு சமைத்துக் கொடுங்கள் அவர்களுடன் இருந்து என தனது தாயின் அனுமதியுடன் விடுதலைக்கு புறப்பட, அந்த தாயவளும் மகனின் ஆசையை நிறைவேற்ற போராளிகளின் பாசறை அந்த தாயவள் வீடு ஆனது.

வன்னி முதல் தீவகம் வரை…………..

இப்படியான உணர்வலைகள் தாங்கிய மண்ணிலிருந்து தாய்க்கு மகன் எழுதும் உணர்வலைகள்……

ஜெயந்தன் படையணி போராளிகள்………

அன்பின் அம்மாவுக்கு!

தனுசியா மகேந்திரன் எழுதிய “கடைசியாய் ஒரு கவிக்கடிதம்” என்ற கவிதையில் இருந்து சிறு பகுதியை எழுதி தொடர்கிறேன். எனது மடலை……….

பத்து மாதம் சுமந்து
பாலுட்டிச் சீராட்டி
கண்விழித்து என்னைக் காத்தவளே
கடைசியாய் ஒரு கவிக்கடிதம் வரைகிறேன்
கவனமாய் பார்த்திடம்மா
அதன் படி நடந்திடம்மா

என்தாயே! ஏன்னைப் பெற்றவளே
என்னை நினைத்து ஒருபோதும்
கண் கலங்கிடாதீர்கள் – ஏனெனில்
தினமும் உங்களை – என்
மனக்கோவிலில் வைத்து
பூசிக்கின்றேன்.

ஏன்னைப் பெற்ற உங்களை
நேசித்தால் தான் – என்
தாய்மண்ணை நேசிக்கின்றேன்
ஆதலால்
முதல் வணக்கம் உங்களுக்கே……

அன்பின் அம்மா, உறவினர்கள் அறிவது நான் நலம் அதுபோல் தாங்களும் நலமாக வாழ என்றும் மாவீரர் துணை!

மேலும் அம்மா!

பல வருடத்தின் பின் வேறுவிதமான கள வாழ்விற்குள் இருந்து வரையும் மடல். உங்களை பார்த்து வந்த சக போராளிகளின் அன்பின் வருடலால் முதல் சில தருணங்களில் ஆறுதல் மடல்கள் சர்ந்தப்ப சூழ்நிலைக்கு அமைவாக வரைந்தேன்; ஆயினும், சில தவிர்க்க முடியாத தடங்களினால் தங்களிடம் கிடைக்கவில்லை. பின்பு சில பிரச்சினைகளும் எம்மை சூழ்ந்தமையால் எல்லாவற்றையும் தொடரமுடியாமல் தடைப்பட்டுவிட்டது.

நான் கடமை நிமிர்த்தம் மிக தொலைவில் உள்ளேன் என தாங்கள் அறிந்தீருப்பீர்கள். ஆனாலும் சிங்கள அரசின் விஷமத்தனமான பொய்ப் பிரச்சார செய்திகள் தாயக சக மக்களை போன்று தாங்களும் அறீந்திருப்பீர்கள் அது எல்லாம் உண்மையுமல்ல. நான் நன்றாகத்தான் உள்ளேன். எங்கள் சக போராளிகளின் பாசறையில் உங்களை பார்க்கும் போராளிகள் கவலையுடன் உங்கள் நிலை பற்றி விபரிப்பார்கள். நீங்கள் என்னைப் பற்றி விசாரிப்பதாகவும் கூறுவார்கள். தாயின் நிலை புரியாத பிள்ளை இல்லை நான். ஆயினும் தாய்ப் பாசம் தவிர்க்க முடியாது தான். ஆனால் இந்த நேரத்தில் என்னைப் பற்றி விசாரிக்க வேண்டாம். எமது தாயகத்தில் எத்தனை எத்தனையோ தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பி விட்டு இருக்கின்றார்கள். தாங்கள் தான் நான் போராட்டத்துக்கு இணைய முழு ஒத்துழைப்பு தந்தீர்கள். சிறு வயது முதல் நீங்கள் போதித்த வார்த்ததைகள் எந்தன் நெஞ்சத்தில் ஆழமாக இன்றும் நிறைந்துள்ளது. எங்களுக்கு முனைய போராளிகளாக இருந்தவர்கள் வீதியால் செல்லும்போதும் வீட்டை வருகின்ற போதும் அவர்களின் துப்பாக்கிக்கு கரத்தில் ஏந்திப் பார்த்து பூரிப்பு அடையும்போது உனக்கான தருணம் வரும் அப்போது இதை எடுத்து விளையாடு. நீ எந்த பட்டமும் பெற்று தரவேண்டாம், எனக்கு பெருமை நாட்டுக்காக என் பிள்ளைகள் போராடி மக்களுக்காக வாழ்ந்தாலே போதும் என்று நீங்கள் உரைத்த வார்த்தையின் ஆழங்கள் இன்றும்……….. தந்தையின் இறுதி மூச்சு கரைந்த கடலில் நின்றும் இன்றுவரைக்கும் ஒழுங்காக ஒரு பணி கூட முடிக்கவில்லை. இடையில் சில மாதங்களாக எனக்கு உடல் சுகையினமில்லாமல் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தேன். இப்போது சிறிது சீராகிவிட்டது. இன்னும் சில வாரத்தில் பணி தொடர்வேன். அன்றிலிருந்து தாங்கள் என்னை இறுதியாக பார்க்கவரும் பொழுதும் ஒரு வாக்கு கூறினீர்கள் “விலத்திற எண்ணம் இருக்கக் கூடாது. எந்தப் பணி தந்தாலும் சிறப்பாக செய்யனும்” அதை மனதில் வைத்துக் கொண்டுதான் செயல்ப்படுகிறேன் அம்மா.

