இலங்கையை ஜனநாயக நாடாக்கினார் மைத்திரி

இலங்கையை ஜனநாயக நாடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றினார் என, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள முதலமைச்சர் நாயுடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதில் ஆந்திரப் பிரதேச நிதி, திட்டமிடல், வர்த்த வரிகள், சட்ட விவகாரங்கள் அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு, பஞ்சாயத்து, கிராம மற்றும் நீர் விநியோக அமைச்சர் சிந்தகயலா அய்யனா பட்ருடு, இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் அரிந்தம் பக்சி, ஆந்திரப் பிரதேச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனது விஜயத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கிய முதலமைச்சர், இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கவனஞ்செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, எல்.ஈ.டி மின்குமிழ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தைச் சேமித்தல், நிலத்தடி நீர்த் திட்டங்கள் ஆகியவை பற்றி, முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தொடங்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை, தனது மனதுக்கு நெருக்கமானது என்று குறிப்பிட்டார். எதிர்காலத்தில், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்குமிடையிலான தொடர்புகளை – விமானப் பயணங்கள் உட்பட – அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு சம்பந்தமான ஆர்வத்துடன் உரையாற்றிய அவர், வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நாவால் வழங்கப்பட்டுள்ள 2030 என்ற இலக்கை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், அதற்கு முன்னர் அடைய முடியுமெனவும் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புரட்சிகரமான தலைவராகக் கருதப்படும் முதலமைச்சர் நாயுடு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது, “அவர் (ஜனாதிபதி), ஏராளமான புரட்சிகரமான விடயங்களைச் செய்துள்ளார். அவர் இந்த நாட்டை, ஜனநாயக நாடாக மாற்றியுள்ளார். பிரதமர் பதவியை எவ்வாறு பலப்படுத்துவது, சட்டத்தின் ஆட்சி, எவ்வாறு பங்குபற்றுவது போன்ற விடயங்கள் [குறிப்பிடத்தக்கன]. எல்லா விடயங்களும் மூன்று மொழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானா பிரிவடைந்து, தனித்த மாநிலமாக உருவாகிய அனுபவம், ஆந்திரப் பிரதேசத்துக்குக் காணப்படும் நிலையில், இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாகக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றனவா எனக் கேட்கப்பட்டபோது, இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் நாயுடு, இலங்கை அரசாங்கத்துக்குப் போதுமான திறன் இருப்பதாகவும் அர்ப்பணிப்புடன் காணப்படுவதாகவும், அரசியலமைப்பு விடயத்தில் அவர்கள் சிறப்பாகச் செயற்படுவர் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

(www.eelamalar.com)