ஈழத்தமிழ் ஏதிலியர் உட்பட ஒவ்வொருவருக்கும் நியாயமாகவும் சமத்துவமாகவும் இந்தியக் குடியுரிமை வழங்குக! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

குடியுரிமைச் சட்டத் திருத்தமாக (CAB) முன்மொழியப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு சென்ற திசெம்பர் 11ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்பத்துடன் சட்டமாகியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாரபட்ச வழிவகைகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளவர்களின் ஆழ்ந்த கவலையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனமாரப் பகிர்ந்து கொள்கிறது.
மேற்சொன்ன குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்களதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் அடக்கியொடுக்கப்பட்டவர்கள் முகம் கொடுத்து வரும் சிக்கல்களில் கவனம் செலுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், அது ரோகிங்யா மக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்குக்  காரணம் விளங்கவில்லை. ரோகிங்யா மக்கள் வங்கதேசத்தில் பாகுபாடான விதத்தில் நடத்தப்பட்டார்கள். உள்ளபடியே மியான்மாரில் இனவழிப்புக்கு ஆளானார்கள். இந்த இனவழிப்பை ஐநா மனிதவுரிமைப் பேரவை அறிக்கைகள் கவனத்தில் கொண்டுள்ளன. இவ்வகையில் துன்புறுத்தலுக்கு ஆளான ரோகிங்யா போன்ற மக்களுக்கெதிராக மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது முறையன்று. மாபெரும் இந்திய நாட்டினை இவ்வாறான மதப்பாகுபாட்டைக் கடந்து உயர்ந்து நிற்குமாறு வேண்டுகிறோம். அரசுகள் ஒடுக்குவதும் அதன் விளைவாக மக்கள் கூட்டங்கள் பெருமளவில் புலம்பெயர்வதுமான சிக்கல்கள் மலிந்துள்ள தெற்காசிய வட்டாரத்தில் இதுபோன்ற மதச் சகிப்பின்மை மனிதவுரிமைச் சூழலின் வருங்காலத்துக்கு நல்லதல்ல.  

சிறிலங்காவின் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகிறோம். அதாவது, 1980களின் தொடக்கத்திலிருந்து எம் மக்கள் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அகதி முகாம் எனப்படும் முகாம்களிலும், மிகுதியினர் வெளியிலும் வசிக்கின்றனர். நிர்க்கதியாகத் தவித்துக் கிடக்கும் இம்மக்கள் பன்னாட்டுச் சட்டங்களின் படி ஏதிலியராகக் கூட நடத்தப்படுவதில்லை. ஏனெனில் இந்திய நாடு ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951ஆம் ஆண்டின் ஐநா ஒப்பந்தத்திலோ, அடுத்து வந்த 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ ஒப்பமிடவில்லை.

ஆனால் 1948ஆம் ஆண்டின் அனைத்துலக மனிதவுரிமைப் பிரகடனத்தில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது உண்மை. இந்தப் பிரகடனம் குடிமக்களானாலும் அகதிகளானாலும் அனைத்து மனிதர்களின் மனிதவுரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது. குடியுரிமைகள் இல்லாத போது மனிதர்கள் நாடற்றவர்களாகி விடுகின்றார்கள். நாகரிக உலகில் நாடற்றவராயிருப்பது அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாத நிலையைத்தான் குறிக்கும்.

