இந்தியாவையும் – புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்த ஜே.ஆர். ஜெயவர்த்தன!- மு. திருநாவுக்கரசு

“இரண்டு புலிகள் சண்டையிடும் போது மலை உச்சியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிரு” [“When two tigers are fighting, sit on a hill and watch them”] அத்துடன் “எதிரியை எதிரியால் கையாளல்” என்றொரு இராஜதந்திர அணுகுமுறையும் உண்டு.

திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் ஏட்டில் இந்தியாவும், ஈழத் தமிழரும் அவரது பாரம்பரிய எதிரிகள். ஏதிரியை பழிவாங்குவதிலும், அவர்களைத் தலையெடுக்க முடியாதவாறு வீழ்த்துவதிலும் ஜெயவர்த்தன தனிச்சிறப்பு வாய்ந்த திறமையுள்ளவர்.

ஜே.ஆர். திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவர் நேரடியாகப் பழிவாங்கினார். உயிருடன் வாழும்வரை சிறிமாவோவை தலையெடுக்க முடியாதவாறு வீழ்த்தினார். மேலும் சிறிமாவோவின் மூளையாக விளங்கிய அவரது உறவினரான திரு. பீலிஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்து வாழ்நாள் முழுவதும் அவரைத் தலையெடுக்க முடியாதவாறு ஜெயவர்த்தன செய்தார். ஜெயவர்த்தனவால் வீழ்த்த முடியாது போன அவரது முக்கிய எதிரி திரு. ரணசிங்க பிரேமதாச மட்டும்தான்.

இந்தியாவால் புலிகளைக் கையாள்வது, புலிகளால் இந்தியாவைக் கையாள்வது என்ற அடிப்படையில் தனது இரண்டு பாரம்பரிய எதிரிகளையும் மோதவிட்டு இறுதியில் இருதரப்பையும் வீழ்த்துவதில் ஜெயவர்த்தன வெற்றிகண்டார்.

சிறிபெரும்பூத்தூரிலும், முள்ளிவாய்க்காலிலும் ஜே.ஆரின் இலக்குகள் வெற்றி பெற்றன. ஜெவர்த்தன நகர்த்திய அரசியல் வியூகங்களின் இறுதி விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழரும் மேற்படி இருபுள்ளிகளின் சுழற்சியில் அதல பாதாளமான தோல்விகளைச் சந்தித்தனர்.

கடந்த மூன்று பத்தாண்டுகளுக்கு மேலான கால இலங்கை அரசியலில் சிங்கள – பௌத்த மேலாதிக்க அரசியல் இலங்கையில் நிலைநாட்டப்பட்டுவிட்டதுடன் இந்தியாவை மீறி முன்னெப்பொழுதும் இல்லாதளவு அந்நிய சக்திகள் இலங்கையில் தலையெடுத்தும்விட்டன. கடந்த மூன்று பத்தாண்டுகால அரசியலின் விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழ்த் தரப்பும் தமக்குரிய அரசியல் பரப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு இலங்கை அரசிடம் பறிகொடுத்துவிட்டன.

இந்த அரசியல் சதுரங்கத்தின் பிரதான மூலகர்த்தாவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமைந்தார். அவர் வகுத்த அரசியல் பாதையும், பயணமுமே இன்றுவரையான இலங்கையின் அரசியல் போக்குக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழருக்கு பிரச்சனைகள் உண்டு என்றும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்றும் அதற்கான அரசியல் தீர்வு வேண்டுமென்றும் இந்தியாவும் கூறுகிறது, சிங்களத் தலைவர்களும் கூறுகின்றனர், சர்வதேச சமூகமும் கூறுகின்றது. ஆனால் அவர்களுக்கான நீதியான தீர்வை யாராலும் எட்டமுடியவில்லை.

“தமிழருக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் பாரபட்சங்கள் எந்தவகையிலும் சரியானதாகவோ, நீதிக்கு உட்பட்டதாகவோ அமையமுடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தைத் தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாக மேற்படி பாரபட்சங்களுக்கு தொடர்ச்சியாக தமிழர்கள் உட்பட்டு வருகிறார்கள்” என்று ஜே.என்.தீட்சித் Assignment Colombo என்ற தனது நூலில்; எழுதியுள்ளார் {பக்.330}.

