ஒன்பது வருடங்கள், 131 விகாரைகள்-எங்கு?, யாரால்?

வட தமிழீழம், 2009 இல் யுத்தம் முடிந்ததன் பின்னர் இதுவரையான 9 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் மட்டும் புதிதாக 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம்களிற்குள் அமைக்கப்பட்ட விகாரைகள் இந்த கணக்கில் உள்ளடங்கவில்லை. இந்த அதிர்ச்சி புள்ளிவிபரத்தை வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள், வடக்கில் திட்டமிட்டு சிங்கள, பௌத்த மேலாதிக்கம் திணிக்கப்படுவதை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிற்கிடையிலான சந்திப்பின் போதே இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். மறுபுறம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

போருக்கு பின்னரான ஒன்பது வருடங்களில் வடக்கில் மட்டும் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 6, கிளிநொச்சியில் 3, மன்னாரில் 20, வவுனியாவில் 35, முல்லைத்தீவில் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வட பகுதியிலுள்ள ராணுவத்தினரின் அதிகளவானோருக்கு விகாரைகளை கட்டுவதும் அவற்றை பராமரிப்பதும் நாளாந்த பணியாக வளங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் தலைமைகள் வாய் திறக்காமலிருப்பது குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இனிமேலாவது வடக்கில் நடக்கும் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.