சிறு பிராயத்தில் தந்தையை பாரதத்தின் அகங்காரம் கொன்று உங்கள் பூவையும் பொட்டையும் பறித்தது. சிறு பிராயத்திலே தந்தையை இழந்து விட்டோம். ஆனாலும் தனி ஆளாக நின்று எந்த கஸ்ரங்களும் எங்களுக்கு இல்லாமல், சில அதிகார வர்க்கத்தின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகி தங்கள் வயிற பட்டனி போட்டு எங்களுக்கு வயிறாற சோறு ஊட்டி, கூலி வேலைகள் செய்து உடலை வருத்தி எங்களை எவ்வளவோ எதிர்பார்ப்போட கடைசி காலத்தில் என் பிள்ளைகள் உழைச்சு பார்ப்பான்கள் என்று எங்கி எங்கி வளத்தீர்கள். ஆனால் காலம் வேறு விதமாக எதிர்பார்த்து அதற்கு ஏற்றால் போல் உங்களை நீங்கள் மாற்றி இறுதியில் பிள்ளைச் செல்வங்களும் ஒவ்வொன்றாக தேசத்துக்காக உதிர்ந்துபோன துயரும் – கவலையும் தங்களுக்கு இருக்கும் எனக்கும் கவலைதான். ஆனால் காலத்தின் கட்டாயமாக நாங்கள் என்றும் தலைவருக்குத் துணையாக இருந்து போராடி தமிழீழம் என்ற திருநாட்டை மலரவைக்க வேண்டும். அதற்காக எத்தைனயோ மாவீரர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளனர்கள். அவர்களை சுமந்தும் ஓர் தாயின் கருவறைதானே தாயே!!!

எங்கள் கட்டமைப்பின் வேலைத் திட்டங்களும் – சில வியத்தகு சாதனைகளும் அனுபவத்தின் வாயிலாகவே பிறக்கின்றன. அதற்கு ஏற்றால்போல் தங்கையும் இருந்தால் தம்பியும் போனான். படிப்பே கசந்தது அன்று ஆனால் இன்று என் நிலையோ உயர வைத்தது அண்ணனும், மாவீரர்களும்தான் அம்மா. ஏன்! மச்சாளைப் பாருங்கள் அம்மா. பாடசாலையில் கல்வி கற்க்கும் போது வந்தாள். இன்று மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறாள். அதே போல் கடமைகள் படையணி வேறாக இருப்பினும் யாவரும் போகும் திசை ஒன்றுதான் அனைவரது உழைப்பும் தமிழீழத்திற்காகத்தான். நான் சீராக கடமை செய்ய வேண்டும் என்றால் உங்கள் ஒத்துழைப்பு எனக்கு வேண்டும் அதைவிட உங்கள் உடல்நிலையில் சீராக இருந்தால் என்னை நான் விரும்பிய கடமை செய்ய முழு மனதுடன் சம்மதிப்பார்களா உங்கள் உடல்நிலை பாதிக்கப்படுமாயின் என்னை உடனே உங்களிடத்தில் தருவித்துக் கொள்வார்கள். தாங்கள் கோவில்கள் – தேவாலயங்கள் அனைத்துவிதமான பூஜைகளுக்காக சாப்பிடாமல் நோன்புகள் இருந்து வருத்தத்தைத் தேடிக்கொள்ளாமல், கவலைப்படாமல், யோசிக்காமல் இருக்கவும்.

