இரவோடு இரவாக 1200 போராளிகளைத் தரையிறக்கிய கடற்புலிகள்…! கேணல் சூசை வெளியிட்ட கருத்து…!

ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய தரையிறக்க யுத்தமாக வரலாற்றில் ஆழப்பதிந்துவிட்ட குடாரப்பு தரையிறக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போரிடும் யுக்திக்கான முகவரியாக பார்க்கப்படுகிறது.

கடல் தரை என ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தரையிறக்க நுட்பம் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்ட வரலாற்றிலே தவிர்க்கமுடியாத ஓர் கருப்பொருளாகிவிட்டது.

தரையிலே 1200க்கும் அதிகமான போராளிகளை கடலில் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பாதுகாப்பாக தரையிறக்கிய பெரும் பங்கு கடற்புலிகளைச் சாரும். இதுகுறித்து கடற்புலிகள் அணியின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் வழங்கிய அனுபவப் பகிர்வு ஆவணமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள் என்ற புத்தகம் சங்கர் என்பவரால் தொகுக்கப்பட்டு ஆனையிறவு மீட்புச் சமரின் மூன்றாவது வெற்றிவிழாவின்போது வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் குடாரப்பு தரையிறக்கத்தில் தொடங்கி சமாதான காலத்தில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டு யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் நுழைவது வரையிலான சகல அனுபவங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த புத்தகத்தில் இடம்பெற்ற கேணல் சூசை அவர்களின் அனுபவப் பகிர்வினை இங்கு தருகின்றோம்.

குடாநாட்டுக்கான தரைவழியான பாதை அமைப்பதற்கென எமது தேசியத்தலைவரின் திட்டப் படி ஆயிரக்கணக்கான போராளிகளையும் பல தொன் வெடிபொருட்களையும் கொண்டு செல்வதற்கான பணி எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. எமக்கு உதவியாக கேணல் கிட்டு பீரங்கிப்படை முதலானவையும் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் பங்குபற்றிய அனைவருமே தமது பங்கினை மிகச்சிறப்பாக வழங்கியிருந்தனர்.

கடலில் தற்காப்புச் சண்டையுடன் பக்குவமான தரையிறக்கமும் நடைபெற வேண்டும். தரையிறங்கிய அணிகளுக்கு உரிய விநயோகமும் தடங்கலின்றி நடைபெறவேண்டும்.

மார்ச் 26 ஆம் திகதி மாலை 7 மணியளவில் ஆரம்பித்த இந்த நடவடிக்கை 28 பிற்பகல் 4 மணி வரை தொடர்ந்தது. ஏழு சண்டைப்படகுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன. 9.30 மணியளவில் கடலில் சண்டை ஆரம்பமானதும் அச்சமயம் ஐந்து டோராக்கள் கடலில் நின்றன. அதேவேளை கடலும் சாதகமில்லாத நிலை. கடற்கொந்தளிப்பு கூடுதலாக இருந்தது. இரவு 3 மணியளவில் டோறாக்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் சண்டை அணிகளை முன்னே நகர்த்தி தரையிறக்கலைத் தாமதிக்கவேண்டியிருந்தது.

எமது தரப்பில் சண்டை ஆரம்பித்த பின்னர் 26 ஆம் திகதி இரு சண்டைப் படகுகளும் 27 ஆம் திகதி ஒரு படகும் சேதமாகின. 28 ஆம் திகதி 4 மணிக்கு இந்த நடவடிக்கை ஓயும் வரைக்கும் இயற்கைக் கடனைக்கூட கடலிலே மேற்கொண்டபடிதான் மிகுதி நான்கு சண்டைப் படகுகளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. தூக்கமோ சாப்பாடோ எதுவுமே இல்லாமல் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

26 ஆம் திகதி குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றிய எமது படைகள் தரையிறக்கப்பட்டோருக்கான விநியோகத்துடன் பகல் முழுவதுமாக சண்டையைக் கடலில் தொடர்ந்தன. வானத்தில் கி பிர்… கடலில் டோறாக்கள்…. சுமார் நூற்றைம்பது மீற்றருக்கொன்றாக தரையில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள்…… இவற்றுடன் 5 யுத்த டாங்கிகள்… இவையனைத்தினதும் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் தான் இவ்வளவற்றையும் செய்யவேண்டியிருந்தது.

சண்டை என்றால் என்ன? ஒன்றுக்கு ஒன்றுதானே… ஆனால் எமது கையில் உள்ள பலத்துடன் நாம் வெற்றிகரமாக செய்துமுடித்தோம்.