அத்துடன் தமிழர் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஓர் அலகாகக் கொண்ட அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதை ஜெயவர்த்தன தன்னிடம் ஒப்புக்கொண்டதாக மேலும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் {பக்.49}. மேலும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு (கூட்டாட்சி) சமஷ்டி முறையிலான தீர்வே அவசியம் என்று 1995ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி த சண்டே லீடர் பத்திரிகைக்கான நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் இத்தகைய சமஷ்டி முறையிலான தீர்வே அவசியமானது என்று 1926ஆம் ஆண்டு திரு. எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் கூறியிருந்தார்.

ஆனால் நடைமுறையில் சிங்கள அரசியல் வேறுவிதமாக அமைந்தது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு மகாவம்ச கருத்துருவாக்கத்தின் படி தமிழர்கள் மிருகத்தைவிடவும் கீழானவர்களாக மதிக்கப்பட்டு, மிருகத்தைக் கொல்வது பாவமேயாயினும் தமிழரைக் கொல்வது பாவமில்லை என்ற எண்ணப்பாங்கு பௌத்த குருமார் மன்னன் துட்டகாமினிக்கு போதனை செய்வது போன்ற பகுதிக்கூடாக மகாவம்சத்தில் வெளிப்படுகிறது.

எப்படியோ பண்டைய மகாவம்ச சிந்தனையின் அடிப்படையில் தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பன ஒன்றுகலந்த அரசியல் கலாச்சாரம் இலங்கையின் நவீன அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்கான ஆழமான புவிசார் அரசியல் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் இலங்கையின் இனப்பிரச்சனையை ஒருபோதும் அணுகமுடியாது.

நவீன வரலாற்றுச் சிந்தனையின்படி ஈழத் தமிழர்களும், சிங்கள பௌத்தர்களும் இலங்கைத்தீவின் இணை உரிமையாளர்கள் என்ற எண்ணப்பாங்கில் இருந்து அரசியலை மேற்கொள்ளாது ஈழத் தமிழரை இந்தியாவின் நீட்சியாகவும், படையெடுப்பாளர்களாகவும், அந்நியர்களாகவும் வடிவமைத்துள்ள இலங்கையின் அரசியல் சிந்தனையில் இனப்பிரச்சனைக்கு இலகுவான தீர்வைக்காண வாய்ப்பில்லை.

தமிழ் மக்களைப் பற்றியோ அவர்களின் உயிர்களைப் பற்றியோ அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ தனக்கு கவலையில்லை என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன லண்டன் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டியளித்து 12ஆம் நாள் தமிழருக்கு எதிரான 1983 கறுப்பு யூலை இனப்படுகொலை அரங்கேறியது.

இதனைக் கண்டு அப்போதைய இந்தியப் பிரதமராய் இருந்த திருமதி. இந்திரா காந்தி கொதிப்படைத்தார். இலங்கையில் நிகழ்வது இனப்படுகொலைதான் என்று ஓகஸ்ட் 16ஆம் தேதி இந்திய ராஜ்ஜிய சபாவில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

இந்திரா – பார்த்தசாரதி குழு (Indira – Parthasarathy team) இலங்கை விடயத்தில் இறுக்கமான, வலுவான தீர்மானங்களை எடுத்து நகர்ந்தது. அது பனிப் போர்க் காலம். ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். இதனால் பாகிஸ்தான் மேற்குலத்தினதும், மத்திய கிழக்கு நாடுகளினதும் ஆதரவுடன் அதிக அனுகூலங்களைப் பெற்று வேகமாக வளர்ச்சியடைந்த காலமுமதுவேயாகும்.

இவ்வேளையில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன மேற்குலகுடனும், பாகிஸ்தானுடனும் கைகோர்த்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலான வகையில் இலங்கையை பெரிதும் இராணுவ மயப்படுத்திக் கொண்டிருந்தார். இப்பின்னணியிற்தான் இந்திரா – பார்த்தசாரதி குழு ஈழத் தமிழர் விடயத்தில் அதிக முனைப்புடன் செயற்படத் தொடங்கியது. இந்தியாவின் ஆதரவை வேண்டி நின்ற சோவியத் யூனியன் இலங்கை விவகாரத்தில் இந்தியாவிற்கு பெரிதும் ஆதரவாக செயற்பட்டது. குறிப்பாக தமிழக அரசும், தமிழ் நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திராகாந்தி அரசாங்கத்திற்கு முற்றிலும் ஆதரவாகச் செயற்பட்டனர்.

