உயிருக்குள் கலந்த உறவு – சிறுகதை!!

மாலை மெல்ல மயங்கிக்கொண்டிருந்தது. நிலவின் குளிர்ச்சிக்குப் பயந்தோ என்னவோ சூரியன் தன்னை மறைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். வீடு திரும்பும் அவதியில் அந்த பாண்கடையில் மக்கள் கூட்டம் முண்டியடித்தது.

எப்போதுமே நெரிசலை விரும்பாத நான் கடிகாரத்தை திருப்பி நேரத்தைப் பார்த்தேன். ஆறு மணி முப்பது நிமிடங்களை துல்லியமாய் காட்டியது. கடிகாரம். கூட்டத்தில் புகுந்துகொள்ள மனமற்று சற்று தள்ளியே நின்றிருந்தேன். ‘இசை காத்திருப்பாளே‘ என்ற எண்ணம் தலைதுாக்க விரைவு கண்டது என் கால்கள்.
மெல்ல மெல்ல கூட்டத்தில் புகுந்து ஒரு இறாத்தல் பாணும் ஒரு டப்பி ஜாமுமாய் வெளியே வந்தேன். அவசரமாய் பேருந்து தரிப்பிடம் விரைந்து சில நிமிடத்தில் புறப்பட இருந்த பேருந்தினுள் ஏறினால், கடைசி பேருந்து என்பதால் அங்கும் கூட்டத்திற்கு குறைவில்லை. அந்த கூட்டத்தினுள் நானும் ஐக்கியமாகி நேரானதொரு கம்பி போல உடலை நிமிர்த்திக் கொண்டேன்.

நிறைமாத கா்ப்பிணியைப்போல இயலாமையும் தள்ளாமையுமாய் நகா்ந்தது பேரூந்து. உடம்பில் ஏதோ ஊா்வது போல தோன்றவே உற்றுப் பார்த்தேன். அருகில் நின்றவன் தான், என் தோளை உரசி கம்பியில் கையை வைத்திருந்தான். நிமிர்ந்து பார்த்தேன், வக்கிரமான அவனது சிரிப்பு மனதி்ன் வஞ்சகத்தை புடம்போட்டுக் காட்டியது.
அசையவே முடியாது இடித்து பிடித்து சுற்றி நின்ற அந்த நெரிசலில் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. ‘இறைவா இது என்ன சோதனையோ‘ என எண்ணியபடி திரும்பிக்கொள்ள முயன்றேன். என்னை சுற்றியிருந்த அவனது ஒரு கரமும் கம்பியில் பிடித்திருந்த மறு கரமும் அசையவிடாது செய்துவிட்டது. முறைப்பாய் நான் பார்த்த பார்வை கூட அவனைப் பாதித்ததாகவே தெரியவில்லை.
அவன் மீதிருந்து வெளிப்பட்ட மதுவின் நெடியும் புகைத்தல் நாற்றமும் வயிற்றைக் குமட்டியது. அந்து நொடியில் நரகம் என்பது வேறெங்கும் இல்லை, இவை போன்ற நேரங்களில் அனுபவிக்கப்படுவது என்றே எனக்குத் தோன்றியது. கண்களை மூடி என்னை சமப்படுத்த முயன்றேன், முடியவில்லை, அவனது ஆழ்ந்த பார்வை எனக்குள் ஏதோ ஒரு விடயத்தை உணா்த்த, அருவருப்பில் உடல் கூசியது. பொட்டில்லாத என் நெற்றி அவனுக்கு விதவை என்ற எண்ணத்தை கொடுத்திருக்கலாம். அவனது பார்வையும், அது சென்ற இடங்களும் மேலும் அங்கே நிற்கமுடியாது என்பதை உணா்த்த அவனை இடித்து தள்ளியபடி அவசரமாய், முன்னால் நகா்ந்து ‘இறக்கம்‘ எனக் குரல் கொடுத்தேன்.

