இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாள்…!  ” International Day of Persons with Disabilities” (December 3)

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு நேர்காணலில் ‘ தமிழீழம் கிடைத்த பிறகு என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு கூறிய பதில் ‘ ஆட்சியை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணிக்கு சென்று விடுவேன்’ என்றார்.

இந்த பதிலிலிருந்து அவரது நேர்மையையும் பண்பையும் மட்டுமல்ல போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் அவர்களை பாதுகாக்க வேண்டிய சமூக அக்கறையையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழீழ நடைமுறை அரசில் ” நவம் அறிவுக் கூடம் ” என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணி மட்டுமல்ல அவர்களை துறைசார் வல்லுனர்களாக வளர்த்தெடுக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

போரியல் கலையில் மட்டுமல்ல கலை, அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று பல துறை சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் திகழ்ந்தார்கள்.

தமிழீழத்தின் முதல் பெண் விமானி ஒரு மாற்றுத்திறனாளி என்பது பலருக்கு தெரியாத செய்தி.

ஆனால் இன்று மாற்றுத்திறனாளிகள் சிங்களத்தின் நுண்மையான இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அழிவின், தோல்வியின், அவலத்தின் குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். உடல் ரீதியாக சிதைந்து போன அவர்கள்; உளவியலும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது.

போருக்கு பின்னான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை என்ற வகைமைக்குள்தான் இந்த மாற்றுத்திறனாளிகளையும் நாம் பொருத்தி பார்க்க வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல. சமூகத்தின் அடையாளம் – அங்கம்.

எனவே இவர்களை மீட்டெடுப்பதில்தான் எமது அடையாளம் மட்டுமல்ல அரசியலும் தங்கியிருக்கிறது. இனஅழிப்புக்க்கு எதிரான நமது எதிர்வினையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இன்றைய நாளிலாவது இது குறித்து சிந்தித்து ஒரு செயற் திட்டத்தை வகுத்து கொள்வோம்.

(பரணி)