மனதுக்கு கஸ்ரமாக இருந்தால் வீட்டின் முதல் வித்து விதைத்த முழங்காவில் துயிலுமில்ல கோவிலுக்கு சென்றுவாருங்கள். அல்லது சக போராளிகளுடன் கதையுங்கள். மழலைகளுடன் கதையுங்கள் அம்மா தேசத்தில் உங்கள் மனநிறைவுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. நீங்கள் எனக்கு என்றும் வேண்டும் அம்மா!!!! முதல் பக்கத்தில் இருந்தபோது தாயின் அருமை தெரியவில்லை இப்போது மிகத் தொலைவில் உள்ள போதுதான் தெரிகின்றது தாயின் அருமையும் தாய் மண்ணின் மகிமையும்.

சக சகோதர – சகோதரியின் மற்றும் உங்கள் அரவணைப்பில் வாழ்ந்த அனைவரின் வீரமரணச் செய்திகள் எனக்கும் அறிவிக்கப்பட்டது. தேசத்துக்காக என பார்க்கையில் அவர்களால் பெருமை எமக்கு. ஆயினும் வீராங்களை ஈன்ற தாயாகிய உங்களால் எனக்கு பெருமை. இதன்போது எனக்கு ஒரு தாயகப் பாடல் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. பாவலர் அறிவுமதியின் “ஒளி முகம் தோறும் புலி முகம்” எனும் இறுவட்டில் வெளியான பாடல் இதோ……

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை
என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை
இதை நீ மறக்காதே
தலைவர்க்கு துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மன்மதனாய் இறந்திட வேண்டும்.

அம்மா உன் பிள்ளை…..

விழத்தான் விழத்தான் பொறுப்பானா…..
சாகத்தான் சாகத்தான் மறுப்பானா….
தம்பியை போர்க்களம் அனுப்பி வையம்மா..
தங்கையும் போர்க்களம் அனுப்பி வையம்மா….

அம்மா உன் பிள்ளை…..

விழத்தான் ஆழத்தான் பொறுப்பானா…..
மானந்;தான் மடியத்தான் மறுப்பானா…..
தந்தையை போர்க்களம் அனுப்பி வையம்மா…
அன்னையே பெண்புலி நீயும் தானம்மா….

அம்மா உன் பிள்ளை…..

பால் கொடுத்த தாயே….!
பாசக் குடைவிரித்த தாயே…!
ஈழத்தாய் பிறக்க நானும் இரத்தப் பால்
கொடுத்தேன் தாயே!
ஈழத்தாய் பிறக்க நானும் இரத்தப் பால்
கொடுத்தேன் தாயே…!

என்ன அம்மா! பாட்டு படித்து முடித்து விட்டிர்களா? இந்த மடல் இவ்வளவு நாள் எழுதியதை விட வித்தியாசமான மடல். சக தோழனின் பிரிவின் துயர்களை கண்ணெதிரே பார்க்கையில் பகைமீதுதான் அம்மா கோபம். அதற்காக நாளை எங்கள் வாழ்வும் எப்படியோ…? என நாம் தீர்மானிக்க முடியாது. அதற்காக உயிரை நினைத்து ஓடி ஒழியவும் முடியாது. உங்கள் அனைவரையும் காணும் ஆசை இருந்தாலும், தேசத்து உறவுகளின் துயர் நிலை சுமைகளும், தலைநிமிர்ந்து தேசத்துக்காக அதன் குடிமகனாக நாட்டுக்கு கடமைகள் புரியும் ஓர் இல்டசிய பயணத்துடன் இணைந்த வாழ்வின் மன நிறைவுக்காக எழுதும் மடல் இது.

மச்சாளின் கணவர் வீரமரணம் அடைந்தார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. நீங்கள் உடன் இருப்பதாகவும் கூறினார்கள். அவளுக்கும் அவள் பிள்ளைக்கும் எப்போதும் துணையாக இருக்கவும் அம்மா! ஒரு மாவீரனின் பிள்ளை நாளைய உலகில் ஓர் உயர்வான சிகரத்தில் நிலாவை வளர்த்து எடுக்க வேண்டும்.