இலங்கை அரசின் தீவிர இராணுவ முனைப்புக் கொண்ட செயற்பாடுகளின் பின்னணியில் இந்திய அரசானது துருக்கி – சைப்பிரஸ் பாணியிலான தீர்வு ஒன்றை இலங்கையில் ஏற்படுத்தக்கூடும் என்ற ஊகங்கள் அரசியல் அரங்கில் பேசப்பட்டன. இந்திரா – பார்த்தசாரதிக் குழு மிக முனைப்பான, இறுக்கமான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு தமிழீழ ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கு இராணுவ அர்த்தத்தில் ஆதரவு அளித்தது.

இதனால் இந்திரா காந்தி அரசாங்கம் மேற்படி துருக்கி – சைப்ரஸ் பாணி தீர்வு ஒன்றிற்கோ அல்லது அதை ஒத்த வகையிலான இராணுவத் தீர்வு ஒன்றிற்கோ போய்விடக்கூடும் என்ற அச்சம் ஜெயவர்த்தன அரசாங்கத்திடம் இருந்திருக்கிறது.

அதலாற்தான் இந்திரா காந்தி பற்றி ஜெயவர்த்தன பின்நாட்களில் பின்வருமாறு தீட்சித்திடம் கூறியுள்ளார்.

“திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தொடர்ந்து பதவியில் நீடித்திருந்திருந்தால் 1985ஆம் ஆண்டு வாக்கில் அவர் இலங்கையை இரண்டாக உடைத்திந்திருக்கக் கூடும்” என்று தன்னிடம் அடிக்கடி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தன் ஊகத்தை தெரிவித்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த திரு.ஜே.என். தீட்சித் மேற்படி தனது நூலில் எழுதியுள்ளார். [“Had Mrs. Gandhi continued in power she would have broken up Sri Lanka into two by 1985.” Pg.306].

தமிழ் மக்களுக்கான நீதியின் பேரால் உள்நாட்டிலும், சோவியத் மற்றும் கியூபா உட்பட்ட தோழமை நாடுகளிலும் பொதுவாக சர்வதேச அரங்கிலும் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு பலம் அதிகரித்தது. இலங்கை மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க பலம் இவ்வகையில் இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு இருந்தது.

எப்படியோ இக்காலகட்டத்தில் 1984 ஒக்டோபர் மாதம் அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். இந்திரா காந்தியின் மரணம் ஜெயவர்த்தனவிற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.

அதன் பின்னர் ‘திரு. ராஜீவ் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய தொடக்கமானது கடந்த கால நெருக்கடிகளையும், பரஸ்பர சந்தேகங்களையும் நீக்கிவிடும” என்று புதிய இந்தியப் பிரதமர் தொடர்பான தனது நம்பிக்கையை தீட்சித்திடம் ஜெயவர்த்தன தெரிவித்தார் {பக்.6}.

இப்போது இந்தியாவிற்கு புதிய வெளியுறவுச் செயலாளராக ரமேஸ் பண்டாரி பதிவியில் அமர்ந்திருந்தார். இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களும் கூடவே குழப்பங்களும் ஏற்பட்டன. இவற்றை முதலீடாகக் கொண்டு தனது அரசியல் இராஜதந்திர சித்து விளையாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார்.

“இந்திராகாந்தி, ஜி. பார்த்தசாரதி கால மனப்பாங்கின் படி (Mind set) நான் நிச்சயம் செயற்படக்கூடாது” என்று இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்த திரு. ரமேஸ் பண்டாரி தன்னை எச்சரித்ததாக தீட்சித் எழுதியிருக்கிறார். {பக்.42}.

இந்திரா காந்தி வகித்த தமிழர் சார்பு கொள்கைக்குப் பதிலாக தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையேயான பிரச்சனையில் இருதரப்பினருக்கும் இடையே பாரபட்சமின்மையையும், சமநிலையையும் பேண வேண்டுமென்ற கொள்கை மாற்றம் ராஜீவ் காந்தியால் மேற்கொள்ளப்பட்டதாக தீட்சித் மேற்படி நூலில் தெரிவித்துள்ளார். {பக்.3}.

மேலும் ராஜீவ் காந்தி தன்னிடம் அறிவுறுத்தியதாக அவர் எழுதுகையில் “1985ஆம் ஆண்டுவரை இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தமிழ்நாட்டு அரசியற் செல்வாக்கிற்கும் இன – மத எண்ணங்களுக்குமான சொல்வாக்கிற்கும் உட்பட்டிருந்தது.

