இறுதிவரை உனை உருக்கி உழைத்த உன்னதனே,,,!

சிரித்த முகத்துடன் எங்கள்
சிந்தையில் நிறைந்திருக்கும்
தனித்துவம்மிக்க தமிழ்ச்செல்வனே!
நீ எம்மைவிட்டுச்சென்று
ஓராண்டு உருண்டோடி விட்டதா?
அமைதிப்புறாவாய் அகிலமெங்கும்
பறந்து திரிந்தாய்
அடுக்கடுக்காய் உண்மைகளை
உலகெங்கும் உணர்த்த முயன்றாய்
உயிர் உகுக்கும் வரை
உனை உருக்கி உழைத்தாய்.
தமிழ் மக்களின் விழிகளில்
நீடித்த மகிழ்ச்சி பொங்கிட வேண்டுமென
நீ ஓடி ஓடி உழைத்ததை
தமிழ் உலகம் மறந்திடுமா…?

புன்னகையின்றி உனை பார்த்தவர் எவருமில்லை
ஆனால் அந்தப் புன்னகைக்குள்
புதைந்து கிடக்கும் சோகங்கள் சுமைகளை
எவர் அறிவார்?
நீ களத்தில் போராடும் போராளிகளின்
உள உறுதியையும்
மனவலிகளையும் உணர்ந்தவன்.
ஏனெனில் நீ படைநடத்தி
விழுப்புண்கள் சுமந்தவன்
சகபோராளிகளின் இழப்புகளை
அருகிருந்து பார்த்து மனம் துடித்தவன்
அந்த சோகங்கள்
உன் புன்சிரிப்பின் பின்னால்
நிழலாடுவதை உன்னை அறிந்தவர்கள் உணர்வார்கள்.
தினம்தினம் தமிழ்மக்கள் படும் துயரங்களை
நேரிலிருந்து பார்த்து உன் உள்ளம் துடிப்பதை
உன்னை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.
மக்களின் சோகங்களை மனதில் சுமந்து
உலகமெங்கும் அலைந்து
உண்மைநிலையை எடுத்தரைக்க
இறுதிவரை உனை உருக்கி உழைத்தாய்.
பேசிப்பேசித்தான் உன் பேச்சிழந்தாயோ
பேச்சுவார்த்தைகளுக்கு போனதால்தானே
பேச்சுமேசைகளில் உந்தன்
ஆளுமையின் அகண்டபரிமாணம்
எதிரிக்கு புலப்பட்டது.
அதனால்த்தானே உன்னை அழிப்பதில்
அத்தனை ஆவேசம் அவர்களுக்கு
ஏய்த்து ஏமாற்றுவதையே இலக்காக்கி
எத்தனை கபட நாடகங்கள் அரங்கேறின.
அத்தனையையும் உன் புன்னகை வதனத்தால்
அமைதியாக சகித்து பதிலளித்தாய்.
ஆவேசம் கொள்ள வைத்து
உலகின் பார்வையில்
தமிழின விடுதலைபபோராட்டத்தை
இழிவுபடுத்த நினைத்தவர்களை
உன் புன்னகையால் தானே
தலைகுனிய வைத்தாய்,,,!

அதனால்த்தான்
அத்தனை ஆங்காரம் அவர்களுக்கு.
குண்டு வீசி உனைக் கொன்றார்கள்
எக்காளமிட்டு எதிரிகள் சிரித்தார்கள்
தமிழுலகமே தவித்து தத்தளித்தது.
தாங்கொணாத் துயரத்தால் துடித்து துவண்டது.
துயரத்தால் துவண்டாலும்
சோர்ந்து போகவில்லை தமிழினம்
உயரிய வீரன் உன் புன்னகைக்குள்
ஒளிந்திருந்த உறுதியான இலட்சியத்தை
ஒன்றிணைந்து நிறைவேற்றும் உறுதி இன்னும்
எங்களுக்குள் ஆழமானதேயன்றி அழிந்து விடவில்லை.
அமைதிப்புறாவே எங்கள் அன்பு தமிழ்ச்செல்வனே
உலகெங்கும் மெல்லக்கனன்றவரு
ம்; விடுதலைத்தீ
விடியலின் பாதையை விரைவுபடுத்தும் உன்
ஆன்மா அன்று அமைதியாய் துயில்கொள்ளும்,,,!

மந்தாகினி