‘முதல்லயே சொல்லுறதில்லையா?‘ எனக்கேட்டபடி முணுப்பாய் பேச எத்தனித்த நடத்துனா் தம்பி, இறங்கப்போவது நான் என்பதைக்கண்டதும் என்னை கேள்வியாய் பார்த்தான். தினமும் பயணிப்பதால் நான் இறங்குமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது.
அவனைக்கூட நிமிர்ந்து பார்க்கமுடியாது அவசரமாய் பணத்தை அவனிடம் நீட்டிவிட்டு கடகடவென நடக்கத் தொடங்கினேன். ஏதோ புரிந்திருக்கவேண்டும். அவனது பார்வையில் ஒரு பரிதாபம் இருந்தது. பாவம் அவனென்ன செய்வான். அன்றாடம் நாள்கூலிக்கு வேலை செய்பவன். எண்ணங்கள் என்னை நிறைக்க விரைவாக நடக்கத் தொடங்கினேன்.
வழமையை விட அரை மணித்தியாலங்கள், தாமதமாக நான் வீடு வந்து சோ்ந்த போது என்னை வியப்பாய் பார்த்தாள் இசை. தலைவலியும் உடல் சோர்வுமாய் அருகில் இருந்த கதிரையில் தொப்பென்று அமா்ந்து கொண்டேன்.

‘என்ன? ஏன் இவ்வளவு நேரம், போன் எடுக்க நினைச்சேன், அதில காசில்ல,‘ தயங்கியடியே சொன்னவளைப் பார்த்ததும் எனக்குள் சின்னதாய் ஒரு குற்ற உணா்ச்சி தலைதுாக்கியது. பாவம், காலையில் அவளுடைய அலைபேசிக்கு காசுபோட மறந்துவிட்டேனே, அவசரத்தில் சென்றுவிட்டதை எண்ணியபடியே,
‘சரி விடு, அதான் வந்திட்டனே, காலையில காசு ஏத்த மறந்திட்டன், தா இப்பவே ஏத்திவிடுறன், என்றபடி எனது கைப்பையில் இருந்து நுாறு ரூபா நெற்காட்டை எடுத்து அவளின்ர போனுக்கு ஏற்றிவிட்டு ‘நான் குளிச்சிட்டு வரவா‘ என்றேன்.

அவளது கண்களில் கண்ணீா் எட்டிப் பார்த்தது. எனக்குத் தெரியும், எனக்கு சற்று வலியென்றாலும் அவளுக்கு கண்ணீா் வந்துவிடும் என்பது. ஏனோ வழமை போல அவளைச் சமாதானப்படுத்தாது அவளுடைய கையை என் கையில் எடுத்துக்கொண்டு நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். அவசரமாய் தன்னை சமாதானம் செய்துகொண்ட இசை, ‘நீ குளிச்சிட்டு வா‘ என்றாள்.
கிடுகினால் மறைக்கப்பட்டிருந்த அந்த தடுப்பிற்குள் புகுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன், யாரையும் காணவில்லை. அவசரமாய் தண்ணீர் அள்ளி அண்டாவை நிறைத்து குளிர்ந்த தண்ணீரை முகத்திற்கு அடித்து, கண்களை அலசி, குளிக்கஆரம்பித்தேன். ஏனோ, தண்ணீரோடு சேர்ந்து என் கண்ணீரும் ஓடிக்கொண்டிருந்தது.