ஆனால் இனிமேல் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இந்தியாவின் கேந்திர நலன்களுக்கும் அமைவாக இந்திய கொள்கை வகுப்பு அமைய வேண்டும் என்பதுடன் சிறிய அயல்நாட்டின் ஐக்கியத்திற்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் விளைவிக்காத வகையிலான கோட்பாட்டு நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியதாக எழுதியிருக்கிறார். {பக்.4}.

இதையொட்டி “இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடானது முக்கியமாக இந்திய நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு சார்ந்ததாக அமையக்கூடாது” என்று இந்தியாவின் கொள்கை மாற்றம் பற்றி இந்திய வெளியுறவுச் செயலர் திரு.ரமேஸ் பண்டாரி தன்னிடம் கூறியதாகவும் விபரித்துள்ளார். {பக்.331}.

1984 ஆண்டின் பிற்பகுதிக்கும், 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களும், குழப்பங்களும், அலைமோதல்களும் தொடர்ச்சியாக ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்களையும், குழப்பங்களையும் தனது முதலீடாகக் கொண்டு ஜே.ஆர்.ஜெவர்த்தன தனது அரசியல் இராஜதந்திர வியூகத்தை கனகச்சிதமாக நகர்த்தினார்.

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்பு அவருடன் கூட இருந்தவரும், அவரது கொள்கையின் மூளையாக காணப்பட்டவருமான ஜி.பார்த்தசாரதியை அரங்கில் இருந்து அகற்ற வேண்டுமென்பது அவரது முதலாவது இலக்காக இருந்தது.

அதன்படி தமிழரான ஜி.பார்த்தசாரதியை முன்னிறுத்தி பேச்சுவார்த்தைகள் நடத்துமிடத்து சிங்கள மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்று கூறி அவரை அதிலிருந்து விலக்கினாற்தான் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்ற நிலைப்பாட்டின்படி பார்த்தசாரதியை அரங்கில் இருந்து அகற்றுவதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றிபெற்றார்.

ஆயினும் 1985ஆம் ஆண்டிலிருந்து 1987 நடுப்பகுதிவரை எந்தவிதமான முன்னேற்றத்தையும் இந்தியாவால் காணமுடியாது போனது. இந்தியாவை தான் நினைத்தவாறு அங்கிங்காய் பல பேச்சுவார்த்தைகளின் நிமித்தம் கொழும்பு, டெல்லி, திம்பு, பெங்களுர் என அலைமோத வைப்பதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன முற்றிலும் அரசியல் தீர்வற்ற ஓர் இராணுவத் தீர்வையே விரும்பினார். இந்திரா – பார்த்தசாரதி குழு அல்லாத இந்திய ஆளும் குழாம் இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டாது என்று அவர் நம்பியிருக்க முடியும்.

தனது இராணுவத்தை பலப்படுத்தும் வரை அரசியல் தீர்வு அதற்கான பேச்சுவார்த்தைகள் என்ற நாடகத்தை அவர் ஆடினார் என்று நம்ப இடமுண்டு. 1983 ஆம் ஆண்டு இருந்ததைவிட இலங்கையின் இராணுவத்தை லலித் அத்துலத்முதலி தலைமையில் மூன்றரை மடங்காக 1987ஆம் ஆண்டு அதிகரித்தார். அதாவது 12,000 துருப்புக்களைக் கொண்டிருந்த இராணுவம் 1987ஆம் ஆண்டு 40,000 துருப்புக்களாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு இலங்கை இராணுவத்தை பலப்படுத்திய நிலையில் “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் முழு அளவிலான இராணுவத் தீர்வை நோக்கிய இராணுவ நடவடிக்கையை 3 கட்டங்களாகத் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மேற்கொண்டார்.

இதில் முதலாவது கட்ட இராணுவ நடவடிக்கை யாழ்ப்பாணம் வடமராட்சியை மையமாகக் கொண்டு அமைந்தது. இந்த இராணுவ நடவடிக்கையின் போது மொத்தத்தில் வடமராட்சி பிரதேசம் பரந்தளவில் படுகொலைக்கு உள்ளானது. அப்போது வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்திருந்த நூலகத்தில் 82 தமிழ் இளைஞர்கள் அடைக்க்பபட்டு அனைவரும் கட்டடத்தோடு குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இப்பின்னணியிற்தான் விடுதலைப்புலிகள் முதன்முறையாக கரும்புலித் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். நெல்லியடியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது கரும்புலி மில்லரின் வெடிமருந்து நிரப்பிய வாகனம் நிகழ்த்திய தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மாண்டு போயினர்.

