எமது மக்களைப் பீடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும்….!

எமக்கு முன்னால், காலவிரிப்பில், ஒரு புது யுகம் எமக்காகக் காத்திருக்கிறது. எமக்குப் பின்னால் கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப்போகும் புது யுகத்தில் காலடி வைக்கிறது.

இப்புது யுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்குமாகப் போராடிய மக்களுக்குச் சொந்தமானது. இப்புது யுகத்தில், எமது மக்களின் நெடுங்காலக் கனவு நிறைவுபெறும். இத்தனை காலமும் எமது மக்களைப் பீடித்த துன்பமும், துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமது மண்ணுக்கு விடுதலை கிட்டும். எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் போராடி மடிந்தார்களோ, அந்தப் புனித இலட்சியம் இப்புது யுகத்தில் நிறைவுபெறும்.

இந்த மகத்தான வெற்றி முழு உலகத்தையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. இது ஒரு சாதாரண போரியல் சாதனையல்ல. போரியற்கலையில் ஒரு ஒப்பற்ற உலக சாதனையாகவே இவ்வெற்றி கருதப்படும். இந்த வெற்றியின் விஸ்வரூபப் பரிமாணம் கண்ட எமது எதிரி மட்டுமல்ல, எதிரிக்குப் பக்கபலமாக நின்று, பயிற்சியும், ஆயுதமும், பண உதவியும் வழங்கிவந்த உலக நாடுகளும் மலைத்துப் போய் நிற்கின்றன.
ஓயாத அலைகள் மூன்றாகக் குமுறிய இப்பெருஞ்சமர் ஒரு சில நாட்களில் இமாலய சாதனையைப் படைத்தது.

கடலோரம் கட்டிய மண்வீட்டுக்கு நிகழ்ந்த கதிபோலச் சிங்கள அரசின் போர்த்திட்டத்தை விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் அடித்துச் சென்றுள்ளது. இச்சமரில் நாம் ஈட்டிய மாபெரும் வெற்றியில் விளைவாக இராணுவச் சமபலம் எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கின்றது. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையைப் பெற்றுவிடவேண்டுமென்ற சந்திரிக்காவின் ஐந்தாண்டு கால பகீரத முயற்சியை நாம் ஒரு சில நாட்களில் முறியடித்துள்ளோம்.

மனித உரிமைகளை மதியாத சிங்கள இனவாத அரசியலும், அதன் தமிழர் விரோதப் போக்கும் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு மாற்று வழியையே திறந்து வைத்திருக்கின்றது. அதுதான் போராடிப் பிரிந்து சென்று தனியரசை உருவாக்கும் ஒரே வழி. இந்த வழியில்தான் சிங்கள தேசம் தமிழினத்தை தள்ளிக்கொண்டிருக்கின்றது.

சுதந்திர தமிழீழத் தனியரசே எமது தேசியப் பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்து விட்டார்கள். எமது மக்களின் சுதந்திர அபிலாசையை சிலுவையாக தோளில் சுமந்து, இத்தனை ஆண்டுகளாக எமது இயக்கம் இரத்தம் சிந்திப் போராடி வருகின்றது. இன்று எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில், ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்துவிட்டோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
�(1999ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து….)

எரிமலை (வைகாசி 2000) இதழிலிருந்து

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”