உற்றவர் மரணத்தை மறந்து வாழ்வதா..?

நிலாக்காலங்களை
செம்மண்தரைக்குள்
புதைத்தவர்கள் பற்றிய
கதைகளை பேசுவதற்கு
மே 18 வரை காத்திருக்கிறார்கள்

மே பதினெண்டு
ஒரு தைப்பொங்கலைப் போல
ஒரு தீபாவளியைப் போல
வருடத்தில் ஒரு முறை
நினைவுக்கு வந்துவிடுகிறதா..?

மாட்டிறைச்சிக் கடைக்குள்
வேலைசெய்பவனைப்போல
மனிதத்தசைகளால்
தோய்ந்த உடலை
காவித்திரிந்த கனத்த நாட்களை
ஒற்றை மெழுகுதிரியின் ஒளியில்
ஒப்பேத்திவிடுவதா…?

வருடத்தின் முதலைந்து மாதங்களும்
எங்கள் உயிர் தின்ற மாதங்களல்லவா..!
ஒன்றா இரண்டா உயிர்களை கொடுத்தோம்
ஓரிரு நாட்களில் அழுது முடிக்க

கணக்கற்ற உயிர்களை விதைத்தோமல்லவா
இந்தக் காலத்தை நாங்கள்
மூடி மறைப்பதா..?

ஆனந்த புரத்திலே
அந்த கோர இரவிலே
எங்கள் வீரர்கள் சாய்ந்ததை
எங்கனம் மறப்பது..!

சுற்றி வளைத்து
விஷவாயு அடித்து சாய்த்தனரே
அவர்களென்ன நாணல் புற்களா..?
எங்கள் குலத்தின் வீரர்கள்

பாதுகாப்பிற்காக வெட்டிய
கிடங்கிலேயே
பலியாகிப்போயின
குடும்பங்கள் பல

இன்று அந்தரித்த காற்றில் எழும்
அவர்கள் அவலக்குரல் மறந்து
சந்தன மஞ்சத்தில்
நாம் சாய்ந்து கொள்வதா..?

நடக்கும் போதிலே நெஞ்சில்
குண்டு பாயும்
பிஞ்சுகள் உடலையும்
பேய்கள் பதம்பார்க்கும்
அந்த வெஞ்சமர் வெளியிலே
மீண்டவர் நாங்கள்
உற்றவர் மரணத்தை
மறந்து வாழ்வதா..?

ஒன்பது ஆண்டுகள் ஆயினும்
எங்களின் ஓர்மம் அடக்குதல்
தகுமோ- வரும் சந்ததிக்கெம் துயர்
சாட்சியை மறைப்பது
தமிழர்கள் எங்களின் அறமோ..!

இன்றைய நாளிலே
எத்தனை ஆயிரம்
முத்துக்கள் எம் மண்ணில்
சாய்ந்ததோ ஐயகோ..!

எழுதுங்கள் எழுதுங்கள்
எழுத்திலே பூத்திடும்
நெருப்புகளேனும்
எம் ஈழத்தை காத்திடும்

– அனாதியன்