அரசின் வரவு – செலவுத்திட்டம் தமிழ் மக்களுக்கு நன்மையே! சம்பந்தன், சுமந்திரன் தெரிவிப்பு

தமிழ்மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் அமைந்திருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்; அவர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை தயாரித்திருக்கிறது. அரசு முன்வைத்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் தமிழ்மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் வகையில் அமைந்திருக்கிறது எனவும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே அதன் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு முன்வைத்திருந்த யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.