இந்தியாவில் எம் மக்கள் இத்தனை ஆண்டுகள் நாடற்றவர்களாயிருந்து, இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் அல்லலுற்று வருகின்றார்கள். அதே வேளை உலகின் நாடுகள் வேறுபலவற்றில் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடைத்ததோடு இந்த உரிமையின் துணைக்கொண்டு அவர்கள் அனைத்து அடிப்படை மனிதவுரிமைகளையும் பெற்று தாம் ஏற்றுக் கொண்ட அந்தந்த நாடுகளின் திறன்மிகு குடிமக்களாகியுள்ளனர்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் போர்க்குற்றங்களாலும் மானிடத்துக்கெதிரான குற்றங்களாலும் பாதிப்புற்றிருப்பதைக் குறைந்தது மூன்று ஐநா அறிக்கைகள் தெளிவாகக் காட்டியுள்ளன. 2009 முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலையில் உச்சம் கண்ட இந்நூற்றாண்டின் முதல் இனவழிப்புக்கு நாம் இரையாகியுள்ளோம். இப்படிப்பட்ட கடுங்குற்றங்களுக்குப்பின் தேவைப்படும் நிலைமாற்ற நீதியைக் கொஞ்ச நஞ்சமாவது பெற்றுத்தருவதில் ஐநாவும் பன்னாட்டுச் சமுதாயமும் இதுவரை வெற்றி பெறவேயில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் சண்டித்தனமும், அந்நாடு தானளித்த உறுதிகளைத் தானே மதிக்கும் நிலையைப் பன்னாட்டுச் சமுதாயம் ஏற்படுத்தத் தவறிவிட்டதுமே காரணமாயுள்ளன.
எம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இத்தனை ஆண்டுகளாய்ப் பாதுகாப்பான புகலிடமாகவும் அரவணைக்கும் தாய்வீடாகவும் இந்தியா இருந்துள்ளது என்று நன்றியுணர்கின்றோம். எம் மக்கள் புலம்பெயரவும், அவர்களில் பலர் உலகெங்கும் சிதறவும் சிலர் பாக்கு நீரிணையைக் கடக்கவும் காரணமாகிய நிலைமை உருவானதில் இந்தியாவுக்கும் பங்குண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் குறிப்பாக மொழியிலும் பண்பாட்டிலும் மத நம்பிக்கையிலும் நிறையவே பொதுத்தன்மை உண்டு. ஆக, அவர்கள் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பரந்து பட்ட சிக்கல்களின் பால் கவனம் செலுத்தும் போது அறஞ்சார்ந்த ஒரு  நிலையை எடுங்கள் என இந்திய அரசை நாம் வேண்டுகிறோம்! சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு வந்த தமிழர்களுக்கு, குடியுரிமை வேண்டும் எனக் கேட்பவர்களுக்கும், இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும் மட்டுமாவது குடியுரிமை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம்!

-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

TGTE Urges Granting Indian Citizenship Fairly and Equally, including to Eelam Tamil Refugees

GENEVA, SWITZERLAND, 

The Transnational Government of Tamil Eelam (TGTE) earnestly shares the deep concern of those who have expressed their anguish at the discriminatory provisions of the Citizenship Amendment Act Bill (CAB), which has been passed by the Parliament of India on December 11 and signed into an Act by the President of India.
Though it is claimed that the CAB will address the problems faced by those persecuted in the neighboring states of Pakistan, Bangladesh and Afghanistan, it conspicuously leaves out the Rohingya people, who have undergone discrimination in Bangladesh, and actually subjected to genocide in Myanmar, a genocide that UN Human Rights Council reports address. It is not fair to discriminate against a persecuted people such as the Rohingya based on their religion and we urge the great nation of India to rise above any such religious discrimination. Such religious intolerance does not augur well for the Human Rights situation in the South Asian region, which is replete with problems of persecution by states and the consequent large scale displacement of peoples.

We, on behalf of the Eelam Tamils of Sri Lanka, would like to bring to the attention of the Government of India that nearly two lakhs of our people have sought asylum in India since the early 1980s. Almost half of them live in so-called refugee camps, the other half outside. These desperate people have not even been treated as refugees under international law as India has not signed the UN Convention of the Status of Refugees, nor the subsequent 1967 Protocol.

The fact remains that India has signed the 1948 Universal Declaration of Human Rights, which guarantees the human rights of all persons irrespective of whether they are citizens or refugees. Without citizenship rights, persons become stateless, and to be stateless in a civilized world means the lack of basic human rights.

Our people in India are stateless and have suffered for decades from their inability to gain citizenship rights in India. Elsewhere in the world, Eelam Tamils have been granted citizenship rights, which have helped them enjoy all basic human rights and they have become productive citizens of their adopted countries.

We, Eelam Tamils, have been victims of war crimes and crimes against humanity, as borne out by at least three UN reports. We have been the victims of the first genocide of this century, which culminated in the 2009 Mullivaaikkal massacre. The UN and the international community has not yet succeeded in securing even a modicum of the transitional justice needed following such serious crimes due to the intransigent attitude of the Government of Sri Lanka and the failure of the international community to force it to honor its own commitments.

Tamils are grateful that India has been the safe haven and home for so many of our friends and relatives for so many years. India did play a role in the evolution of a situation that has led to the displacement of our people and so many of them being scattered all around the world, including across the Palk Straits. The Tamils of Tamil Nadu and the Tamils whose came from Sri Lanka share much in common, especially language, culture and religion, so are already from the same family.

We urge the Government of India to take the moral position while attention is being paid to the wider issues, and grant Tamils originally from Sri Lanka citizenship rights, at least to those who ask for it and to those who have been born and grown up in India.

Transnational Government of Tamil Eelam
tgte