ஒரு கட்டத்தில் தளபதி கேணல் விதுஷாவின் படகின் கொமாண்டர் விசும்பனும் சாரதி றொபின்சனும் வீரச்சாவெய்தினர். கடலில் படகு தத்தளித்துக்கொண்டிருந்தது. தாக்குதலுக்கு மத்தியில் அங்கு விரைந்த மேஜர் ஹில்மனின் படகு, விதுஷாவின் படகுக்குக் கயிறு எறிந்து, அதனையும் தன்னுடன் பிணைத்துக்கொண்டு வந்தது.

இதே ஹில்மன் 27 ஆம் திகதி பகல் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். மிகத்திறமையாகச் செயற்பட்ட எழிற்கண்ணன் படுகாயமடைந்தார்.

இந்தச் சண்டையில் புலனாய்வுத்துறையினரின் படையணிகள், சோதியா படையணி, கடற்புலிகளின் மகளிர் படையணி உட்பட அனைத்துப் படையணிகளும் தரைப் பாதைத் திறப்புக்காக மிகத்துணிச்சலான சண்டையை மேற்கொண்டனர். சிறிலங்கா ராணுவத்தின் மிகச்சிறந்த படையணி என்று கருதப்படும் 53ஆம் பிரிகேட் மற்றும் 54 ஆவது பிரிகேட்டுகளே எமது தாக்குதலுக்குள்ளாகின. காமினி ஹெட்டியாராச்சி தலைமையிலான இந்தப் படையணிகள் எமது போராளிகளின் தாக்குலுக்கு முகங்கொடுக்கமுடியாது டாங்கிகளுடன் ஓட்டமெடுத்தன.

மாமுனைப்பகுதிகளில் இருந்த படையினரில் ஏறக்குறைய அனைவருமே கொல்லப்பட்டனர். அங்கிருந்த வெட்டவெளியான பாதையினால் ஓடிவந்த எமது படையணிகளைக் கண்ட தாளையடி முகாம் படையினர் எமது அணிகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் மருதங்கேணிப் பாலத்தினூடாக டாங்கிகளுடன் ஓடித்தப்பினர்.

உடுத்துறையிலிருந்து சென்ற எமது படையணிகளுடன் தரையிறக்கப் பட்ட படையணிகள் தாளையடி முகாமில் கைகுலுக்கிக்கொண்டன. தாளையடி முகாம் வீழ்ச்சியுடன் 28ஆம் திகதி பிற்பகல் 4மணிக்கு இச்சமர் முடிவுக்கு வந்தது” என்றார் சூசை.

இவ்வாறான நடவடிக்கை ஒன்று நடைபெறவுள்ளதாக இராணுவத்தரப்பு ஊகித்ததா?

என்று அவரிடம் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே, “நாம் கடலில் ஒரு சண்டை செய்யப்போகிறோம் என்றே ஆரம்பித்தில் இராணுவத்தரப்பு கருதியது. முதல் தரையிறக்கம், பின்னர் தான் எமது திட்டம் – நோக்கம் புரிந்தது” என்றார், எதிரியால் ஊகிக்கமுடியத போர்த்திட்டங்களை வகுப்பது தானே எமது தேசியத்தலைவரின் தனித்துவம்!

தொடர்ந்து திரு – சூசை அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில்,

இத்தரையிறக்கல் நடவடிக்கைக்கு முன்னர் நடைபெற்ற ஏற்பாடுகள் பற்றிக்குறிப்பிட முடியுமா?

எனக் கேட்டபோது, “எமது தேசியத் தலைவர் இத்திட்டத்தினை விளக்குகையில் வரலாற்றில் நெப்போலியன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டியபோது, எமது பெண்போராளிகள் கடல்வழிப்பாதை வழியே செல்லும் நாம் நிச்சயம் தரைவழிப்பாதை வழியே தான் வந்து சேருவோம் என அவருக்கு உறுதியளித்தனர்” என்றார் சூசை.

அத்துடன், ”அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நான் படித்துள்ளேன். தொண்டமானாறு, சுண்டிக்குளம், வட்டுவாகல், செம்பியன்பற்றுப் பகுதிகளில் சோழர் காலத்தில் தமிழர் படைகள் தரையிறக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஒன்றான செம்பியன்பற்றுப் பகுதியில் மீண்டும் தமிழர் படைகள் தமது எழுச்சியைக் காட்டியுள்ளன ” என்று கூறினார்.

தரை – கடல்பகுதிகளில் நிகழ்ந்த இச்சாதனைக்கு, வான்வழியே வந்த எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டீர்கள்?

என்று வினவியபோது, ”எமது விமான எதிர்ப்புப் படைப்பிரிவினர் இதில் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அனைவரதும் ஒன்றிணைந்த முயற்சியே இந்த வெற்றி.” என்று கூறினார் கேணல் சூசை.

என்று அந்த புத்தகத்தில் குடாரப்பு தரையிறக்கம் குறித்து எழுதப்பட்ட ஒரு பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.