உள்ளிருந்து ஒரு குரல்

மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள்.

விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது.

காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்.

வலப்புறம் வீதியை விட்டு, வீதியின் இடதுபுறம் ஒரு காப்பரண், அதற்கு இடப்புறமாக இன்னொரு காப்பரண் – இந்தக் காப்பரண் அமைவிடத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தவாறு ஒரு சிறு அணை வடிவிலான உயரமான நிலப்பரப்பு இருந்தது-, அதற்கு இடப்புறம் ஒரு காப்பரண் – இதில் கொம்பனியின் மேலாளர் தமிழ்தென்றல் வானலைக் கருவித் தொகுதியோடும் ஒரு பீ.கே.எல்.எம்.ஜி அணியோடும் போர் முன்னரங்கிலேயே நின்றார்-, இதற்கு சற்று இடப்புறத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தபடி ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அணை வடிவிலான நிலப்பரப்பானது முன்னரங்கின் சற்றுப் பின்புறமாக இடது புறமாகத் திரும்பி அருவியைக் குறுக்கறுத்துப்போனது. ஆற்றுக்கு இடப்புறம் இரு காப்பரண்கள், தொங்கலில் செங்கயலும் முடியரசியும் நின்றனர்.

மேலே உயர்ந்த சோலைக்காடு. நிலமட்டத்தோடு நெருக்கமான பற்றைக்காடு. எழும்பி நின்றாலும் எதிரியைக் கண்காணிக்க முடியாது. நிலமட்டத்தோடு பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. குனிய ஐந்து நிமிடங்கள், குனிந்தவர்கள் நிமிர பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். கொழுக்கி வடிவில் அமைந்த முட்கள் ஆட்களை அசையவிடாமல் பிடித்து வைத்திருக்கும். தட்டிவிட முடியாது. ஒவ்வொரு முட்களாகக் கழற்றித்தான் நிமிரலாம். சண்டை பிடிப்பது ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. இந்த முட்களுடனான பிணக்கும் விலக்கும்தான் பெரிய வேலை அவர்களுக்கு.

நாளாந்தம் சோறு, கறி வராது. ஐந்தாறு நாட்களுக்கொரு தடவை தரப்படுகின்ற உலர் உணவுகளைச் சுமந்தபடி காலை, மதியம், இரவு என்று தேடுதல் செய்தபடி அந்த அணி நின்றது.

அன்று அவர்களுக்கான உணவுகளை எடுக்கப்போக வேண்டிய நாள் மூவர் தேடுதல் செய்தனர். இடையிலே அந்நியமான தடயங்களைக் கண்டுவிட்டு, அதைப் பின் தொடர்ந்தனர். ஆனால் இடையிலே அவற்றைக் காணவில்லை. இருண்டுவிட்டது. எனவே சாப்பாடு எடுக்கப்போகவில்லை. அன்று எவரும் சாப்பிடவில்லை. ஒருவரிடமும் சாப்பிட ஒன்றுமில்லை.

மறுநாள் நால்வர் தேடுதல் செய்தபடி எடுத்துவரப் போயினர். மெல்ல மெல்ல நகர்ந்த அணி அந்த உயரமான நிலப்பகுதியருகே இருந்த வெளியில் இறங்க, அந்த உயரமான நிலப்பகுதித்தொடரின் மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் இவர்களைத் தாக்கத் தொடங்கினர். நேற்றைய தடயங்களுக்குரிய சிங்களப் படையினர் எங்காவது மறைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அவர்கள் அந்த அணைத் தொடரை நெருங்கவே நீண்ட நேரமாகிவிட்டது.

முதலாவதாகப் போன தமிழிசை அணையில் ஏற முற்பட, அதன் மறுபுறமாக மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் சுட, எதிர்பார்ப்புடனே போனதால் இவர்களும் சுட, சண்டை தொடங்கிவிட்டது. முன்னர் ஒரு சமரில் காலில் காயப்பட்டிருந்த தமிழிசை ஏறிய நிலையில் நின்று நிமிர்ந்து மேலே சுட, காயமடைந்த கால் சறுகி கீழே விழுந்துவிட்டார். விழுந்தகணமே எழும்பித் திரும்பவும் எதிரியின் ரவை தமிழிசையின் முதுகை உரசி, வானலைக் கருவியின் தொங்குபட்டியை அறுத்து, ரவைக்கூட்டுத் தூளியைக் கிழித்துச் சென்றது.