தாம் முற்றிலும் ஜே.ஆர்.ஜெவர்த்தனவால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்திய அரசு இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுக்க முற்பட்டது. மேற்படி இராணுவ நடவடிக்கையின் போது உணவு, உடை, மருத்துவ வசதியின்றி அகதிகளான தமிழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இந்திய அரசு செஞ்சிலுவை சங்கம் வாயிலாக நேரடியாக வழங்க முற்பட்டு அவை படகுகளில் அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானது.

அப்போது இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் எந்த படகையும் சுட்டு வீழ்த்துமாறு இலங்கை கடற்படைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன உத்தரவிட்டார். இந்நிலையிற்தான் இந்திய அரசு இராணுவ விமானங்களின் உதவியுடன் உணவுப் பொட்டலங்களை வான்வழியாக தமிழ்ப் பகுதியில் வீசியது. இவ்வாறு இந்திய அரசு கடும் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையைக் கண்டு அச்சமடைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவுடன் சமரசம் செய்ய தயாரானார்.

அதன் படி இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. இவ்வொப்பந்தம் கையெழுத்தாகும் போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்வருமாறு சிங்கள மக்களுக்கு அறிவித்தார். “தாக்க ஓங்கிய கரத்தை அணைக்கும் கரமாக மாற்றினேன்” என்று கூறியமை கவனத்திற்குரியது.

அத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஐ.தே.கவின் தலைமைச் செயலகமான சிறிகொதாவில் அக்கட்சியின் 1200 பொதுச்சபை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்வருமாறு அறிவித்தார். கையெழுத்திடவுள்ள இந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக “பிரபாகரனின் உறை வாளை சிறிகொதாவின் வாசலில் கட்டித் தொங்க விடுவேன்” {ஈழநாடு 28-7-1987} மேற்படி அவர் பேசியுள்ள இரு கூற்றுக்கள் மூலமும் இந்தியாவை அணைத்துக் கெடுப்பதும், புலிகளை இந்தியாவின் உதவி மூலம் இராணுவ ரீதியாக அழிப்பதும் அவரது பிரதான இலக்குக்களாக இருந்துள்ளன.

அவர் தான் குத்துச்சண்டை பயின்ற ஒருவன் என்றும் “மூக்கிற்கு கையை ஓங்கி அடிவயிற்றில் இடிப்பேன்” என்றும் கூறியிருந்த அவரது இன்னொரு கூற்றும் கவனத்திற்குரியது. இவ்வொப்பந்தத்தின் மூலம் அவர் சமாதானம் என்பதற்கான கையை உயர்த்திக் காட்டினாலும் அதன் மூலம் இந்தியாவையும், ஈழத் தமிழர்களையும் மோதவிடுவதற்கான இலக்கை பிரதானமாக ஜே.ஆர் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

இப்பின்னணியில் புலிகளின் படகு ஒன்று ஆயுதங்களுடன் தம்மால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசிடம் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ஒப்பந்தத்தின் படி ஒப்பந்த மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசை சார்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தீட்சித் இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் வேண்டினார். ஆனால் அனைவரையும் விசாரணைக்காக தாம் கொழும்பிற்குக் கொண்டுவரப் போவதாக இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பிடிவாதமாக நின்றார்.

இந்நிலையில் இராணுவ நடவடிக்கையின் மூலம் அவர்களை மீட்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதியிடம் தீட்சித் கோரினார். ஆனால் தமக்கு கட்டளையிடுவதற்கு தீட்சித் இராணுவ அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் எனவே அவரது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றும் தளபதி மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் இந்திய வெளியுறவுத் துறைக்கு ஊடாக பாதுகாப்புத் துறையை அணுகி தீர்மானம் எடுக்க கால அவகாசம் தேவைப்பட்டது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சந்தித்து மேற்படி கைதானோரை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் தாம் அவர்கள் மீது ஒப்பந்த மீறல் விசாரணை நடத்துவோம் என்றும் கூறினார். அதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கிடையில் லலித் அத்துலத்முதலி மேற்படி கைது செய்யப்பட்டோரை விமானத்தில் ஏற்றி கொழும்பிற்கு எடுத்துவர முற்பட்டபோது தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளிகள் சைனைட் வில்லைகளை உட்கொண்டு இறந்துவிட்டனர் என்ற செய்தியை தீட்சித்திடம் இந்திய இராணுவத்தினர் அறிவித்தது. இதனை மேற்கண்டவாறு தனது நூலில் தீட்சித் விபரமாக எழுதியுள்ளார். {பக்.210}.

