Fotor072412365921

தலைவர் பிரபாகரன் எழுதிய உருக்கமான கடிதம்…

இந்தியாவையும் இந்திய மக்களையும் பிரபாகரன் எவ்வாறு நேசிக்கிறார் என்பதற்கு அன்னை இந்திரா மறைவின்போது அவர் வெளியிட்ட அறிக்கையே சான்று பகருகிறது. அந்த அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்திலிருந்து வெளிவந்த உணர்ச்சியின் சிதறல்களாகவே காட்சி தருகின்றன. இந்திரா காந்தி மீது பிரபாகரன் அதியுயர் மதிப்பு வைத்திருந்தார். அவரின் மறைவையொட்டி ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் உருக்கமான கடிதத்தை அனுப்பி இருந்தார்.

அன்புடையீர்…!

அன்னை இந்திராகாந்தி கொடிய கொலைஞர்களால் அகால மரணமடைந்த செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த துயரமும் பேரதிர்ச்சியும் உற்றோம். மனித சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமான இக்கொலை பதகச் செயலை நாம் வன்மையாகக் கண்டனம் செய்கின்றோம். ஒடுக்கப்பட்ட மனித குலத்தின் ஒளிவிளக்காகவும் பாரத தேசத்தின் உன்னத ஆத்மாவாகவும் திகழ்ந்த ஒரு ஒப்பற்ற பெரும் தலைவரை நாம் இழந்து நிற்கிறோம். தங்கள் குடும்பமும் இந்திய மக்களும் உலகமும் இந்த ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் அடைந்திருக்கும் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.

திருமதி இந்திராகாந்தி உலக சமாதானத்திற்காகவும் மனித சுதந்திரத்திற்காகவும் அயராது போராடிய வீராங்கனையாவார். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் ஏகோபித்த குரலாகத் திகழ்ந்தார். தீர்க்கதரிசனத்தோடும் பூரண அர்ப்பணிப்போடும் பாரத தேசத்தை சோசலிசப் பாதையில் நிர்மாணம் செய்ய அயராது உழைத்தார். நவபாரதத்தின் சிற்பியாகத் திகழ்ந்தார். இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியத்தையும் அதன் பேராதிக்க சதி வலப்பின்னலையும் அவர் முழுமூச்சாக எதிர்த்து வந்தார். தேசங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உலகெங்கும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை அவர் முன்னின்று ஆதரித்து வந்தார்.,

அநாதரவான நிலையில் துயருறும் தமிழீழ மக்களின்பால் அன்னை இந்திராகாந்தி எப்போதுமே அனுதாபமும் அக்கறையும் காட்டி வந்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரித்து வருவதனை அவர் எப்போதுமே கண்டித்தார். தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்தியாக வேண்டும் என்று ஆரசியல் ராஜதந்திர வழிகளில் அவர் இலங்கை அரசை நிர்ப்பந்தித்தார்.

இந்தியாவின் நல்லெண்ண அனுசரணையின் கீழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்படக்ற்குத் தனிப்பட்ட முறையில் பெரும் அக்கறை செலுத்தினார். தமிழ் மக்களின் பெருங்காவலராகத் திகழ்ந்த அன்னை இந்திராவின் தனிப்பட்ட அக்கறை மட்டும் இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்து போயிருக்கும். தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மேக வலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார்.

தமிழ் மக்கள் இந்திராவை என்றும் அன்புடனும் நன்றியுடனும் பெரும் மதிப்புடனும் நினைவுகூர்வார்கள். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நீங்கள் எந்த உன்னத இலட்சியங்களுக்காக அன்னை இந்திராகாந்தி வாழ்ந்து போராடி இறந்தாரோ அந்த இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள் என்றே நாம் பூரண நம்பிக்கை கொன்டிருக்கின்றோம்,.

நீங்கள் வெற்றிபெற எமது நல்வாழ்த்துக்கள் என தனது கடிதத்தை முடித்திருந்தார் தலைவர் பிரபாகரன். இக்கடிதத்தில் தனது நெஞ்சத்தினை மட்டும் அவர் பிரதிபலிக்கவில்லை. தமிழீழ மக்களின் உள்ளார்ந்த உணர்வினையும் பிரபாகரன் சரியாக பிரதிபலித்தார். அன்னை இந்திராவின் மறைவு தமிழீழ மக்களை சொல்லவொணாத் துயரத்தில் மூழ்கடித்தது. 3 நாட்கள் தமீழத்தில் துக்கநாள் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் மருத்துவமனைமீது கறுப்புக்கொடியேற்ற முயன்ற இரண்டு விடுதலைப் புலிகளைச் சிங்கள இராணூவம் சுட்டு வீழ்த்தியது. அன்னை இந்திராவுக்காக விடுதலைப் புலிகள் இரத்தம் சிந்தி உயிரையும் தியாகம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவந்த தேசம்…

(www.eelamalar.com)