உமாமகேஸ்வரன் றோவின் சந்திப்பு! – ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 02

உமாமகேஸ்வரன் றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்த நேரத்தில் இலங்கையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் அவரை வந்து சந்தித்தார்.

அவர் தன்னுடைய பெயர் அப்துல்லா (புனைபெயர்) என்றும் தான் மாலைதீவு பிரஜை என்று அறிமுகம் செய்து கொண்டார்.  உமாமகேஸ்வரன் முதலில் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளவில்லை.  தான் ஒரு கோழிப்பண்ணை முதலாளி என்ற தொனியிலேதான் அவருடன் பேசினார்.

ஆனால் அவர் எனக்கு உங்களைத் தெரியும் நீங்கள் தான் உமாமகேஸ்வரன் என்ற போது உண்மையில் உமாமகேஸ்வரன் அதிர்ந்து விட்டார். தன்னைக் கொலை செய்ய அல்லது கடத்திச் செல்ல எதிரிகளால் அனுப்பப்பட்ட ஆளாக அவர் இருப்பார் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டு அவரது முகம் கறுத்துப்போனது. அதை அவதானித்த அப்துல்லா நண்பரே பயப்பட வேண்டாம் உங்களைச் சென்று சந்திக்கும்படி றோதான் என்னை அனுப்பியது என்று சொல்லி றோவுக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையைப் பற்றியும் சொன்னார்.

அதன்பின் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை வந்தது.  அப்துல்லா மாலைதீவு நிலைமைகளைப் பற்றியும் மாலைதீவில் ஆட்சி நடத்தும் கயும் ஒழுக்கமில்லாதவர் என்றும் மதுபானம் அருந்துவது உட்பட இஸ்லாத்துக்கு விரோதமான காரியங்களை செய்பவர் என்றும், அங்குள்ள மக்களுக்குச் சுதந்திரமில்லை.

அங்கே ஜனநாயக ஆட்சி ஒன்றை அமைக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டார்.  உமாமகேஸ்வரனுக்கு முதலில் ஆச்சரியமாகப் போய்விட்டது. உங்கள் நாட்டில் ஆட்சியமைக்க நான் எப்படி உதவி செய்ய முடியும் என்று அவர் கேட்க றோ உங்களுக்கு விசயத்தைச் சொல்லிவ்லலையா, உங்களிடம் பேசியிருப்பதாக என்னிடம் சொன்னார்களே. என்று அப்துல்லா திருப்பிச் சொன்னார்.

அப்போதுதான் உமாமகேஸ்வரனுக்கும் றோ சொன்ன தாக்குதல் திட்டம் அது தான் என்றும் புரிந்தது. கூடவே பயமும் வந்துவிட்டது.  ஆயுதப் பயிற்சி விவகாரத்தில் தன்னைப் புறக்கணித்தது பரந்தன் ராஜன் தன்னுடைய அமைப்பை இரண்டாக உடைத்தது, தான் இறக்கிய ஆயுதங்களை முடக்கியது. என்று பலமுறை தன்னுடைய முதுகிலேயே குத்திய றோ எங்கு தன்னை பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அப்துல்லா உங்களிடம் றோ அதிகாரிகள் மேற்கொண்டு பேசுவார்கள்.  உங்கள் சந்தேகங்களை அவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.  எங்களுடைய சந்திப்பின் ஞாபகர்த்தமாக எனது இந்தச் சிறிய பரிசை நீங்கள் மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு புத்தம் புதிய ‘மெஸ்டா’ காரை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.
இது நடந்த ஒரு வாரகாலத்தின்பின் றோ அதிகாரி ஒருவர் கொழும்பு வந்து உமாமகேஸ்வரனைச் சந்தித்து அடுத்த சந்திப்பு கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினில் நடைபெறும் என்றும் இந்த விபரம் வேறு ஒருவருக்கும் தெரிய வேணடாம் என்றும் குறிப்பாக றோவுக்கும், புளொட்டுக்கும் இடையிலான வழமையான தொடர்பாளரான பாலபுத்தருக்குக்கூட இது தெரியக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

பாலபுத்தர் நெருக்கமானவர் என்றாலும் ENDLF, EPRLF, TELO, TULF காரர்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது.  இதனால் அவர் மூலம் இரகசியம் வெளியில் போகக்கூடும் என்று றோ அஞ்சியது.