‘இசை, சாப்பிடுவமா? வானொலியை திறந்தபடியே நான் கேட்க, ‘தேத்தண்ணி கொஞ்சம் போடு குடிச்சிட்டு சாப்பிடுவம்‘ அவள் பதில் தந்தாள்.
ஏன் இசை, அன்ரி பின்னேரம் தேத்தண்ணி தரேல்லயே?
இல்லை, அன்ரி எங்கயோ போட்டா போல, மகள் தான் நிக்கிறா போல கிடக்கு, சத்தம் அப்பிடித்தான் கேட்டது. முழுநேரப் படுக்கையாய் இருக்கும் என் தோழியின் வார்த்தைகள் எனக்குள் வலியைப் பிரசவித்தது. பாவம், பின்னேரம் தேத்தண்ணி இல்லாமல் இருந்திருக்கிறாள். அவசரமாய் தேத்தண்ணிபோட்டு எடுத்துக்கொண்டு அவளிடம் விரைந்தேன்.
மெல்ல அவளை எழுப்பி அமரவைத்துவிட்டு கையில் தேத்தண்ணியைக் கொடுத்ததும், பாணையும் தாவன், அடிக்கடி எழும்ப ஏலாது தானே, என்றவளை வியப்பாய் பார்த்தேன். எனக்கு கரைச்சல் என்பதை நினைச்சுத்தான் அவள் அப்படி சொல்லுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டாலும் எதுவும் பேசாது அவள் சொன்னபடியே செய்வதைக் கண்டதும்,
‘அறிவு ‘ என்றாள்.

‘ம், சொல்லு‘

அண்ணா இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமே,? என்றாள் இதயத்தில் தேக்கிய வலியோடு.
உண்மைதான், என் கன்னத்திலும் கண்ணீரின் கோடுகள்.
‘ஏனடி வந்ததில இருந்து அழுதுகொண்டே இருக்கிறாய், என்ன நடந்தது, சொல்லன்‘ பதற்றமாய் வந்தது அவளது வார்த்தைகள்,
‘அப்படி ஒண்டும் இல்லையடி, நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன, எங்கட காலம் எப்பிடி மாறிப்போச்சு பாத்தியே, நிம்மதியா வேலைக்குப் போய் வரமுடியேல்ல, கண்டவனும் ஏதோ மாதிரிப் பாக்கிறான். ஒரு காலத்தில உடுப்பும் றைபிளுமா எங்களைக் கண்டதும் மதிப்பும் மரியாதையும் தான் தந்தினம். இப்ப —-‘ விம்மல்கள் கேவலாய் வெளிப்பட்டது.
‘எனக்காகத்தானே நீ இவ்வளவு கஸ்ரப்படுறாய்,?‘ அவள் கேட்டதும் நான் நிதானித்தேன்.
‘உனக்கென்ன விசரே, நீ இல்லாட்டியும் நான் எனக்காக உழைக்கத்தானே வேணும், பேசாமல் சாப்பிடு, சொல்லிவிட்டு மௌனமானேன்.

இருவருடைய எண்ணங்களும் காலங்கள் கடந்து ஓடத்தொடங்கியது.

அப்போது எனக்கு பதினாறு வயது, எல்லாரையும் போல, போராட வேணும் என்ற எண்ணம் வந்ததும் நானும் போராளியாக என்னை இணைத்துக்கொண்டேன். பயிற்சி முகாமில எனக்கு தோழியானவள் தான் இசை என்ற இசைநிலா. ரெண்டு பேருக்கும் ஒரே வயசு, அதனாலயோ என்னவோ நல்ல தோழிகளா மாறிப்போனம். ஒண்டா சாப்பிடுவம். ஒண்டா குளிப்பம், எப்பவும் ஒண்டாவே இருப்பம், திடீரெண்டு பயிற்சிக்கு ஏற்றும் போது நானும் அவளும் வேற வேறயா ஏற்றப்பட்டம். அவள் அழுது கொண்டே இருந்தாள், வீட்டுக்கு ஒரே செல்ல மகளா இருந்தவள், அவளுக்கு பிரிவு பெரிதாக இருந்திருக்கவேணும். நானும் அழத்தொடங்கிட்டன். பொறுப்பாளா் அக்காமார் என்ன நினைச்சினமோ, ரெண்டு பேரையும் ஒண்டாவே கூட்டிக்கொண்டு போட்டினம்.

