அரசியல் சுனாமி –பி.மாணிக்கவாசகம்

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நெருக்கடிகள் உருவாகி ஒரு வாரமாகியும் நிலைமைகள் சீரடையவில்லை.

நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் பிரமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும், தெரிவிக்கப்பட்;டது. அதேவேளை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். ஐக்கிய தேசியகட்சி மறுசீரமைக்கப்படும் என்ற அறிவித்தல்களும் வெளிவந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் அளித்துள்ளதாகவும்கூட தகவல்கள் வெளிவந்;திருந்தன.

அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டு அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்கத்தின் நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி, ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளுடன் வெள்ளிக்கிழமை காலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டது.

ஊடகங்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறமாட்டாது என்ற அறிவித்தலும், அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுவிட்டது என்ற அறிவித்தல் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியிளர் அறிவித்துள்ளனர்.

உண்மையிலேயே, உள்ளுராட்சித் தேர்தலின் எதிர்பாராத முடிவுகளினால் நல்லாட்சி அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள் நசிந்து தவிக்க நேர்ந்திருக்கின்றது. ஒருபோதும் இல்லாத வகையில், இந்த நெருக்கடி சுனாமி பேரலையைப் போன்று பொங்கி எழுந்து தாக்கியிருக்கின்றது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழியறியாமல் அரச தலைவர்கள் இன்று தடுமாறி நிற்கின்றார்கள்.

உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியினால், மும்முனை அரசியல் நெருக்குதல்கள் மட்டுமல்லாமல், சட்டச் சிக்கல்களும்கூட இந்த அரசியல் நெருக்கடிகளில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன 239 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஆனால் நாட்டின் பிரதமரைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியினால் 42 சபைகளையே கைப்பற்ற முடிந்திருக்கின்றது. இது, கிட்டத்தட்ட பொதுஜன பெரமுனவிலும் பார்க்க ஆறு மடங்கு குறைவாகும். அரசின் பங்காளிக்கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக்; கட்சி, ஐக்கிய தேசிய கட்சியிலும் பார்க்க நான்கில் ஒரு பங்காகிய பத்து சபைகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத, பொது எதிரணியினராகிய பொதுஜன பெரமுனவிடம் அரசாங்கக் கட்சிகள் இரண்டும் அடைந்துள்ள படுதோல்வி, அரசியல் ரீதியாக அவமானத்தின் அடையாளம். ஏனெனில் எதேச்சதிகாரப் போக்குடன், குடும்ப அரசியலை வளர்த்து ஊழல்களின் உறைவிடமாகக் கருதப்பட்ட முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்கடித்து, நாட்டில் நல்லாட்சியை நிறுவிய தலைவர்களாகக் கருதப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் தூக்கி எறிந்துள்ளார்கள். இதனால், நாட்டு மக்களின் ஆதரவை இழந்து, அரசாங்கத்தை நடத்த முடியாத ஓர் இக்கட்டான நிலைமைக்குள் இந்தத் தலைவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கை, அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, சிங்கள மக்கள் ஆழமாக ஊறிப்போயுள்ள சிங்கள பௌத்த அரசியல் உளவியலுக்கு எதிரான போக்கை நல்லாட்சி அரசாங்கம் கடைப்பிடித்ததாகவும், அதனால் சிங்கள மக்களுக்கு அரசியல் ரீதியாக ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற அச்ச உணர்வும் இந்தத் தோல்விக்கு அடிப்படை காரணம் என்றும் தென்பகுதி அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது.

சிங்கள பௌத்த அரசியல் சிந்தனைக்கு முரணான வகையில் நல்லாட்சி அரசாங்கம், காரியங்களை முன்னெடுத்து வருவதாக இனவாதப் போக்கில் மகிந்த ராஜபக்ச அணியினர் முன்னெடுத்திருந்த தீவிரமான அரசியல் பிரசாரங்கள், சிங்கள மக்களை, அரசுக்கு எதிராக அணி திரள்வதற்குத் தூண்டியிருந்தது என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

குறிப்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நல்லாட்சி அரசாங்கம் நாட்டைத் துண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்ற, மகிந்த அணியினருடைய பிரசாரம் சிங்கள மக்களுடைய மனங்களில் ஆழமாகப் பாய்ந்திருந்தது. தேர்தலில் சிங்கள மக்கள் அரசாங்கத் தரப்பை புறந்தள்ளுவதற்கு இந்த மனமாற்றம் அடிப்படையாக அமைந்திருந்தது என்பது இன்னுமொரு கணிப்பாகும்.