அவர் குனிந்து வானலைக் கருவியை எடுப்பதற்குள் சிங்களப் படையினர் அவரை நெருங்க முயன்றனர். தோளில் காயம்பட்ட தமிழிசை நிமிர்ந்த வேகத்திலேயே சிங்களப் படையினரைச் சுட்டார். சிலர் காயமடைந்து விழ, தமிழிசை போர் முன்னரங்குக்கு, தனது காப்பரணுக்கு வந்துவிட்டார்.

சண்டை தொடங்கிய சத்தம் கேட்டவுடனேயே தமிழ்தென்றல் தன்னோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியை அந்த அணை வடிவிலான நிலத்தொடரை நோக்கி நகர்த்தினார். ஆனால் சுட முடியவில்லை. அதற்கு அப்புறம் இருப்பவர்களை இப்புறம் கீழே நின்று சுட்டால் குருவிக்குத்தான் படும். ஒரு எதிரிக்கும் படாது. எனவே அணைத்தொடரைக் கண்காணித்தபடி அவ்வணி மறைவாக நிலைகொண்டது.

வீதியருகிலிருந்த காப்பரணில் நின்ற புலியரசி தனது காப்பரணின் பின்புறமாக அணைபோன்ற நிலத்தொடரை நோக்கித் தேடுதல் செய்தபடி ஒரு அணியோடு நகர்ந்தார். அவர்களை வானலையில் வழிநடத்தினார் தமிழ்தென்றல். அவர்களின் பின்புறமாக ஒரு கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க முற்பட, ஆற்றின் மறுகரையில் சிங்களப் படையினர் நிற்பதைக்கண்டு அங்கு சண்டையைத் தொடக்கியது அவ்வணி.

ஆற்றுக்கு அப்புறம் நின்ற சிங்களப் படையை பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் அடையாளங்கண்டு அவர்களும் சண்டையைத் தொடங்கினர்.

தம்மை நோக்கி இருபுறமும் தாக்குதல் வந்ததால் அவ்விடத்தில் மேலும் நிற்க முடியாத நிலை தோன்ற, சிங்களப் படையினர் தமது பகுதியை நோக்கி நகர முயன்றனர். பின்வாங்கும் முயற்சியில் அவர்கள் நகர்ந்த பாதைக்கு குறுக்கே இருந்தது தமிழ்தென்றலின் கட்டளை மையமான காப்பரண் – காயப்பட்ட சிங்களப் படையினர் கத்திக்கொண்டிருக்க அவர்களைச் சுமந்தபடி வந்த ஏனைய படையினரை நோக்கி தமிழ்தென்றலோடு நின்றவர்கள் தாக்கினர்.

எல்லாப்புறமும் அடிவிழ, வீதிப்புறமாக நகர்ந்து எமது முன்னரங்கைக் கடக்க அவர்கள் முயன்றனர். வீதியோரக் காப்பரணில் நின்ற புலியரசியின் அணி சண்டைக்கென அணை போன்ற உயரமான நிலத்தொடரை நோக்கிப் போனபோது, அக்காப்பரணில் சேரமலரின் அணியைத் தமிழ்தென்றல் விட்டிருந்தார். தம்மைக் கடக்க முயன்ற சிங்களப் படையினரைச் சேரமலரின் அணி போட்டுத் தள்ளியது. சிங்களப் படையினரில் சிலர் தமது பகுதியை நோக்கி ஓட, சிலர் மீளவும் எமது போர் முன்னரங்கின் பின்புறமாக ஓடினர். முற்றுகையிட வந்தவர்கள் இப்போது தப்பிப்போக வழியற்று, முற்றுகைக்குள் அகப்பட்டனர்.

புலியரசியோடு சண்டைக்குப் போனவர்களில் இசை என்ற ஆண் போராளி விழுப்புண்ணடைந்து காலில் முறிவு ஏற்பட்டதால், புலியரசியோடு தொடர்ந்து முன்னேறாமல், மேட்டு நிலத்தொடருக்கு அருகாக போர் முன்னரங்கின் பின்புறம் காட்டினுள் மறைந்து நின்றார். மேட்டு நிலத்தொடருக்கு மறுபுறம் நிற்கும் சிங்களப் படையினரின் குரல்கள் அவருக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அவரின் தகவலுக்கமைய வழுத்திருத்தங்களுடன் எறிகணைகள் வீசப்பட்டன.

தமிழ்தென்றலின் அணிக்கு உதவியாக லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் தமது 50 கலிபருடன் ஓடோடி வந்து, அணை போன்ற உயரமான பகுதியின் அடிவாரப் படையினரைத் தாக்கினர். மீண்டும் நிலைகுலைந்த சிங்களப் படையினர் சிதறிக் கலைந்தனர்.