இதுவிடயத்தில் தீட்சித் இதயசுத்தியுடன் உண்மையாகவே செயற்பட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவரை தெளிவாக ஏமாற்றியுள்ளார். தனது வேண்டுகோளை நிறைவேற்றாத இந்திய அமைதிப்படைத் தளபதி மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது வெளியுறவுத் துறைக்கு ஊடாக கையளித்த மனுவின் அடிப்படையில் அதற்குப் பொறுப்பான தளபதி Harkirat Singh இந்திய அமைதிப்படைக்கான பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அத்துடன் லலித் அத்துலத்முதலியின் மேற்படி செயலானது ஒப்பந்தத்தை நாசமாக்குவதற்கான செயல் என்பதையும் அந்நூலில் தீட்சித் பதிவு செய்யத் தவறவில்லை. அத்துடன் தீட்சித் ஓய்வு பெற்றபின் 1994 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் த சண்டேலீடர் என்ற வாராந்தப் பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் மேற்படி தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட போராளிகளின் விவகாரத்தில் லலித் அத்துலத் முதலியின் செயல் புலிகளை மனம் நோகவும், ஆத்திரமடையவும் செய்து அதன்மூலம் புலிகளை யுத்தத்திற்கு வர வழிவகுத்தார் என்றும் கூறியுள்ளார்.

தீட்சித் மேலும் இன்னொரு விடயத்தையும் கூறத்தவறவில்லை. அதாவது ‘இதைச் சொல்வதனால் இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து எனக்கு ஓரளவு அபகீர்த்தி ஏற்படக்கூடுமேயானாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து முதலில் பின்வாங்கல் மேற்கொள்ளப்பட்டது சிங்களத் தரப்பிலிருந்தே” என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுவிடயத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை உண்மைக்கு மாறானது. ஏனெனில் இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதியே பாதுகாப்பிற்கு பொறுப்பு என்பதும் அவரே முப்படைகளின் தளபதி என்பதும் திட்டவட்டமாக எழுதப்பட்டுள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் லலித் அத்துலத்முதலி தேசிய பாதுகாப்பு என்ற உட்பிரிவுக்குரியவராவார். ஆதலால் அது விடயத்தில் இறுதி கட்டளையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

மேலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் பிரேமதாசாவிற்கு எதிராக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஒருவராகவும் அவரது வாரிசாக உயர்த்தப்பட்ட ஒருவராகவும் காணப்பட்ட லலித் அத்துலத்முதலியைக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமையும், அதிகாரமும், வாய்ப்பும், உரிமையும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு உண்டு. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவரது நோக்கம் இந்தியாவையும் – புலிகளையும் மோதவிடுவதுதான்.

இவ்வொப்பந்தத்தில் தமிழ்த் தரப்பு திருப்தி அடைந்திருக்கவில்லை. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியும் இவ்வொப்பந்தத்தில் தமது திருப்பியின்மைகளைத் தெரிவித்திருந்தன. விடுதலைப் புலிகளால் இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியவில்லை. ஆயுதங்களை ஒப்படைக்க புலிகள் தயாராக இருக்கவில்லை.

கரும்புலி மில்லரின் பேராலும், அதுவரை வீரச்சாவடைந்த போராளிகளின் பேராலும், தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தின் பேரால் ஏனைய இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளின் பேராலும், அதுவரை மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் பேராலும் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்ற நிலை இயக்கத்திற்குள் பலமாக எழுந்திருந்தது. இந்த கொந்தளிப்பான நிலையிலும் இந்திய அரசின் வற்புறுத்தலுக்கு இணங்க இடைக்கால அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் அரை மனதுடன் ஒப்புக்கொண்டு ஒரு தொகுதி ஆயுதங்களை மட்டும் புலிகள் கையளித்தனர்.

அதேவேளை கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்காததனால் இந்திய அரசின் பக்கம் புலிகள் மீதான ஒரு கடுகடுப்பு நிலை காணப்பட்டது. இத்தகைய இருபக்க கொதிநிலையின் மத்தியில் இருதரப்பினரையும் மோதவிடுவது சாத்தியம் என்ற நிலையை உணர்ந்த இலங்கை அரசு தருணம் பார்த்து குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட போராளிகள் விவகாரத்தை அதற்கான தீப்பந்தமாக பயன்படுத்தி யுத்தத்தை மூட்டிவிட்டது.

