FotorCreated

கட்டுச்சோறு

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு
அம்மா விரைந்திடுவாள்
என்னைத்தேடி
பழுதாகி விடும் என்று
வெந்தயக்குழம்பு
மணக்க மணக்க
பெரிய வெங்காயத்துடன்
வதக்கியெடுத்து
நூல் துணியிலே
கட்டி வருவாள் என் தாய்

கம கம என்ற வாசம்
மூக்கினை
துளைக்கும்
புழுதியிலும்
வியர்வையிலும்
வரும் நாற்றம்
அம்மாவின்
சோற்றுப் பொட்டலத்தில்
வரும் வாசனை மறைத்து விடும்

பல நாள் அலைந்திருப்பாள்
காணாமல் அழுதிருப்பாள்
வெறுத்து விடவில்லை அவள்
தினம் எனைத்தேடி
ஒரு நாள் ஓரிடமாக
நடந்து கால் வலிக்க
பெற முன் கண்ட
சுமையை விட
என்னைக்காண
அலைந்த சுமை ஏராளம்

கொண்டு வந்த
ஒரு பொட்டலத்தில்
பத்துப்பேரின்
பசியாறும்
அதில்
வெறும் சோறு மட்டுமல்லவே
அன்பென்ற நெய்யுமல்லவா
ஊற்றியிருக்கிறாள்
என் தாய்

நான் போராடுகிறேன்
நாட்டுக்காக
ஆனாலும்
நான் வெறும்
கருவியே
என்னை
முன்னின்று
இயக்குபவள் என் தாயல்லவா
போ மகனே
என தட்டிக்கொடுத்தவள்
வீரமா
கருவியான நான் வீரனா
என் தாயே
உண்மை வீரம்
கொண்ட மங்கை

அம்மாவின்
கையால் உண்ட
அந்த
ஒரு வேளை சோறு
திரும்ப வரும் வரை
மணத்துக்கொண்டுதான்
இருக்கும்

எத்தனை வருடம்
ஆகுமோ யான்
அறியேன்

-பவித்ரா நந்தகுமார்