எங்கள் பால்ராஜ் அண்ணனின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

வீரவணக்கம்
களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

எமது தலைவனின் எண்ணைக்கருத்தைச் செயல் வடிவமாக்கி; சமர் வெற்றிகள் ஒவ்வொன்றிலும் வீரமுழக்கமிட்ட பிரிகேடியர் பால்ராஜ் ஒரு அற்புதமான போர்த்தளபதி. எளிமை, யாவரையும் மதிக்கும் பண்பு, போராளிகள் ஒவ்வொருவருக்கும் உயிர்த்தோழனாக, கடமையில் கண்துஞ்சா வீரப்பெருமகனாக, நினைத்ததை முடிக்கும்
செயல் வீரனாக, இந்த மண்ணின் விடிவிற்காக இரவுபகல்பாராது இருபத்தி நான்கு வருடமாக உழைத்த எங்கள் வீரத்தளபதி நோயினால் வீழ்ந்தபோது நாம் மட்டுமல்ல, உலகத்தமிழினமே சோகத்தில் ஆழ்ந்தது எந்த இறுக்கமான சமர்க்களத்தையும் தனது வீர ஆளுமையினால் வெற்றியின் பக்கம் திருப்பி, தலைவன் திட்டத்தை செவ்வவே முடித்து வைக்கின்ற ஒரு கள ஆசானாக, பட்டறிவாளனாக, போராளிகள் ஒவ்வொருவருக்கும் தலைவனின் கருத்தையூட்டி அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் சிறந்த வீராக உருவாக்கிய பெருமை இப்பெரும் தளபதியையே சாரும். இவ்வீரத்தளபதியின் குரல் கேட்டால் எதிரிக்கு நடுக்கம்
வரும். போராளிகளுடன் கதைத்தால் ஒன்று பத்தாக, பத்து நூறாக வீரர்கள் பலம் பெறுவார்கள். அந்த அளவுக்கு ஒரு செயல் வீரனாக வாழ்ந்த ஒரு வீரத்தளபதியை நாம் இன்று இழந்துவிட்டோம். இக்களநாயகன் தனது வாழ்நாள் முழுவதையும் சமர்க்களாங்களிலேயே கழித்தார். இந்த மண்ணும் மக்களும் விடுதலை பெற வேண்டும், எமது மக்கள் சந்தோசமாக தாங்கள் மண்னில் வாழவேண்டும் என நிதமும் அதற்காகவே அவர் செயற்பட்டுக் கொண்டிருப்பார். தலைவனின் காலடி மண்ணுக்கே யாரையும் விலைபேச
விடமாட்டோம், எங்களை யார் எதிர்த்தாலும் இந்த மண்ணில்தான் அவர்களுக்கு புதைகுழி என வீரசபதமிட்டு களம் நடாத்தி வெற்றிவாகை சூடிவந்த எங்கள் தளபதி புலம்பெயர் வாழ் மக்களோடு. அன்புடன் உறவாடி அவர்களின் தாயகப் பசியை, உறவுப் பிரிவை அறிந்து, கவலைப்படாதீர்கள் எங்கள் தலைவனும் நாங்களும் இருக்கின்றோம்; நிச்சயம் உங்களுக்குத் தமிழீழத்தைப் பெற்றுத்தருவோம் : நீங்கள் இங்கு வந்து மகிழ்ச்சியாக
வாழுங்கள் என ஆறுதல் கூறி வழியனுப்பியவர் இன்று எம்மோடு இல்லைத்தான். ஆனால், அவர் கூறிய கூற்றும் விடுதலைக்காக அவர் வாழ்ந்த வாழ்வும் வரலாறாக எம்முன் விரிந்து கிடக்கிறது அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆனால், கண்ணீ ர் சிந்தி, கதறியழுது இவ்வீரத்தளபதியின் கல்லறையை நனைப்பதன் மூலம் அவரின் இழப்பை ஈடுசெய்ய முடியுமா? எம் அனைவருக்காகவும் தமிழீழத்தைப் பெற்றுத் தருவதற்காகத் தனது நோயையும் பொருட்படுத்தாது களத்திலே சமராடித் தமிழீழக் கனவோடு
வீழ்ந்த இவ்வீரத்தளபதிக்கு உண்மை வீரனுக்கு – புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நீங்களும், தமிழீழத் தாயகம் வாழ் தமிழர்களாகிய நாமும் ஒன்றிணைந்து, அவனது சுதந்திரக் கனவை நனவாக்கிக் கொடுப்பது ஒன்றுதான் உண்மையான அஞ்சலியாகும். ஆகவே, நாம் எல்லோரும் அதற்காக உழைப்போம்: விடுதலை வேண்டிவீறுநடை போட்ட இவ்வீரச்சிகரத்துக்கு எங்கள் வீரவக்கத்தைச் செலுத்திக் கொண்டு தமிழீழத்திற்காக அயராது போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ் வீரத்தளபதிக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாளில் வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் ஏனைய போராளிகளுக்கும் எமது இணையம் சார்பாக மீண்டும் ஒரு முறை வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்

(www.eelamalar.com)