உயிர்கள் தேடும் ஒளிக்கீற்றாய் படர்ந்த தியாக தீபம் திலீபன் கலங்கரை விளக்கு அழகிழந்துபோன ஊரின் வாழ்வோடு காலத்தின் நகர்வில் மறைக்கப்பட்டு இருளோடு இருளாக……..

சிறிலங்கா கடற்படை மற்றும் சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் ஈ.பி.டி.பி துரோக சக்திகளின் ஆதிக்க அகங்காரத்தில் 1994ல் இருந்து இன்றுவரை சிக்கி உருக்குலைந்து போகிறது தீவகம்.

சமாதான உடன்படிக்கை காலத்தில் யாழ். நகர் நோக்கி அரசியல் பணிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் வருகையால் தலைநிமிர்வு அடைந்த ஊர்களோடு நெடுந்தீவும் தனது வரலாற்றை விடுதலையின் பாதையில் மீண்டும் திருத்தி தடம் பதிக்கிறது.

யாழ். மாவட்டத்திலிருந்து மிக தொலைவில் அமைந்த ஊர் தமிழீழ விடியலுக்காய் தந்த விலைமதிப்பற்ற கொடைகளாகிய காவிய தெய்வங்களாகிய கரும்புலிகளையும், பல மாவீர செல்வங்களையும் தந்த மண் என்ற சிறப்பையும் பெற்றது.

தமிழீழ விடியலுக்காக தன் மண்ணில் பிறந்த விலைமதிப்பற்ற மாவீர செல்வங்களையும், உணர்வாளர்களும் தந்த நிலத்தில் எந்த நினைவாலயங்களும், கல்வெட்டுக்களும் பதியப்படாத ஏக்கத்தில் வரலாற்றின் வேறு விதமாக நெடுந்தீவு தனது மண்ணின் மகிமையை பதிந்து சென்றது. அன்றைய கால கட்டங்களில் போராளிகளின் நிர்வாகத்தில் சில சிறப்பு மிக்க இயற்கை வளங்கள் இன்றும் அதன் காலத்தின் நினைவுகளை உணர்த்தி நிற்கின்றன. விடுதலைக்கு உரமானவர்களின் நினைவில் நினைவாலயம் உருவாக்குதல் போன்ற தார்மீகப் பணியில் போராளிகளால் 1994க்கு முன்னர் நெடுந்தீவு மத்தியில் ஓர் நினைவு சதுக்கம் போன்று (நினைவுத்தூபி) எழுப்பினர். அவை அன்றைய காலம் முதல் பல தடவை துரோக சக்திகளால் உடைக்கப்பட்டு போராளிகளின் வீடா முயற்சியால் அதை உடைத்த விஷமிகளுக்கு துணைபோன அருவருடிகளுக்கு (பிரதேசசபை, உதவி அரசாங்க பணிமணை நிர்வாகம்) அன்றைய காலத்தில் போராளிகள் எடுத்த சில நடவடிக்கையால் அவர்கள் பயத்தில் மீண்டும் எழுப்பினர். அதன் பின் கைக்கூலிகளும் கை வைக்க பயந்தனர். (2009க்கு பின்னர் முற்றாக இடித்து அழித்துவிட்டனர்)

யாழ். மாவட்டத்தில் அரசியல் பணியில் இருந்த போராளிகள் அன்று நெடுந்தீவில் 1985ம் ஆண்டு சிறிலங்கா அரசின் கடற்படையால் குமுதினி படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அன்று அமைக்கப்படட நினைவாலயங்கள் புனரமைக்கப்பட்டு நினைவு நிகழ்வுகளும் கடைப்பிடிக்கப்பட்டு, மாவீரர்களின் நினைவு தினங்களும், எழுச்சி நிகழ்வுகளும் ஊரில் நடைபெற்றதால் நெடுந்தீவு மீண்டும் எழுச்சி பெற்றது. அதனோடு ஊர் மக்களோடு மாவீரர் நினைவாலயங்களை அமைக்கும் செயற்பாட்டில் மும்முரமாக செயலாற்றினார்.