அம்மா “உயிரைப் பிழியும் உண்மைகள்” வெரித்தாஸ் தமிழ்பணியில் இடம் பெற்ற மடல்களில் 20.07.1999 அன்று ஒரு போராளி எழுதிய மடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது. இந்த மடலில் உள்ள கருத்து அனேகமாக பல போராளிகளும் இப்படித்தான் உள்ளார்கள். அதை விபரிக்கின்றேன்.

இரத்தமும் தசையும் ஒன்றாய் கலந்த சகதிக்குள் இன்று உரிமைக்காகப் போராடுகின்ற எம்மைப் போன்ற போராளிகளின் மனதில் நாம் உலகத்தாரால் புறக்கணிக்கப்கட்டவர்களல்ல….. எமக்குத் தோள் தர மனிதம் இன்னமும் வாழ்கிறது என்கின்ற மனநிலையை உங்களது தமிழ்ப்பணி ஏற்படுத்துகின்றது போராளியான பின்னரும் கூட எனது தாயார் சிற்றுண்டிப் பொதிகளை எனது கைகளில் திணித்து விட்டு முத்தமிட்டுக் கண்ணீர் மல்கப் பிரியும் வேளை எனது கண்கள் என் கட்டுப்பாட்டை இழக்கும் இனிமேல் என் அன்புத்தாயை நான் உயிருடன் பார்ப்பேனா? அல்லது எனது உயிரற்ற உடலையாவது அந்தத்தாய் காண்பாரா? இவை யாவும் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு என் மண்ணில் ஏராளமான உறவுகளை நான் உருவாக்கி விட்டேன். என்னில் என் மூன்று உறவுகளும் வைத்த அதே பாசத்தை என் மக்கள் இன்று செலுத்துகின்றனர். நிறைவடைகின்றேன். எனக்கு மட்டும் அன்று இன்று அனேகமான போராளிகளுக்கும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் எமது மக்களின் துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகிலே யாருமே இல்லை என்கிற உணர்வு இப்போது எம்மிடம் இல்லை.

காவலரணில் கண்விழித்துத் தாய் மண்ணைக் காக்கும் எம் ஒவ்வோரு போராளியின் கைகளிலும் உறுதியின் வெளிப்பாடுகள் மனதில் தன்னம்பிக்கை..

எம் தலைவர் குட்டிக்குட்டித் திருத்தி வளர்க்கும் சிறு குருவிக் கூட்டம் சண்டையில் மட்டும் புலிக்கூட்டம் மனித நேயத்தில் மனிதம் நிறைந்த கூட்டம்.

அம்மா அனைவரையும் சுகம் கேட்டதாகச் சொல்லவும். என்றும் அனைவரையும் மறக்கவில்லை அவர்களின் நினைவுடன்தான் என்றும் இருக்கிறேன்.

அம்மா உங்களை எத்தனை எத்தனையோ போராளிகள் தங்களை பெற்ற தாயைப் போல மதித்து தங்களை பார்த்தார்கள். தாங்களும் அவர்களுக்கு பணிவிடை செய்து பிள்ளைகளைப் போல் பார்த்தீர்கள். அதில் தங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும். ஆனால் அவர்களில் சில பேர் இன்று உயிருடன் இல்லை.. தங்கள் மனம் எவ்வளவு வேதனை அடையும் என நான் அறிவேன்.

ஆனால், அவர்கள் எப்போதும் இறப்பதில்லை. தங்களுடன் கூடவே இருக்கிறார்கள். ஒரு நாள் தங்கள் பிள்ளையாகிய எனக்கும் அந்த நிலை வரலாம். அதை நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நிலமாக இருக்கலாம். கடலாக இருக்கலாம். தாயகம் விட்டு என் அப்பன் இறுதி விடைகொண்ட தாயகம் தழுவிய அந்த கடற்பரப்பாக இருக்கலாம். என்றுமெ உங்கள் அருகில் தான் இருப்பேன்.