இப்போது பி.ப.3.00 மணியாகிக் கொண்டிருந்தது. நேற்று முழுதும் சாப்பாடு, தண்ணீரில்லை. இன்றும் அதே நிலைமை. எல்லோர் நாக்குகளும் உலர்ந்துபோயின.

ஆற்றுக்கு அப்பால் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணிப் போராளி யாழவனும் 2 ஆம் லெப். மாலதி படையணிப் போராளிகள் முடியரசியும் மதியழகியும் தேடுதல் செய்தபடி தண்ணீர் அள்ளுவதற்காக ஆற்றை நோக்கி நகர்ந்தனர். சண்டைக்குள் நிற்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டுமே. ஆற்றுக்குப் போவதற்கிடையில் சிங்களப் படையினரைக் கண்டு, எல்.எம்.ஜி.யால் வெளுத்து வாங்கினார்கள். ஐயாமாருக்கு அப்புறமும் அடி, இப்புறமும் அடி, உட்புறமும் அடி. திருப்பித் தாக்காமலேயே ஐயாமார் நடையைக் கட்டினர். காயப்பட்டவர்களைக் காவிக்கொண்டோ, கைவிட்டோ போய்ச் சேர்ந்தால் போதும் சாமி. யுத்தம் சரணம் கச்சாமி.

இம்முறை சிங்களப் படையினர் தமது பகுதி நோக்கிப்போக முயற்சித்த பாதைக்குக் குறுக்கே இருந்தது செங்கயலின் காப்பரண்.

செங்கயலின் பக்கம் படையினர் போவதாக தமிழ்தென்றலுக்கு யாழவன் சொல்லிக் கொண்டிருந்தபோது சண்டைச்சத்தம் கேட்டது.

‘ஆள் என்ரை பக்கம்தான் வந்தவர். நல்லாக் குடுத்திருக்கிறன். திரும்பி ஓடுறார்”

என்று செங்கயல் அறிவித்தார்.

செங்கயலுக்குச் சற்றுப் பின்னே 2 ஆம் லெப். மாலதி படையணியில் செந்துளசியுடனும், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் சுடருடனும் ஒருவர் இருவராக மரங்களோடு நிலைகொண்டிருந்தனர். செங்கயலின் அணியிடம் அடிவாங்கிப் பின்னே வந்த சிங்களப் படையினரை இவர்கள் தாக்கினர். கத்திக்குளறிக்கொண்டு விலகி மறுபடி ஆற்றை நோக்கி நகர முற்பட்டவர்களை யாழவன், முடியரசி, மதியழகி உள்ளடங்கலான மூவர் அணி சுட்டுத் தள்ளியது.

அதற்கிடையில் சிங்களப் படையினர் வந்த திசை நோக்கி தமிழ்தென்றலோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் தாக்கிக் கொண்டிருந்தனர். எல்.எம்.ஜி.யின் அடி கேட்டதும் பீ.கே.எல்.எம்.ஜி அடியை நிறுத்தினார்கள்.

மறுபடியும் தப்பியோடும் முயற்சியில் சிங்களப் படையினர் இறங்கினர்.

போராடும் அகவை கொண்ட அனைவருக்கும்,

வணக்கம்.

ஐந்து மாதங்களின் முன், முள்ளிக்குளத்தில் எம்மை முற்றுகையிட வந்த சிங்களப் படையினர் தமது முதுகெலும்பு முறிந்து திரும்பிப்போன கதை இது. எங்களின் பலம் இன்னும் சற்று அதிகமாக அன்று இருந்திருந்தால், அவர்களின் ஈமங்களைச் சுமந்த நூறு பொதிகள் சிங்கள நாட்டுக்குப் போயிருக்கும். எங்கள் பின்னே எழுந்து வாருங்கள் என்று அன்றும் நாம் உரத்த குரலில் கூப்பிட்டோம். இன்று முழங்காவிலில் நின்றும் கூப்பிடுகின்றோம்.

வீட்டுக்கு ஒருவர் போதும் என்று யார் முடிவெடுத்தது? கப்டன் வாசு (1987), கப்டன் சுந்தரி (1990), மேஜர் ஜேம்ஸ் (1991) என ஒரு வீட்டிலிருந்து மூவர் போராட வந்த பாரம்பரியம் அல்லவா எம்முடையது.

எழுந்து வாருங்கள்.

எத்தனைபேர் வந்தோம் என்பதை விடுதலையின் பின்னர் கணக்குப் பார்ப்போம்.

இப்போது எம் கைகோர்க்க வாருங்கள்.

நன்றி
அன்புடன்
தமிழ்தென்றல்.

நினைவுகளுடன்:- போராளி மலைமகள்.
வெள்ளிநாதம் (புரட்டாதி 2008) இதழிலிருந்து…..

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”