அதற்க்கு முன் ஊரில் ஒற்றுமை இருப்பினும் துரோக சக்திகளும், விஷமிகளும் ஜாதி, மதம் போன்ற வேற்றுமை சண்டைகளை தூண்டிவிட்டு வேறு பாதையில் மக்களை திசைதிருப்பி தங்கள் சுயநலங்களை காண்பித்து வந்தனர். ஆனால் போராளிகள் சென்றும் யாவற்றையும் ஒருங்கிணைத்து ஓர் இனம் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவந்தனர் (2009க்கு பின் சந்திக்கு சந்தி கழகங்களும் – சங்கங்களும் – சண்டைகளும் என சிங்கள கடற்படை – பொலிஸ், துரோக சக்திகளான ஈ.பி.டி.பி மற்றும் விஷமிகளும் என ஊரின் சிறப்பும், வளங்களும், வாழ்வியலும் சிதைத்து போகிறது) போராளிகள் அன்றைய காலக்கட்டத்தில் இதுபோல் இருந்தவற்றை சீராக்கி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவகக் கோட்டத்திற்கு பொதுவாக சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமையப்பெற்ற போதிலும்; மாவீரர் நினைவாலங்கள் அமைக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் தீவிர முயற்சியில் இருந்தனர். சமாதான உடன்படிக்கை காலத்தில் யாழ். மாவட்டத்தில் சில ஊர்களும், கிராமங்களும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அங்கு வாழ்ந்த மக்கள் பெரும் அவலங்களை சந்தித்தார்கள். நெடுந்தீவிலும் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கினர். கல்வி, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சில விடயங்களில் பாரிய விளைவுகளை சந்தித்தனர். இதை உணர்ந்த போராளிகள் மக்களின் மருத்துவத்தை நிவர்த்தி செய்யும் நோக்கத்தோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவு போராளிகள் நெடுந்தீவு மத்தியில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவையாற்றினார். அங்கு அரசினர் வைத்திய சாலை இருந்தும் மக்கள் போராளிகளையே நாடி வந்தனர்.

நெடுந்தீவு, 11ம் வட்டாரம், தாளைத்துறையில் அந்த கடற்கரையோரம் அமைந்துள்ள கலங்கரை விளக்கு (வெளிச்சவீடு) ஆரம்பத்தில் கட்டப்பட்டாலும், அது கவனிக்கப்படாமல் சிதைந்து பயனற்று கிடந்தது. அதை போராளிகள் கடற் தொழிலாளர்கள் சங்கத்தின் உதவியோடும், மக்களின் உறுதுணையோடும் புனரமைத்து 2003ம் ஆண்டு தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு தினம் அன்று ஊரே எழுச்சி கோலம் கொண்டு போராளிகள், ஊர் மக்கள், மாணவச் செல்வங்கள் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் திருவுருவப்படம் பவணியாக கொண்டுசெல்லப்பட்டு நினைவுக் கலங்கரை விளக்கில் சாத்தப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டது.

வெளிச்சவீட்டின் மேற்பகுதியில் சூரியக்கதிர் இயக்கத்தில் இயங்கும் திசைகாட்டி உடன் மின்விளக்கு பொருத்தப்பட்டு தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவுக் கலங்கரை விளக்கு ஊரின் கரையோர கிராம மக்களுக்கு கலங்கரை விளக்கமாக பிரகாசித்துக்கொண்டே இருந்தது. (தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் திருவுருவப் படம் இன்றி கவனிப்பாரன்று துரோகத்தின் உச்சத்தால் சிதைந்து போகிறது இன்று காலப்போக்கில் கடல் மண் அரிப்பால் இடிந்துவிழும் அபாயமும் உண்டு)

அந்தக் கலங்கரை விளக்கின் ஒளிக்கீற்றில் கடலன்னையின் மடியில் உப்பில் உறைந்த உத்திரங்களான காவியங்களை அலை காவி கரை தழுவும் ஈரநினைவுகளை உப்புக் காற்றும் மறந்ததில்லை, உறுதுணையாக செயற்பட்ட முகங்களையும் அந்த ஞாபகங்களை நாமும் என்றும் மறந்ததில்லை.

ஆனால் இன்று………………..
கலங்கரை விளக்கு அழகிழந்து போனது, அந்த ஊரும் இருளோடு இருளாக பழைய வண்ணம் நினைவுகளாகி…………………………..

என்றும் அன்புடன் அ.ம.இசைவழுதி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”