அடுத்த சந்திப்புக்காக இம்முறை உமாமகேஸ்வரன் இந்திய இராணுவ விமானத்தில் செல்லவில்லை.  சாதாரண இந்தியன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விhமன நிலையத்திற்கூடாகவே திருவானந்தபுரம் சென்றார்.  ஆனால் சொந்தப் பெயரில் அல்ல.

திருவானந்தபுரம் விமான நிலையத்தில் உமாமகேஸ்வரனை வரவேற்ற றோ அதிகாரிகள் தங்களது காரில் கொச்சினுக்கு அழைத்துச் சென்றார்கள்.  கொச்சின் துறைமுகத்தில் தரித்து நின்ற சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் 1987 ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி அந்த முக்கியமான சந்திப்பு நடந்தது.  தாடிக்கார அப்துல்லா உமாமகேஸ்வரனுக்கு முன்பே அங்கு வந்திருந்தார்.  கூடவே சிங்கப்பூரிலிருந்து மற்றைய இரு மாலதீவுக்காரர்கள், இரண்டு றோ அதிகாரிகள் ஆகியோர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முதலில்  றோ அதிகாரியிடம் தனியாக சந்தித்த உமாமகேஸ்வரன் தனது அதிருப்தியை வெளிக்காட்டி தனக்கு அந்த விடயத்தில் அக்கறை இல்லாதது போல் காட்டிக் கொண்டார்.  உண்மையில் மகேஸ்வரனுக்கு இதில் ஈடுபட விருப்பம்.  ஆனால் விலை வைத்து றோவிடம் காரியத்தை சாதிக்க வேண்டும் என விரும்பினார்.

றோ அதிகாரிகள் முன்பு போல் இனி நடக்காது, நாங்கள் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றோம்.  இந்தக் காரியத்தை நீங்கள் நடத்தி முடிந்தால் மாலைதீவில் உள்ள முக்கிய தீவுகளில் இரண்டு தீவுகளே நீங்கள் தங்கியிருக்கவும், தளம் அமைத்து பயிற்சி எடுக்கவும் உங்களிற்கு ஏற்பாடு செய்து தருகின்றோம்.  அந்தத் தீவுகளில் வரும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்றனர்.

எதற்காக நீங்கள் மாலைதீவு விகாரத்தில் இவ்வளவு அக்கறை எடுக்கின்றீர்கள் என்று உமாமகேஸ்வரன் அவர்களை திருப்பிக் கேட்டார்.

இந்தியா எவ்வளவு பெரிய நாடு, ராஜீவ்காந்தி எவ்வளவு பெரிய தலைவர், இது உங்களுடைய ஜே.ஆருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. அவைக்கு அதை புரிய வைக்க எங்களுக்கு ஒரு தளம் வேண்டும். தமிழ் நாட்டை முன்புபோல பயன்படுத்த முடியாது.  அங்கே புலிகள் எல்லா இடத்திலேயும் ஊடுருவிவிட்டார்கள்.  ஜே.ஆர், ஜே.வி.பி, புலிகள் எல்லோருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும்.

நாங்கள் சதி திட்டங்கள் வைத்திருக்கின்றோம்.  நீங்கள் மட்டும் இந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் இன்றைக்கும் எங்களின் நம்பிக்கைக்குரிய நண்பராக உங்களை நினைத்து உங்களுக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருவோம்.  என்று தமது திட்டத்தை விளக்கினார்கள் றோ அதிகாரி.

உமாமகேஸ்வரன்  றோவுடன் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே புளொட் நுவரெலியா மாவட்டத்தை எதிர்த்து ஜே.வி.பிக்கு பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது.  மன்னார் மாவட்டம், செட்டிகுளம், முள்ளிக்குளம் பகுதியில் ஜே.வி.பியை எதிர்த்துப் போராட விஜயகுமாரதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆயுதப்பயிற்சி அளித்து வந்ததும் றோவுக்குத் தெரியாது.

ஏறத்தாள மூன்றுமணிநேரம் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் மாலைதீவின் அப்துல் கயூமின் ஆட்சியை இராணுவ அதிரடி மூலம் கவிழ்ப்பது என்று இறுதி முடிவாகியது.  உமாமகேஸ்வரன தன்னிடம் ஜோர்ச் கபாஸ் தலைமையிலான பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் (PFLP) பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் இந்தக்காரியத்தை திறம்பட செய்து முடிக்க முடியும் என்றும் தனக்குத் தேவை ஆயுதமும், பணமும், போக்குவரத்து வசதியும் தான் என்று கேட்டுக் கொண்டார்.