ஆயினும் ஊழல்களுக்கு முடிவு கட்டி நல்லாட்சி புரிவதாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட ஆணைகளை நிறைவேற்றுவதில் கடைப்பிடிக்கப்பட்ட மந்த கதியிலான அரசியல் போக்கே இந்த அரசாங்கத்திற்கு வினையாக மாறியது என்பதே பொதுவான கருத்தாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்த அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ,தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற செய்தியை தமது வாக்களி;ப்பின் மூலம் மக்கள் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நாட்டு மக்களின் ஆதரவை இழந்து ஒரு பொழுதேனும் ஓர் அரசாங்கம் பதவியில் இருக்க முடியாது. இதனால்தான் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தூக்கி எறிந்த அதே மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். ஆயினும் அரசாங்கத்தை மாற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல என்பதை அவர், உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே அந்த அழைப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி தனது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர் துணியவில்லை.

திரிசங்கு நிலை

பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை அதன் காலம் முடிவடைவதற்கு முன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கலைத்துவிட முடியாது. ஓர் அரசாங்கத்தைக் கலைப்பதற்கென சட்ட விதிகளும் நடைமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. பதவியேற்று நான்கரை வருடங்கள் முடிவதற்கு முன்னர், பதவியில் உள்ள ஓர் அரசாங்கத்தைக் கலைக்க முடியாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மிக மிக அவசரமான மிகத் தீவிர நெருக்கடியான அரசியல் சூழல் ஒன்றின்போது, அரசாங்கத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதாக சூளுரைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இந்த அதிகாரத்திற்குக் குறுக்காக உள்ளது. இதனால் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தை – மக்களால் நிராகரிக்கப்பட்டு;ள்ள அரசாங்கத்தை, கலைக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தள்ளப்பட்டிருக்கின்றார்.

அரசாங்கத்தைக் கலைப்பதற்கு முன் பதவியில் உள்ள பிரதமரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு, பிரதமர் பதவியில் இருப்பவர் தானாகவே முன்வந்து தனது பதவியை இராஜிநாமா செய்வதன் மூலம் இத்தகைய பதவி நீக்கம் இடம்பெறலாமே தவிர, ஜனாதிபதி தன்னிஸ்;டத்திற்குப் பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. பிரதமர் தானே விரும்பி தனது பதவியைவிட்டு நீங்கினாலும், ஜனாதிபதி தன்னிச்சையாக மாத்திரம் அரசாங்கத்தைக் கலைத்துவிட முடியாது. அதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தல் அவசியம்.

இத்தகைய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறக்கூடிய சூழலும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இலகுவில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டார்கள். அதிலும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் பதவிக் காலமாகிய ஐந்து வருடங்களில் நான்கு வருடங்கள்; முழுமையாகப் பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால், அரைகுiயாக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித்தள்ளிவிட்டுச் செல்வதற்கு அவர்கள் முன்வரமாட்டார்கள்.

அத்துடன், பெர்துத் தேர்தல் ஒன்று நடக்குமானால், மீண்டும் தமது தொகுதியில் பிரதிநதியாகத் தெரிவு செய்யப்பட முடியாத அரசியல் சூழல் உள்ளவர்களும், இடை நடுவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் துணைபோகத் துணியமாட்டார்கள். இந்த நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று அரசாங்கத்தைக் கலைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே காணப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள இந்த அரசாங்கத்தில் இரு கட்சிகளும் இடையில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெருமனதோடு முன்வருவார்கள் என்று கூறுவதற்கில்லை. இந்த நிலையில் தேர்தலின் பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கொதிநிலையைத் தணித்து நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரிசங்கு நிலைமைக்கே தள்ளப்பட்டிருக்கின்றார்.

மறுபுறத்தில் மக்களிடம் மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரகட்சியினரதும், தனது சொந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களினதும் நம்பிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இழக்க நேர்ந்திருக்கின்றது. இதனால், பிரதமர் பதவிக்கே ஆபத்து உருவாகியிருக்கின்றது. அதிருப்தியாளர்கள் வெளிப்படையாகவே அவரைப் பதவி விலகுமாறு கோரும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமடைந்துள்ளது.

சர்வதேசத்தின் கரிசனை

அரசாங்கம் அத்திவாரத்திலேயே ஆட்டம் கண்டு, நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமையை சீர் செய்வதற்காக அதிரடியான பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்தது. இதனால்தான் பிரதமர், பதவியைத் துறந்து, வேறு ஒருவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகவே கேட்டிருந்தார். ஆயினும் பிரதமருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் இதனை விரும்பவில்லை. பிரதமரும் அதற்கு உடன்படவில்லை.