மேற்படி விடுதலைப் புலிகள் போராளிகளை இந்திய அரசிடம் கையளிக்க மறுத்து இலங்கை அரசு கைது செய்து கொழும்பிற்கு எடுத்துச் செல்லுமிடத்து அது ஒப்பந்தத்தை குழப்பி யுத்தத்தை ஏற்படுத்திவிடக்கூடியதாய் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுந்தானே என்று பின்னாளில் லலித் அத்துலத்முதலியிடம் இலண்டனைச் சேர்ந்த புரூஸ் பாலிங் (Bruce Palling) என்ற பத்திரிகையாளர் கேட்ட போது அதற்கு லலித் அத்துலத்முதலி சற்றும் தாமதமின்றி “ஆம் அப்படித்தான், அப்படி அது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைச் செய்தேன்” என்று பதிலளித்தார்.

லலித் அத்துலத்முதலி கொல்லப்பட்ட அடுத்தவாரம் புரூஸ் பாலிங் இலண்டன் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் வந்த மேற்படி தகவலை கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை 2-5-1993 அன்று பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இந்தியாவையும், புலிகளையும் மோதவிடவேண்டும் என்பதில் திட்டமிட்டு இலங்கை அரச தரப்பு செயற்பட்டிருக்கிறது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இணைச் சூத்திரதாரி எனபதே உண்மை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழர்களுக்கான தீர்வைக்காண வேண்டும் என்ற விடயத்தில் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்றும், அவர் இருபொருள்படும் வகையில் செயற்பட்டார் என்றும், அவர் தீர்வு காண்பது போல் பாவனை செய்தார் என்றும் காலந்தாழ்த்தும் தந்திரத்தை பிரயோகித்தார் என்றும் பிரேமதாச, லலித் அத்துலத்முதலி போன்றோர்களின் எதிர்ப்பிற்கு எதிராக போதியளவு பலமான நடவடிக்கைகளில் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் தீட்சித் தனது நூலின் 307ஆம், 339ஆம் பக்கங்களில் எழுதியுள்ளார்.

மொத்தத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சர்களும் தீர்வை சீர்குலைப்பதற்காக திட்டமிட்ட வகையில் செயற்படடுள்ளனர் என்பதை காணமுடிகிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் ராஜீவ் காந்தி மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் சரிவரப் போவதில்லை என்றும் அவர் தனது தேவைக்கு ஏற்றவாறு ராஜீவ் காந்தியை மாட்டிவிட்டு இந்தியாவிற்கு பெரும் கஸ்டங்களை உருவாக்குவார் எனறும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பற்;றி சிறிமாவோ பண்டாரநாயக்க தன்னிடம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்ததாக தீட்சித் தனது நூலில் எழுதியுள்ளார். {பக்.310}.

2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் வன்னியில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டியிருந்த போது இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அம்மாநாட்டில் தலைவர் பிரபாகரனுக்குத் துணையாக இருந்த அவரது அரசியல் ஆலோசகர்; திரு. அன்ரன் பாலசிங்கம் தான் பிரபாகரனின் குரலாக பேசுவதாகக் கூறி அது “ஒரு பெருந்துயரம்” ( “A great tragedy”) என்று பதிலளித்தார்.

அவ்வாறு அது இந்தியா பக்கம் ஒரு பெருந்துயரமாக அமைந்தது போலவே ஈழத் தமிழர் பக்கம் முள்ளிவாய்க்கால் இன்னொரு பெருந்துயரமாய் அமைந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருட்டிவிட்ட பம்பரத்தில் இந்த துயரங்கள் அரங்கேறின.

புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய பகைமையை முதலீடாகக் கொண்டே ராஜபக்சவால் முள்ளிவாய்க்கால் துயரத்தை அரங்கேற்றி வெற்றிபெற முடிந்தது. இதன் மூலம் “பிரபாகரனின் உறை வாளை சிறிகொதாவில் கட்டித் தொங்கவிடுவேன்” என்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவு முள்ளிவாய்க்காலில் நனவானது.

