எங்கே விதைக்கப்பட்டது திலீபன் அண்ணா திருவுடல்…!

தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் கையளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே எனினும் அதன் பின் அந்த உடலுக்கு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் அதுகுறித்து கூகுளில் தகவல்கள் இல்லை.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது ஏராளமான மக்கள் சொந்த ஊரைவிட்டு சுதந்திர தேசக்கனவோடு வன்னிக்கு இடம்பெயர்ந்தனர் அந்த மக்களோடு மக்களாய் திலீபனும்தான் இடம்பெயர்ந்தார். இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளான யாப்பாணத்தில் திலீபனின் உடலை விட்டுவைக்க புலிகள் விரும்பவில்லை விட்டுவைத்திருந்தால் துயிலுமில்லங்களை தோண்டி எலும்புக்கூடுகளைக்கூட வெளியில் எடுத்துப்போட்டு வெற்றிக்கொண்டாட்டமிட்ட ஈனச்சிங்களப்படைகள் திலீபனின் உடலையும் விட்டுவைத்திருந்திருக்க மாட்டாது. இதையெல்லாம் முன்பே கணித்த புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த திலீபனின் உடலை வன்னிக்கு கொண்டுவந்தார்கள் எனினும் சத்ஜெய இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியையும் 1996 இல் இராணுவம் கைப்பற்றியது.

கிளிநொச்சியில் இருந்த திலீபனின் உடல் முத்தையன் கட்டுக்கு இடம்மாற்றப்பட்டது. அதன் பின் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த செப்ரம்பர் 26 ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு அவரின் 11 ஆவது நினைவுதினத்தில் கிளிநொச்சி மீது புலிகள் ஓயாத அலைகள்-2 எனும் தாக்குதலை தொடுத்து மூன்று நாட்கள் கடும் சண்டையின் பின்னர் கிளிநொச்சி நகரினை கைப்பற்றினர். மீண்டும் திலீபனின் உடல் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

விஞ்ஞான பிரிவில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய திலீபன் மருத்துவத்துறையினை அதிகம் நேசித்தார் அதனால் திலீபனின் பெயரிலேயே புலிகளால் இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மருத்துசேவைகள் வன்னியெங்கும் வழங்கப்பட்டது. எனினும் தன் உடல் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் பயன்படவேண்டும் என்ற இறுதி ஆசை நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கம் தலைவர் பிரபாகரனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இடப்பெயர்வுகளால் உடலை பாதுகாக்க முடியாத எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய போதும் திலீபனின் உடலை மண்ணில் விதைப்பதற்கு தலைவர் அனுமதிக்கவில்லை.

கிளிநொச்சி நகரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் திலீபனின் உடலினை வழங்குவதுதான் திலீபனுக்கு செய்யும் அஞ்சலி என்று தலைவர் நினைத்தார். அறிவியல் நகரில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்கும் பாரிய வேலைத்திட்டத்தை பலகோடி செலவில் புலிகள் ஆரம்பித்தனர் அதன் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலத்தில் அப்பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அறிவியல் நகரில் திலீபனுக்கு தனி வளாகம் அமைக்கப்பட்டு அங்கு அங்கு திலீபனின் உடல் பாதுகாப்பாய் வைக்கப்பட்டது. வெகு காலமாய் அவரின் உடல் அங்குதான் வைக்கப்பட்டிருந்தது எனினும் பல்கலைக்கழகம் நிர்மாணித்து முடிக்கப்படுவதற்கு முன்பே இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து போர் தொடங்கியது. மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர் அவர்களோடு திலீபனும் இடம்பெயர்ந்தார்.

புலிகளைப்பொருத்தவரை திலீபன் சாதரண மனிதர் அல்ல சாதாரண மாவீரன் அல்ல ஈழ தேசத்தின் பெருங்கனவு அவர். அம்மாபெரும் கனவினை சுமந்துகொண்டே பயணிப்பதில்தான் அவர்கள் பெருமை கொண்டார்கள். எத்தனையோ இன்னல்கள் எத்தனையோ இடைஞ்சல்கள் அதையெல்லாம் கடந்து அவர் உடலை பாதுகாப்பாய் இடம்மாற்றினார்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு உடலை பாதுகாத்து வைப்பதென்பது இலகுவான விடயம் அல்ல எனினும் அவற்றையெல்லாம் சமாளித்து தம் சுதந்திரதேசத்தின் கடைசி எல்லைவரை திலீபனை தூக்கிச்சுமந்தார்கள். எந்த தேசத்தின் சுதந்திரத்தை திலீபன் நேசித்தானோ அந்த தேசத்தின் இறுதி எல்லைவரை திலீபனும் அத்தேசத்தை நேசித்த மக்களும் புலிகளும் நகர்ந்தார்கள்.

ஈற்றில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலுக்கும் மாத்தளனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இறுதி மாவீரர் துயிலுமில்லத்தில் பூரண மரியாதையுடன் திலீபனின் உடல் அவர் இறந்து 22 ஆண்டுகளின் பின் மண்ணில் விதைக்கப்பட்டது. வன்னியில் 14 ஆண்டுகள் மக்களோடு மக்களாய் பயணித்த பெரும் கனவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று விதையுண்டு போனது அம்மண்ணில்தான் திலீபனின் தோளோடு தோள் நின்ற தோழர்களும் அவன் நேசித்த பெரும் தலைவனும் விதையாகிப்போனார்கள்.

இன்றோ நல்லூர் முன்றலில் அவன் உண்ணாநோன்பிருந்து உயிர் ஈந்த இடம் பலரின் அரசியல் களமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஈனர்களின் கைகளில் அவன் உடல் அகப்படாதிருக்கட்டும் ஏனெனில் சமாதியில் கூட அவனை அமைதியாயிருக்க விடமாட்டார்கள் இந்த ஈனர்கள்…

-சு.பிரபா