அதுக்குப்பிறகு பயிற்சி முகாமில அவள் மிகக்கெட்டிக்காரியா இருந்தாள். நான் மெதுவாகத்தான் எல்லாத்தையும் செய்வன். எனக்கு பயிற்சி செய்ய ஏலாது என்று நான் அழுதால் அவள் தான் எனக்கு தைரியமும் உற்சாகமுமாய் இருப்பாள். தன்ர வேலையோட என்ர சில வேலைகளையும் செய்துவைப்பாள். காலையில ஓடும் போது என்ர கையைப்பிடிச்சு இழுத்துக்கொண்டு ஓடுவாள்.
அவளுக்கு சாப்பாட்டில நிறைய நுணுக்கம், அவளுக்குப் பிடிக்காததை எல்லாம் எனக்குத்தான் அள்ளிப்போடுவாள். நானும் அவளுக்காகவே சாப்பிட்டு முடிப்பன், அவளுக்குப்பிடிச்ச சாப்பாடு என்றால் என்ரையில அரைவாசியை அவளுக்கு குடுத்திடுவன். அவளுக்கு நல்லா பாடவரும், நடனம் ஆடவரும், நான் கவிதை எழுதினா அதை அவள் பாடலாக்கி பாடி ஆடுவாள். பயிற்சி முடித்து நானும் அவளும் போராளிகளா அறிவுமதி, இசைநிலாவாக களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டம். அப்ப பெரிதாக அவள் அழவில்லை. நானும் சிரித்துக்கொண்டே பிரிந்துவிட்டேன்.
அதுக்குப்பிறகு அடிக்கடி கண்டுகொள்ளுவம், என்னைப்பாக்க அவள் வருவாள். அவளைப்பாக்க நான் போவன். ஒரு முறை அவள் காயப்பட்டு இருக்கிறாள் எண்டு சொன்னதும் எனக்கு மயக்கமே வந்திட்டுது, ஒருமாதிரி வைத்தியசாலைக்கு ஓடிப்போய் அவளைப் பாத்திட்டு வந்தன். காலம் மீண்டும் அவளையும் என்னையும் ஒரு படிப்பிற்காக ஒன்று சோ்த்தது. பிறகென்ன, திரும்பவும் ரெண்டுபேரும் ஒண்டா இருந்தம். இடையில் எத்தனையோ தோழிகள் வந்துபோனாலும் அவளுக்கும் எனக்குமான நட்பு வித்தியாசமானது. அவள் மருத்துவதுறை போராளியாய் இருந்தாள். நான் பயிற்சி அணியி்ன் பொறுப்பாளராக இருந்தேன்.
பத்து வருசம் ஓடிப்போயிட்டுது, நிறைய களமுனைகள், நிறைய படிப்புகள், நிறைய அனுபவங்கள் எண்டு நாங்கள் வளர்ந்திருந்தோம். அப்பதான், அவளுக்கும் ஒரு காதல் மலர்ந்தது. அதுவும் களமுனையில. அருகில நிண்டு காயப்பட்ட ஒருவருக்கு அவள் முதலுதவி செய்து அனுப்பினாள். பிறகு அவரே அவளைத் தேடிவந்து காதலைச் சொன்னார். அவா்தான் சீராளன் அண்ணா.
அவளுக்கும் விருப்பம் எணடாலும் அவள் பதில் சொல்லாமல் என்னட்ட கேட்டதும் எனக்கு பெருமிதம். விளையாட்டுக்காக, ‘இதெல்லாம் வேண்டாம், எங்கட இலட்சியத்தில மட்டும் நாங்கள் உறுதியா இருப்பம் எண்டு நான் சொன்னதும் அவளும் அதை நம்பி அவரிட்ட அப்பிடியே சொல்லிப்போட்டாள்.

