உங்களோடு சில நிமிடங்கள் …

(முன்னாள் விடுதலைப் போராளியின் மனக்குமுறல்.)

புலம்பெயர் தமிழர்களே.!!!

14254நான் ஒரு முன்னாள் போராளி உங்களுடன் ஒரு நிமிடம் போருக்கு பின்னர் மௌனித்து போன எனது பேனாவை மீண்டும் தூசி தட்டி உங்களுக்காய் எடுக்கிறேன் உங்களுடன் பேச நிறைய விடயங்கள் இருந்தாலும் அதனை கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். உணர்ச்சி அரசியலுக்கும் சினிமா மோகத்துக்குள்ளும் மூழ்கிப்போய் கிடக்கும் உங்களிடம் எங்கோ ஒரு மூலையில் போராளிகளின் உணர்வுகளும் தூசி படிந்து போய்க்கிடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிற படியால் எங்களின் உணர்வையும் வலிகளையும் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறேன்.

2009ம் ஆண்டுக்கு பின்னர் மௌனித்து போனது எங்கள் போராட்டம் மட்டுமல்ல பல போராளிகளின் வாழ்வும் தான் இந்த வாழ்க்கை போராட்டத்தில் பல போராளிகள் தற்கொலைக்கும் பல போராளிகள் மர்மமான மரணத்துக்கும் ஆளாகிப்போயிருக்கிறார்கள். தமிழினி தொடக்கம் ராகுலன் வரை தொடரும் மர்ம மரணங்களுக்கு விடைகான முடியாத ஒரு இனமாக இருப்பது கவலைக்குரிய விடயமே வெறுமனே ஊடகங்களின் செய்தியாக தான் ஒவ்வொரு முன்னாள் போராளிகளின் மரணங்களும் இருக்கிறதே தவிர நியாயத்தை அதனை வெளியுலகுக்கு ஆணித்தரமாக வலியுறுத்தி புனர்வாழ்வில் நடந்த மறைமுக அழிப்பை தட்டிக்கேட்க நாதியற்றவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் எனபதை மன வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அண்மையில் ஒரு முள்ளந்தண்டு பாதிக்கப்படட போராளி ஒருவரை சந்திக்கும் போது விரைவில் தலைவர் வந்தால் போராட்டம் தொடங்கினால் என்னை மாதிரியான ஆட்களின் சாவுகள் வீண் சாவாக அமையாது கரும்புலியாக போனால் சாவுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று தனது மன ஆதங்கத்தை பதிவு செய்தார். வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தொடரும் போருக்குள் சாவு நிகழ்ந்தால் அது ஒரு சரித்திரமாகவும் எமது இனத்துக்கானதாகவும் இருக்க வேண்டும் என்ற மன ஓர்மம் இன்றும் எம்மை விட்டு போகவில்லை.

ஆனால் ” இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொல்” என்ற நிலையில் தான் முன்னாள் போராளிகளின் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இவற்றுக்கு மேலாக எங்களை அமியின் ஆள் , அவற்றை ஆள் இவற்றை ஆள் என்று அடையாளத்துடன் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்கு எங்களுக்கு வழங்கும் புதுப்பட்டம் அது. அதைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை ” என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே ” என்ற நம்பிக்கை மட்டும் எங்கள் உளவுரணை இன்னும் கூட்டிக்கொண்டு இருக்கிறது.

தமிழீழ வைப்பகத்தில் மாதாந்த கொடுப்பனவை பெற்று போராட்டமே வாழ்வாக வாழ்ந்த எங்களின் வாழ்வு இன்று பூச்சியமாக இருக்கிறது போராட்டத்தையும் தேசியத்தையும் காட்டி மக்களை ஏமாற்றிய அரசியல் வாதிகளின் வாழ்வு எப்படி இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கனடா மற்றும் ஐரோப்பாவில் இருந்து 5 கோடிக்கு மேல் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து 5 கோடி மேலதிகமாக வைத்திருந்த பணம் கொடுக்க முன்வந்த நீங்கள் அதனை புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்படட போராளிகளுக்கு கொடுக்க முன்வந்திருந்தால் அவர்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருப்பார்கள்.

நீங்கள் 5 கோடி சேமிக்க எத்தனை மாவீரர்கள் மரணித்தார், எத்தனை போராளிகள் தங்கள் அவயவங்களை இழந்தார்கள், எத்தனை பெண்கள் விதவையானார்கள். நீங்கள் அனுப்பிய 5 கோடியும் தேர்தல் சுவரொட்டிகளாகவும், பசையாகவும் மாற்றப்படடதோடு கஜேந்திரனுக்கு வீடாகவும் மாறியது. உங்களிடம் நாங்கள் எதனையும் எதிர்பார்க்க வில்லை போராட்டத்தின் அடுத்த கட்டம் தலைவரால் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது அதை மட்டும் சிந்தித்து செயற்படுங்கள் ஈழத்தில் இருக்கும் அரசியல் வாதிகளை நம்பி போராட்டம் கையளிக்கப்படவில்லை சம்மந்தனிடமோ, சுமந்திரனிடமோ, கஜேந்திரகுமாரிடமோ, ஸ்ரீதரனிடமோ, அனந்தியிடமோ அல்ல. இவர்கள் தமிழ் மக்களுக்கு எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது ” மலடனை பிடித்து பிள்ளை பெறு” என்பதுக்கு சமனாகும்.

இவர்கள் பேச்சி மட்டும் இன உணர்வு இருக்கிறதே தவிர உள்ளத்தில் இல்லை என்பதே உண்மை. இதனை புரிந்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி எங்கள் பயணத்தை தொடர்வோம்.

” மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி இழிவாக வாழோம் தமிழீழ போரில் இனிமேலும் ஓயோம் உறுதி”

(www.eelamalar.com)