கச்சத்தீவு ஆலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி தர வேண்டும்

downloadகச்சத்தீவில் நடக்கும் அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று, இந்திய மத்திய அரசுக்கு தமிழக தலைமை செயலாளர் பி.ராமமோகனராவ் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வெளிநாடுகள் உறவு செயலாளர் எஸ்.ஜெய்ஷங்கருக்கு தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

இராமேசுவரம் வேர்கோடிலுள்ள தூய ஜோசப் தேவாலயத்தின் பங்குத்தந்தை சகாயராஜ் எழுதிய கடிதத்தை இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் எனக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய அந்தோணியார் தேவாலயத்தின் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 7-ம் திகதி நடைபெற இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 100 பக்தர்கள் ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே அங்கு அவர்கள் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். கச்சத்தீவிலுள்ள அந்தோணியார் ஆலயம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் மதம் மற்றும் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் அந்தோணியார் ஆலயத்தில் நடக்கும் விழாவிற்கு தமிழகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் யாத்திரிகர்களாக அங்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இதற்கான பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசுடன் கலந்து பேசி தமிழக அரசு செய்து வருகிறது.

அந்த தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிய ஆலயம் கட்டுவதற்கு முன்மொழிந்த போது, தமிழகத்திலிருந்து மீனவர்கள் பலர், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் கலாசார தொடர்புடைய பாரம்பரிய ஆலயம் என்பதால், அந்த ஆலயத்தை இலங்கை மற்றும் இந்திய அரசும் இணைந்து கட்ட வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதுதொடர்பாக இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடந்த 14-5-2016 அன்று கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தை இடித்துவிட்டு மறுபடி அதைக்கட்ட இலங்கை அரசு தனிச்சையாக எடுத்திருக்கும் முடிவை தமிழக மீனவர்கள் எதிர்ப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும் அவர் அந்த கடிதத்தில் தமிழக மீனவர்களின் கலாசாரத்தின் ஒரு பங்காக கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயம் அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அதில், கச்சத்தீவை மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது ஆகிய விஷயங்களை தமிழக முதலமைச்சர் ஸ்திரமாக இந்திய அரசிடம் எடுத்து வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த பின்னணியில், தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் உள்ள அந்த அந்தோணியார் தேவாலயத்தில் புதிய கட்டிட அர்ப்பணிப்பு விழா மதம் மற்றும் கலாசார ரீதியில் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு மாற்ற முடியாத உரிமையாக அமைந்துள்ளது. எனவே கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள தூய அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டிட அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக மீனவர்களுக்கு தடையில்லா அனுமதியை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்த விழா 7-ம் திகதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கு தேவையான பாதுகாப்பு, உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(www.eelamalar.com)