ஆனாலும் அவளின்ர மனசுக்குள்ள இருந்த வருத்தம் எனக்கு சிரிப்பை வரவைக்க, நானே சீராளன் அண்ணாவைச் சந்தித்து விசயத்தை சொல்லிப்போட்டு வந்தன்.

பிறகென்ன, அவரே தலைமைப்பீடத்திற்கு அறிவித்து, கல்யாண ஏற்பாடும் நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில தான் அவரோட கூட வந்த நண்பன், அகநிலவன், தனக்கு என்னைப் பிடித்துள்ளதாகவும், தேசவிடுதலைக்கான எமது பணிக்குப் பின்னா் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சொன்னார்.
நானும் சம்மதித்துவிட்டதில் இசைக்கு நிறையவே மகிழ்ச்சி. சீராளன் அண்ணா என்னிடம் அடிக்கடி சொல்லுவார், ‘அறிவு, இசையை கவனமா பாத்துக்கொள்ளுங்கோ‘ என்று. நானும் தலையை ஆட்டி சம்மதம் சொல்லுவேன்.

அப்போதெல்லாம் அகநிலவன், எனக்குத் தெரியும், நீங்கள், கெட்டிக்காரி, உங்கட தோழியை மட்டுமில்லாமல், நிறையப்பேரை பாத்துக் கொள்ளுவீங்கள், எண்டு எனக்கூறுவார். மற்றவா்கள் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். நான் அவ்வேளைகளில் பொறுப்பாளராகி என் குரலை உயாத்தி அனைவரையும் அடக்கிவிடுவேன்.
காலம் திசைமாறியது. இறுதி யுத்தம் ஆரம்பமானது, எல்லாம் முடியட்டும், அதுக்குப்பிறகு திருமணத்தைப்பற்றி யோசிப்போம் என்று சீராளன் அண்ணாவும் இசையும் தமது திருமணத்தை தள்ளிவைத்துவிட்டனா்.

அப்போது நாங்கள் இரணைப்பாலையில் நின்றோம். ஒருநாள் அவசரமாய் நான் நின்ற களமுனைக்கு வந்த, அகநிலவன், என்ன நினைத்தோ, தன்னுடைய கடிகாரத்தை என்னிடம் தந்துவிட்டு நான் கட்டியிருந்த கடிகாரத்தை., தான், வாங்கிக்கொண்டார். அதே போல கைக்குட்டையையும் மாற்றி வாங்கியபோது நான் சிரித்துக்கொண்டே, ‘இதென்ன, ரொம்பவும் அதிகமாய் —–எனக்கேட்டேன்.

அப்போது, அகநிலவன், சிரிக்கவில்லை, எதையோ மனதில் நினைத்திருக்கவேண்டும், கண்ணில் வலியோடு,
‘நான் இல்லாவிட்டால் நீ காத்திருக்காதே‘ என்றார். அப்போது தான் எனக்குள் எதுவோ உறுத்த, அகநிலவன்? என்றேன், ஏக்கமாய்.
‘தேசத்தின் மீதான் காதலுக்கு முன்னால் எங்கள் காதல் சாதாரணமானதுதானே‘ என்றார்.

நானும் ஆம்., என தலையை ஆட்டினேன்.
எனக்கு ஒரு காதலி இருந்தாள், அவள் மண்ணை அதிகமாய் நேசித்தவள் என்பதே எனக்கு போதும், என்றவா், ‘தண்ணி தாங்கோ‘ என்றார்.
நானும் அருகில் நின்ற ஒரு பிள்ளையிடம் சொல்ல வாய் திறக்க, அவசரமாய் தலையை அசைத்து, ‘நீங்களே எடுத்துவாங்கோ‘ என்றதும் என் கண்களை நீா் நிறைத்தது. உள்ளே சென்று தண்ணீரோடு, பக்கத்திலிருந்த அம்மா செய்து தந்த பலகாரத்திலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்தேன்.

