“இசைப்பிரியா” தமிழ்ப் பெண்களின் அடையாளம்…!
பீனிக்ஸ் பறவையாக மீண்டெழ வைக்கும் எங்கள் விடுதலைப் பறவை…!

இசைப்பிரியா..!
ஈழ தேசத்தின் ஒளி விளக்கு. அவள் எங்கள் பிள்ளை. அவளை இழந்து தவிக்கின்ற ஈழத் தமிழ் மக்களின் வேதனைகள் இந்த உலகத்தை சுட்டெரிக்கப்போகின்றன.

இசைப்பிரியாவைக் குதறிக் கொன்று அவளின் கதையை முடித்துவிட்டதாக சிங்களம் கொக்கரித்துக்கொண்டது. ஆனால், அவள் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்பெற்றுவிட்டாள்.
எரிந்த சாம்பலில் இருந்து அவள் பிறப்பெடுத்துவிட்டாள். அவள்தான் எமது விடுதலையின் அடுத்த கட்டத்தை நகர்த்திச் செல்லும் கருப்பொருள். ஈழத் தமிழரை என்றுமே பிரியாதவளாகிவிட்ட இசைப்பிரியாவுக்காக உலகிலுள்ள மக்கள் குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களின் கேள்விகளுக்கு சர்வதேசம் பதில் கூறியே ஆகவேண்டும்.

இசைப்பிரியாவின் இருதயத்தில் ஓட்டை என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால், அவள் எங்கள் அனைவரின் இருதயத்திலும் புகுந்துவிட்டாள் என்றால் மருத்துவத்தில் பெரும் சந்தேகம் தோன்றுகின்றது. ஏனெனில் ஓட்டை இருப்பது அவளின் இருதயத்தில் அல்ல. எங்கள் இருதயத்தில்தான். எங்கள் இருதயத்தில் ஓட்டை இருந்தால்தான் அவள் இலகுவாக எங்களுக்குள் ஊடுருவ முடிந்தது. அண்ணன் சொல்வது போல அவள் ஒரு அற்புதப் பிறவி. அவள் தமிழ் மக்களுக்காக புறப்பட்டு தமிழ் மக்களுக்காகவே இரையாகிய ஒரு அற்புதப்பிறவி.

இசைப்பிரியா யாரை நம்பி சிறீலங்கா படையினரிடம் சரணடைந்தாள்? அவள் மட்டுமல்ல, தமிழீழ அரசியல்துறையின் பிற்காலப் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், உள்ளிட்ட புலிகளின் பொறுப்பாளர்கள், போராளிகள், தேசியப் பற்றாளர்கள் அனைவரும் யாரை நம்பி படையினரிடம் சரணடைந்தார்கள்? அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களைக் காப்பாற்றும் என்று நம்பித்தானே சென்றார்கள். இதைவிட போர்முனையில் நின்ற சிறீலங்கா படையினர் ஒலிபெருக்கியில் எவ்வாறு அறிவித்தார்கள்? போராட்டம் நிறைவுக்கு வந்துவிட்டது. உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். உங்கள் பாதுகாப்பை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்துகின்றன. நீங்கள் சரணடையுங்கள் என்றுதானே கூறினார்கள்.