தேர்தல் முடிவுகள் நாட்டில் ஏற்படுத்தியிருந்த அரசியல் நெருக்கடி நிலை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் இராஜதந்திரிகள் மட்டத்தில் தீவிரமாக ஆராய்ந்திருக்கின்றன. அத்துடன் இரு நாடுகளினதும் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுக்கள் நடத்தியிருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை, உருவாக்குவதற்குப் பின்னணியில் இருந்து செயற்பட்டிருந்த சர்வதேசத்தையும்சுட, நாட்டையே புரட்டிப் போட்டுள்ள உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியடையச் செய்திருந்தது என்பதை இந்த சந்திப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது.

சீனா மற்றும் பாகிஸ்தான் சார்பு நிலையைக் கடைப்பிடித்திருந்த முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் போக்கை சர்வதேசம் விரும்பவில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் அரசியல் இலக்குக்கு அப்பால், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற போர்வையில், வெறுமனே ஓர் ஆயுதக் குழுவின் செயற்பாடாகக் கருதப்பட்ட, ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மகிந்த ராஜபக்சவுக்கு உறுதுணையாகச் செயற்பட்டிருந்தன. ஆயினும், யுத்த வெற்றியையே தனது உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியலுக்கான முதலீடாகப் பயன்படுத்தி, மகிந்த ராஜபக்ச, சீன பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட அரசியல் நல்லுறவை, குறி;ப்பாக பிராந்திய வல்லரசாகிய இந்தியா மற்றும் பூலோக பொலிஸ் என வர்ணிக்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை.

பிராந்திய இராணுவ, அரசியல், பொருளாதார நலன்களின் அடிப்படையில் இலங்கையில் தமது போக்கிற்கு ஆதரவான ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்த நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சக்தி பின்னணியில் இருந்து மிகுந்த கரிசனையோடு செயற்பட்டிருந்தன. ஆனால் உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து, ஜனாதிபதி மைதிதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைப் புறந்தள்ளியிருக்கின்றனர்.

இந்திய அமெரிக்க சார்புடைய அல்லது அந்த நாடுகள் உள்ளி;ட்ட சர்வதேசத்தின் நலன்களுக்கு ஆதரவான அரசாங்கமே இலங்கையில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் விருப்பத்தையும் நோக்கத்தையும், இலங்கை மக்கள் இதன் மூலம் நிராகரித்திருக்கின்றார்கள். சர்வதேசம் ஒன்று நினைக்க, இலங்கை மக்கள் வேறு ஒன்றை நாடியிருக்கின்றார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் பளிச்சென காட்டியிருக்கின்றன.

தேர்தல் முடிவுகளினால் அரசாங்கம் ஆட்டம் கண்டிருந்ததையடுத்து, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித்சிங் சாண்டு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் ஆகிய இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாகச் சந்தித்து, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்ற முயற்சிக்க வேண்டாம் என கோரியிருந்தனர். அத்துடன் தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் நிலைமையைப் போக்கி சுமுகமான நிலைமையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள்.

இடதுசாரி அணுகுமுறையையும் வளைந்து கொடுக்காத அரசியல் போக்கையும் கொண்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவில்லை என்பதை, ஜனாதிபதியுடனான இந்த வெளிநாட்டுத் தூதுவர்களின் இந்தச் சந்திப்பும் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் குறித்து காட்டியிருக்கின்றன.

புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழர் தரப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆயுதப் போராட்டமே, அரசியல் மற்றும் இராணுவ பொருளதார ரீதியாக, இலங்கையை சர்வதேச அரங்கில் கொண்டு சென்று நிறுத்தியிருந்தது. சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு, சர்வதேச அளவில் பொறுப்பு கூற வேண்டிய கட்டாய நிலைமைக்கும் இலங்கை அரசாங்கம் ஆளாகியிருந்தது.

இவ்வாறு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ள இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிங்கள தேசியவாதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தற்போதைய அரசியல் நெருக்கடிகளிலும் சர்வதேசம் தலையீடு செய்துள்ளது என கூறியுள்ள அவர்கள் இது இந்த நாட்டின் இறைமைக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இது எந்த அளவுக்கு உண்மையானது. சரியானது என்பது விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உரியது.

ஆயினும், உள்ளுராட்சித் தேர்தலினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளைத் தணித்து, இயல்பு நிலையை உருவாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். ஒருவார காலமாக நீடித்துள்ள இந்த நெருக்கடிகளைச் சீர் செய்வதற்கு, கட்சி ரீதியான அரசியல் நலன்கள், தனிப்பட்ட நலன்கள் என்பவற்றுக்கு அப்பால் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஒட்டு மொத்த நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அனைவரும் பொறுப்போடு செயற்பட முன்வர வேண்டியது அவசியமாகும்.

– பி.மாணிக்கவாசகம் –