என் கண்களைப் பார்த்தபடியே சாப்பிட்டு தண்ணீா் குடித்துவிட்டு புறப்பட்டவா் தான், மூன்று நாட்களின் பினனா் மேஜா் அகநிலவனாய் அவா் வீரகாவியமாகிவிட்டார் என்ற செய்தி என் காதுக்கு வந்தது. கதறியழவேண்டு் போல தோன்றினாலும் வலியை எனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டேன். என் பிள்ளைகள் என்னிடம் கண்டதெல்லாம் நிமிர்வும் திடமும் தான். நான் அழுது அவா்கள் பார்க்கவேண்டாம் என எண்ணி என் அழுகையை மனதுக்குள் புதைத்துவிட்டு நடமாடினேன்.

யுத்தம் கோரமாய் நடந்துகொண்டிருந்தது, “அவசரமாய் என்னைப் பார்க்க வந்த இசை, அகநிலவனின் சேதியறிந்து அழுதாள். அபபோதுதான் நானும் என் வலியையெல்லாம் அவளிடம் கொட்டித் தீர்த்தேன்.
இறுதி நாட்களில் சீராளன் அண்ணாவைக் காணவே இல்லை. பலரிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. யோசனையோடு இருந்தபோதுதான், செல் வீச்சில் தனது இடுப்பு பகுதியில் விழுப்புண் அடைந்தாள் இசை. அதன் பின்னா் அவசரமான சிகிச்சை செய்யப்ட்டது. எல்லோரும் சரணடையச் சென்றார்கள். இசை தான் வரவில்லை என்றும் தன்னை விட்டுவிட்டு போகுமாறும் எவ்வளவோ சொன்னாள். நான் தான் வலுக்கட்டாயமாக அவளையும் துாக்கிவந்தேன்.

அவளது பெற்றோர் உயிரோடு இல்லை, அண்ணன் மட்டும் இருந்தார். அவருக்கு இசையை ஏற்க விருப்பம் இருக்கவில்லை. ‘பாத்தியா, இதுக்குத்தான் நான், என்னை விடச்சொன்னேன்‘ என்றாள், அவளை தொண்டு இல்லம் ஒன்று பொறுப்பெடுத்தது. நான் தடுப்பிற்குச் சென்று திரும்பினேன்.

வந்ததும் அவளை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். இருவரும் என்னுடைய வீட்டில் இருந்தோம், ஆனால் வீட்டில் முடிவு வேறாக இருந்தது. அவளை விடுதிக்கு அனுப்பிவிடும்படியும் என்னைத் திருமணம் செய்யும்படியும் நச்சரித்தனா். திருமணம் என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு அகநிலவனின் ஞாபகம்தான் வரும். அந்த கடிகாரமும் அந்த கைக்குட்டையும் இன்னும் என்னோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறது என்பது யாருக்குப் புரியும்?

முடிவு செய்துவிட்டேன், இசையையும் அழைத்துக்கொண்டு தனியாக யாரும் அறியாத ஒரு கிராமத்தில் எங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்கின்றேன். படுக்கையில் இருக்கும் இசைக்கு தமிழ் மருத்துவமும் பார்த்துக்கொண்டு அவளது தோழியாக தாயாக வாழ்வதில் எனக்கு எந்த சுமையும் தெரிவதில்லை.
வானொலியில் ஒலித்த பாடல் ஒலியில் நினைவுகள் அறுபட அவளது பீங்கானையும் வாங்கிக்கொண்டு அவளுக்கு வேண்டியவைகளை அருகில் எடுத்துக்கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.
சீராளன் அண்ணா சொன்ன வார்த்தைகள் அடிக்கடி என் காதில்கேட்கும், ‘அறிவு, இசையை கவனமா பாத்துக் கொள்ளுங்கோ‘
முற்றும்.

_தமிழரசி_