என் தோழர்களுக்கு…

நீண்ட காலமாக சிங்கள இனவாதப் பிடிக்குள் சிக்கி அல்லல் உற்றுக் கொண்டிருக்கும் எனது மக்களுக்கு, என்னால் முடிந்தவரை சேவை செய்ய விரும்புகின்றேன். ஆதரவற்று தினம் தினம் மடிந்து கொண்டிருக்கும் எனது மக்களுக்கு ஒரு தோழனாக, தந்தையாக, சகோதரனாக, நண்பனாக இருக்க விரும்புகிறேன்.

இயக்கம் என்பது அவர்களைப் பாதுகாக்கும் வெறும் இராணுவ அமைப்பு மட்டுமல்ல; அவர்களுக்கு நல்வழி காட்டி; வாழ்வை வளப்படுத்தும் அமைப்பும் கூட.

இயக்கம் என்பது மக்களுக்கு அமைதியையும், வாழ்வையும், வாழ்க்கையில் நம்பிக்கையையும் கொடுக்கின்ற ஒரு அமைப்பாக விளங்க வேண்டும். எந்தக் கட்டத்திலும் மக்களுடைய சுதந்திரத்திற்கோ, வாழ்வுக்கோ இடையூறாக அமைந்துவிடக்கூடாது.

நாம் ஆயுதங்களை ஏந்தியிருப்பது மக்களுக்கு ஓர் சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே. அதே ஆயுதங்கள் எமது மக்களுக்கே அச்சுறுத்தலாக ஒரு போதும் மாறிவிடக்கூடாது.

விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் ஒவ்வொரு இளைஞனும் தான் யாருக்காக போராடுகின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயுதம் ஏந்துகின்ற ஒவ்வொரு இளைஞனும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு உள்ளானா என்பதை இயக்கம் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சில சமூக விரோத சக்திகள் ஊடுருவச் செய்வார்கள். இவ்விடயத்தில் இயக்கம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

மக்களுடைய சுதந்திரத்திற்காகப் போராடும் இயக்கம் இயல்பாகவே மக்களை வழிநடத்திச் செல்லும் தலைமையையும், அதிகாரத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

அவ்வதிகாரமானது ஒரு குடும்பத் தலைவனுக்குரிய பொறுப்பையும், கடமையையும், தலைமையையும் கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, மக்களுக்கு எஜமானர்களாக மாறிவிடக்கூடாது.

பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் கையிலெடுத்துப் பழகும்போது அது ஒருவகையில் சர்வாதிகாரத் தன்மைக்கும் இட்டுச் செல்லும். ஆனால் மக்களை நேசித்து, மக்களுடனேயே வாழும், மக்களின் அடிப்படைத் தேவையைப் புரிந்து கொள்ளும் ஒரு இயக்கம் சர்வாதிகாரத் தன்மைக்கு செல்ல முடியாது.

இயக்கத்தில் தலைவர்களாக உள்ளவர்கள் மக்களில் சகல தரப்பினருடனும் தொடர்புடையவர்களாகவும், சகலருடைய கருத்துக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

எல்லோரையும் எமது மக்களாகக் கருதுபவர்களாகவும், எல்லோருடைய நல்வாழ்வுக்காகவும்தான் போராடுகின்றோம் என்பதை உணர்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

தளபதி கேணல் கிட்டு 23.06.1991 எழுதிய மடலிலிருந்து…