அது ஒன்றும் பிரச்சினை இல்லை எல்லா ஒழுங்குகளையும் நாங்கள் செய்து தருவோம்.  கொழும்பில் உங்களுக்கு நண்பர் அப்துல்லா ஒரு கோடி ரூபா இலங்கைக் காசு தருவார். காரியம் முடிந்ததும் 10 கோடி ரூபா இலங்கைக் காசு தருவோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைக்கு கிடைக்க ஏற்பாடு செய்கின்றோம். என்று சொன்ன றோ அதிகாரிகளுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நாங்கள் தரும் ஆயுதங்களை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்திருக்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லப் போகின்றீர்களா?  என்று அவர்கள் கேட்டனர்.

தமிழ் நாட்டில் வைத்திருந்து என்ன செய்வது, எங்களது பயிற்சி முகாம்கள் எல்லாம் இலங்கையில் தான் இருக்கின்றது.  அதனால் அங்கு கொண்டு போவது தான் நல்லது என்று உமாமகேஸ்வரன் சொன்னார்.

அங்கே கொண்டு போவது ஆபத்தில்லையா.  புலிகள் அவற்றை உங்களிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று திருப்பிக் கேட்டனர் றோ அதிகாரிகள். அப்படி ஒருநாளும் நடக்காது மன்னார் மாவட்டம், முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அங்கே நாங்கள் வடிவான பாதுகாப்பு முகாம்களை அமைத்திருக்கின்றோம்.  புலிகள் வந்து எம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு பதிலளித்தார் உமாமகேஸ்வரன்.

புலிகள் ஒருபோதும் உங்கள் பகுதிக்கு வந்ததில்லையோ.  முருங்கன் பகுதியில் புலிகளுக்கும் உங்களுக்கும் மோதல் நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோமே என்று மீண்டும் றோ அதிகாரி ஒருவர் கேட்க அது ஒரு சிறிய சம்பவம் அடிக்கடி இப்படி நடப்பதில்லை. எப்போதாவது இப்படி வந்து  எதிர்பாராத விதமாக சந்திக்கும் போது நடக்கும் மற்றப்படி அது எங்களுடைய   கட்டுப்பாட்டுப் பகுதி என்றார் உமாமகேஸ்வரன்.
அவரது பதிலைக் கேட்டு சிறிது நேரம் யோசித்த றோ அதிகாரிகள் புலிகள் உங்கள் பகுதிக்குள் வராமல் தடுக்க நாங்களும் ஒரு காரியம் செய்யலாம்.  அதாவது IPKF இன்னமும் உங்கள் பகுதிக்கு வரவில்லை.  நாங்கள் உங்கள் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்படி அவர்களுக்குச் சொல்கின்றோம்.  அதன்மூலம் புலிகளின் சிறிய ஊடுருவலை தடுக்கலாம்.  அவர்களது இந்த யோசனை உமாமகேஸ்வரனுக்குப் பிடிக்கவில்லை.  IPKF எங்கட பகுதிக்கு வருவது தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன்.

அவர்கள் வரும் போது எங்களுடன் கூட இருக்கும் ENDLF, EPRLF, TELO ஆட்களும் வருவார்கள்.  பிறகு காரியம் நடக்காது எல்லாம் குழம்பிப் போகும் என்றார்.  அதைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்.  மிஸ்டர் உமாமகேஸ்வரன் IPKF உங்களுடைய பகுதிக்கு வராவிட்டால் ஏதோ உங்களுக்கும் இந்தியாவிற்கும் சம்மந்தம் இருப்பதாக மற்றவர்களுக்குச் சந்தேகம் வரும். அதுதான் ஆபத்து LTTE யை மட்டுமல்ல மற்ற எந்தக் குழுக்களையும் உங்களுடைய பகுதிக்கு வரவிடாமல் செய்வது எங்கள் கருத்து என்று றோ அவருக்கு உறுதி தந்தது சரி IPKF வரட்டும்.  ஆனால் புளொட் முகாம்களுக்கோ உறுப்பினர்களுக்கோ எந்தப்பாதிப்பும் இல்லாதவிதத்தில் அவை நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களின் யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார்.  எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் IPKF யையும் இந்தியாவையும் எதிர்க்கின்ற மாதிரி நடந்து கொள்கின்றார்கள் என்று அவருக்கு ஆலோசனை கூறியது றோ.

நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் செய்த முதல் வேலை புலிகள் மீது தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடாத்தினால் புளொட் இந்திய இராணுவத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கும் என்று அறிக்கைவிட்டதுதான்.

தொடரும்………..