ஆனால், பெண்களை கொடூரமாகப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது. ஆண்களை கட்டிப் போட்டுச் சுட்டுத்தள்ளியது. இதுதான் சிறீலங்கா படையினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு. இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களுடன் அண்மையில் வெளிவந்த காணொளியைப் பார்வையிட்ட ஈழத் தமிழ் மக்கள் கதறி அழுகிறார்கள். அந்தப் பெண் என்ன பாடுபட்டிருப்பாள் என்று ஏங்கித் துடிக்கிறார்கள். உலகத்திலுள்ள மனிதாபிமானம் மிக்க அனைவரும் கவலையை வெளியிடுகின்றார்கள்.
ஆனால் உலகத்தைக் காக்கவென்று தோன்றிய ஐ.நா சபை லாயக்கற்று இருக்கின்றது. ஐ.நாவிலுள்ள பிசாசுகள் எங்களை எட்டி உதைக்கிறார்கள். ஈழத்தமிழர் விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்குமாறு பான் கீ மூன் மகிந்தவிடம் பணம் பெற்றாரா என்ற கேள்வியே இப்போது எழுந்திருக்கின்றது. இசைப்பிரியா விடயத்தில் சர்வதேச ரீதியாக உள்ள மனித உரிமை அமைப்புகளும் இன்னும் அக்கறை எடுக்கவில்லை. உலகத்தில் எந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் துள்ளிக்குதிக்கின்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த விடயத்தில் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இந்த மனித உரிமை அமைப்புகளின் அதிகாரிகள் மகிந்தவிடம் எவ்வளவு ரூபா பணம் வாங்கிவிட்டு இத்தனை அமைதியாக இருக்கின்றார்கள்.
இசைப்பிரியா கொல்லப்பட்ட விடயம் உலக நாடுகளை எட்டியிருக்கின்றது. இசைப்பிரியாவுடன் சேர்ந்து எங்கள் எத்தனையோ உறவுகள் கொல்லபட்ட விடயத்தை அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால், சர்வதேசப் பொலிஸ்காரன் என்று தன்னை வர்ணித்துக்கொண்டிருக்கின் அமெரிக்காவுக்கு இது தெரியவில்லை.

உலகுக்கு பாடம் சொல்வதாக நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒபாமாவுக்கு இது தெரியவில்லை. ஏனெனில் சிறீலங்காவில் எண்ணை வளம் இல்லை. இங்கு தனக்கு வருமானம் இல்லை. ஈராக், ஈரானிலும் எகிப்திலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவுக்கு தேவையான அனைத்தும் இருக்கின்றன. அந்த நாடுகளில் யாராவது நீதிக்கு மாறாக கொல்லப்பட்டால் மட்டும் சர்வதேச நாடுகளை திரட்டி ஒபாமா போராடுவார்.
ஆனால், இலங்கையில் தமிழ் மக்களின் தலைகள் மேலே சிங்களப் படைகள் எரிகுண்டுகளை வீசியபோது ஒபாமா அமைதியாக இருந்தார். எங்கள் பெண்கள் சிங்களப் படைகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்து பரிமாறினார். ஆனால், எங்கள் மனிதர்களில் அவருக்கு மனிதம் தெரியவில்லை.

இசைப்பிரியா ஒரு அப்பாவிப் பெண். அவள் நம்பிக்கையுடன் சரணடைந்தாள். புலிகள் இயக்கத்தில் கூட அவள் ஆயுதம் தாங்கி சமராடவில்லை. கலைத்துறையில் இருந்தவள். அவள் போரில் சரணடைந்திருந்தாள். சரணடைந்தவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று யுத்த விதி இருக்கின்றது. ஆனால், சிறீலங்கா படையினர் அந்த விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே வன்னியில் இறுதி நேரத்திலும் நின்ற ஊடகவியலாளர்கள் மக்களின் அழிவுகளை உலகுக்கு அம்பலப்படுத்திக்கொண்டிருந்தனர்.

வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்கள் உடனுக்குடன் சர்வதேசத்தால் பார்க்கக்கூடியவாறு ஏற்பாடுகளை ஊடகவியலாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், சர்வதேசம் அமைதியாக இருந்தது. இசைப்பிரியா தனியரு பெண்ணல்ல. அவள் தமிழ்ப் பெண்களின் அடையாளமாக மாறியிருக்கின்றாள். சிங்களப் படையினரின் கொடூரச் சித்திரவதைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறியிருக்கின்றாள். சிங்களப் படைகள் வன்னியில் பெண்களுக்கு எத்தனைய கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இசைப்பிரியாவின் காணொளி ஒன்றே சாட்சியமாக இருக்கின்றது.
ஆனால், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் எகிப்திலும் படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் நடந்தால் மட்டுமே ஒபாமாவுக்கும் அவரது நேச அணியினருக்கும் அது சர்வதேச விடயமாகத் தெரிகின்றது. ஆனால், ஈழத்தில் மகிந்தவும் அந்த அரக்கனின் படைகளும் அராஜகம் செய்தால் மட்டும் அவர்களுக்கு அது உள்நாட்டுப் பிரச்சினையாகத் தெரிகிறது. ஈழத் தமிழ் மக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இசைப்பிரியா என்ற ஈர்ப்பு சக்தி இன்று தமிழ் மக்களை தட்டியெழுப்பியிருக்கின்றது. உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களை இசைப்பிரியா இன்று விழித்தெழ வைத்துவிட்டாள். இனிமேல் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து நீதி கேட்கத் துணியவேண்டும். சிறீலங்கா அரசாங்கத்தையும் அதன் படைகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வரை எவருமே ஓயக்கூடாது. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அதுபோல் நாங்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டால் எமக்கு விடுதலை கிடைப்பது விரைவுபடுத்தப்படும்.

இனியும் உலகம் எங்களைத் திருப்பிப் பார்க்க மறுத்தால் எமது போராட்டம் வேறு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும். சிறீலங்கா அரசாங்கமும் மகிந்தவும் அதன் படைகளும் நேரிய திட்டமிடல்களும் தமிழின அழிப்பை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நாங்கள் திட்டமிடல்கள் அற்ற வகையில் செயற்படுவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது.
இசைப்பிரியாவின் இறுதிக் குமுறல் எங்கள் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டி
ருக்க வேண்டும். அவள் எங்களுக்கு சகோதரி, அவள் எங்கள் மகள், அவள் எங்கள் தங்கை, அவள் எங்கள் அன்புத் தோழி, எல்லாவற்றுக்கும் மேலாக அவள் எங்கள் விடுதலைப் பறவை. அந்தப் பறவையின் இறகை ஒடித்து, அதன் எலும்புகளை முறித்து, அதன் இரத்தத்தை உறுஞ்சி எடுத்தபின் அவளை சேற்றில் புதைத்தார்கள். பின்னர் வெள்ளைத் தோல் போர்த்தி மீட்டு வந்து மீண்டும் அவளின் இரத்தைத்தை உறுஞ்சிவிட்டு அவளை நசித்துக் கொன்றார்கள் பாவியர்கள். அவள் சாதாரண பறவை அல்ல. பீனிக்ஸ் பறவை என்பதை சிங்களம் அறிந்திருக்கவில்லை. அவளைக் கொன்று தின்று கதையை முடித்துவிட்டதாக ஏப்பமிட்ட சிங்களத்தின் சிந்தனையில் இன்று அவள் மீண்டும் வந்து இடியாக விழுந்துவிட்டாள்.

உண்மையில் எங்கள் இசைப்பிரியா பீனிக்ஸ் பறவைதான். இசைப்பிரியாவின் இசை இன்றும் எங்கள் காதுகளில் ஒலிக்கிறது. அவள் பேசிய பேச்சுக்கள், அவளின் கம்பீரக் குரல் இன்றும் எங்கள் உணர்வுகளை முறுக்கேற்றுகின்றன. அந்த இளம் பிஞ்சு நந்திக் கடலோரத்தில் சிந்திய கண்ணீரின் பலம் என்ன என்பதை இனித்தான் சிங்களம் உணரப்போகின்றது. தமிழர்களின் வீரத்துக்கு எதிர்நிற்க முடியாமல் திண்டாடிய சிங்களம் உலக நாடுகளை உசுப்பேற்றி அழைத்து வந்து இரசாயனத் தாக்குதல்களை நடத்தி தமிழினத்தை பொசுக்கியது.
ஆனால், நாங்கள் பொசுங்கிப் போகவில்லையென்பதை சிங்கம் விரைவில் உணரப்போகின்றது. தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை இனித்தான் உலகம் உணரப்போகின்றது.

-ராஜ் ஈழம்