நீரடித்து நீரும் இங்கு விலகாது அம்மா நெஞ்சில் உந்தன் பாசம் என்று அகலாது அம்மா

எட்டி நின்று பார்ப்பதிலே பெருமையில்லை அம்மா
வெற்றி எங்கள் வீடு தேடி வருவதில்லை அம்மா
சுற்றிருக்கும் பகைவர் வாழ விடுவதில்லை அம்மா
நான் செத்து விழும் போதும் பாசம் விழுவதில்லை அம்மா

நீரடித்து……

வெற்றி மகளாய் வருவேன் பெருமைப் படு அம்மா
விழ்ந்து விட்டால் குழியினிலே நிரை விடு அம்மா
சுற்றி வந்து தீபம் ஒன்று ஏற்றி விடு அம்மா
சுழ்ந்திருக்கும் உறவைப் பார்த்து கவலை விடு அம்மா

நீரடித்து…

பெற்றவளை ஒரு கனமும் மறந்ததில்லை அம்மா
போர்க்களத்தில் மானம் என்றும் இறந்ததில்லை அம்மா
வெற்றியினை உனக்காக நான் தருவேன் அம்மா
விசுகின்ற காற்றாகி தாழ் பணிவேன் அம்மா
தாழ் பணிவேன் அம்மா….

நீரடித்து..

அம்மா தங்களை கஸ்ரப்படுத்துவதற்காக கூறவில்லை. தங்களால் முடிந்த வரைக்கும் போராளிகள் அனைவருக்கும் பணி செய்யவும். எங்கள் மண்ணிலே நடந்த வீர வரலாறுகள் மகன் களமாடி வீரமரணம் அடைய மகனின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்று களமாடிய வீரத்தாய் மட்டக்களப்பிலே நடந்த சம்பவம் இது. இன்னும் இன்னும் ஏராளம். விரக்குலம் பிறந்த எங்கள் மண்ணில் ஆயிரமாயிரம் வீர வரலாற்று சாதனைகள். பாதச் சுவடுகளாக பதிந்துள்ளது. அன்னியன் அதை அழிக்க நாம் சம்மதிப்பதா? தாயகப் பாடலான “புயலடித்த தேசம்” இறுவேட்டிலே ஒரு தாயின் பாடல் தான் ஞாபகம் வருகின்றது.

செந்தமிழ் துனியினிலே சிரிக்கும் வெண்ணிலவே
செவ்விழி கண்சிமிட்டி துள்ளிக்
குதிக்கும் பொன்மலரே
நான் நினைத்த தமிழீழம் வேண்டும் உனக்கு
நீ அதனை அரசாள வீரம் இருக்கு
அன்னை நினைத்ததை முடித்துக் காட்டடா.

செந்தமிழ் துளியிலே…….

வீரவேங்கை வளரனும்
போர்முரசு முழங்கனும் அன்னையின் ஆசை இது
வெற்றிகளைக் குவிக்கனும் விடுதலை கிடைக்னும்
பெற்றவள் தாகம் இது
உன்னையின்ற தமிழீழம் தனித்து ஆழனும்
உலகங்கள் முழுதும் நீ தலமை தாங்கனும்
அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா..

செந்தமிழ் துளியிலே……

சேர சோழ பாண்டியர்கள் மூவருமே உன் பாட்டன்
செல்லமே பிள்ளைக்கனி
மீண்டும் அந்த வரலாறு
உன்னாலே வரும் பாரு
உள்ளமே நெல்லிக்கனி
இரத்தத்தால் பொட்டு வைத்து சபதம் எடுத்திடு
யுத்தத்தாலே வெற்றி கண்டு அரசு அமைத்திடு
அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா..

செந்தமிழ் துளியிலே…

பூட்டிய பாதை திறக்கப்பட்டு தங்கள் வெகு விரைவில் ஊரின் வாசல் சென்று பழைய உறவுகளுடன் சந்தோசமாக வாழ்வீர்கள் என்றும் வெகுவிரைவில் தமிழீழம் மலரும்.

கடைசியாய் ஒர கவிக்கடிதத்திலிருந்து சிறு வரி…..

என் தாயே என் உறவுகளே!
தமிழனாய் பிறந்கவனுக்கு மூன்று மானமுண்டு.
தன்மானம்
தாய்மானம்
தாய்மண் மானம்
இவற்றை காப்பவன்தான் தமிழன் – ஆகவே
என் தாயே!
தாய்த் திருநாடே – என்
அன்பு முத்தத்தை பரிசாக்குகிறேன்
அத்தோடு
நான் எழுதும் இறுதி மடலாகலாம் இது.

தாயே! விடைபெறுகின்றேன்.

என்றும் உண்மையுடன்
மகன் (02.11.2008)

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”