1987ஆம் ஆண்டு வடமராட்சியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன – லலித்தால் தொடங்கப்பட்டு இந்திய தலையீட்டால் தடைப்பட்டுப் போன ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையை இந்தியாவிற்கும், புலிகளுக்கும் இடையேயான பகைமையின் பின்னணியில் 2009ஆம் ஆண்டு மகிந்த – கோத்தாபய சகோதரர்களால் முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு ஐ.தே.கவால் தொடங்கப்பட்டு சுதந்திரக்கட்சியால் முடிக்கப்பட்ட இனப்படுகொலையையும் அதனால் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டு ரீதியாகவும் ஏற்பட்ட விபரீதங்களையும் தாண்டி முன்னேற மேற்படி இருகட்சிகளும் சிறிசேன – ரணில் தலைமையில் முடிவெடுத்து அதன் மூலம் இனப்படுகொலையால் ஏற்பட்ட இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் பணியில் 2015ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மேற்படி “நல்லாட்சி அரசாங்கத்திற்கு” துணை போவதன் மூலம் “வீடு கொளுத்துகின்ற ராசாவிற்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கும மந்திரிகளின்“ வேலையைத் தமிழ்த் தலைவர்கள் புரிந்து வருகின்றனர். இதுவும் ஒரு பெருந்துயரந்தான்.

‘வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” அந்த வரலாற்றுக்கிழவி அழுகிய கூழ் முட்டைகளை குப்பைக்கூடைக்குள் தூக்கி வீசத் தவறமாட்டாது.

தனது நூலை எழுதி முடிக்கும் தருணத்தில் தீட்சித் தனது “அரசியல், இராஜதந்திர” குருவும், இந்திரா காந்தியின் பிரதம செயலாளராகவும் இருந்தவரான திரு. பி.என்.ஹக்ஸர் (P.N. Haksar) என்பவரிடம் பின்வருமாறு கேள்வியெழுப்பியிருந்தார்.

அதன்படி இலங்கை விவகாரத்தில் தலையிடுவதான கொள்கையை இந்திராகாந்தி பின்பற்றாதிருந்திருந்தால் மேற்படி துயரம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா என்பதாக அக்கேள்வி அமைந்தது.

அதற்கு ஹக்ஸர். சேக்ஸ்பியர் எழுதிய துன்பியல் எழுத்துக்களை எடுத்துக்காட்டி அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பிற்கால துயரங்களுக்கு மையமாய் அமைந்தனவா என்ற பதிற்கேள்வியை தீட்சித்திடம் கேட்டிருந்தார். தீட்சித் ஹக்ஸரின் கேள்விக்கான பதிலை எதிர்காலம்தான் கூறவேண்டும் என்று பதிலை எதிர்காலத்தின் கையில் விட்டுள்ளார் {பக்.xvii}. .

இதற்கான பதில் மிகவும் இலகுவானது. அதாவது இந்திரா – பாத்தசாரதி குழு மேற்கொண்ட இறுக்கமான கடும்போக்கிற்குரிய நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றியிருந்திருந்தால் இலங்கை அரசால் இந்தியாவை ஏமாற்றியிருக்கவும் முடியாது.

பிற்காலத்தில் ஏற்பட்டதான துயரங்கள் இந்திய தரப்பிற்கு மட்டுமல்ல தமிழ்த் தரப்பிற்கும் ஏற்பட்டிருக்காது. இனியும் இலங்கை ஆட்சியாளர்களின் ஏமாற்றும் வித்தைகளை மேற்படி இறுக்கமான, உறுதியான நடவடிக்கைள் இன்றி ஒருபோதும் கையாள முடியாது.

இலங்கைத் தீவில் தமிழர் பலவீனம் அடைந்துவிட்டால் இலங்கை அரசியலை இந்தியாவால் ஒருபோதும் கையாள முடியாது. அது அந்நியர்கள் இலங்கையில் குடிகொள்வதற்குரிய தெளிவான வாய்ப்புக்களை வழங்கும். இலங்கையில் பலமடையக்கூடிய அந்நிய சக்திகளின் அரசியல் இந்தியாவையும் இப்பிராந்தியத்தையும் முற்றிலும் அமைதியற்றதாக்கும்.

கடந்தகாலத்தில் ஏற்பட்ட தவறுகளை இந்தியத் தரப்பும், தமிழ்த் தரப்பும் இதயசுத்தியுடன் கணக்கில் எடுத்து புதிய பாதையை வகுத்தாக வேண்டும். கடந்தகால தவறுகளை கையில் ஏந்தி எதர்காலத்திற்கான பயணத்திற்கு அவற்றால் விலங்கிடுவது தவறு. தவறை இதயசுத்தியுடன் சரிசொய்து இருதரப்பும் இணைந்து முன்னேற வேண்டியதே வரலாற்றின் கட்டளையாகும்.