புலிக்கொடி பறக்கும்

என் ஈன தமிழனின்
செவிகளில் உறைப்பதே இல்லை
அந்த ஈழ தமிழனின் 
கூக்குரல்கள் கேட்டும்

என் மதுரைகள்
கவலைப்படுவதே இல்லை
என் கண்ணகிகளின்
கற்பு சூரையிடப்படுவதை
பார்த்தும்

வானங்கள்
அழுவதே இல்லை
என் மானம்
அழிவதை பார்த்து

பால் மனம் மாறா
என் மணி குழந்தைகள்
மார்பில் மயான
குழி கண்டும்
மௌனம் ஏன் ?

எதற்கும் இங்கு
பதிலில்லை

ஆனால்,
பறக்கின்றன
காகித புறாக்கள்
கடைசி தமிழனின்
காவுச் சத்தம்
கேட்கும்வரை
கவலையோடு இருக்கும்
மைய அரசை நோக்கி……………

ஈன இலங்கையால்
நிர்வாணமாக்கப்பட்ட
என் சகோதரிகளுக்கு
இப்பொழுது
நிவா”ரணமாம்”

ஏ உலகமே
புரிந்து கொள்
என் இனம்
இறுதி மூச்சு வரை
இழுக்கறுக்கவே போராடும்!
அதற்க்கு முடிவில்லை
ஈழத்தில்
புலிக்கொடி பறக்கும்வரையில்……

★ராமகிருஷ்ணன்.