கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான கரும்புலிகளின் ஊழித்தாண்டம்.!!

தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பின் (1990 இல்) எம் மக்கள் மீதான தாக்குதலில் இராணுவத்தின் நேரடி தாக்குதல் எதுவும் ஏற்படாது, புலிகள் கவசமாக இருந்து மக்களை பாதுகாத்தனர். ஆன போதும் சிங்கள விமான குண்டுவீச்சுக்கு அடிக்கடி மக்கள் இலக்காகி பெருமளவில் கொல்லப்பட்டனர்.

இதில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், குடியிருப்புகள் எதுவும் விதிவிலக்கில்லாமல் சிங்களத்தால் பல நூறு கிலோ குண்டுகளைப் போட்டு வகை தொகை இன்றி வயதோ அல்லது பால் வேறுபாடோ இன்றி மக்களை கொன்றனர். இந்தக் குண்டு வீச்சு விமானங்களை அவ்வப்போது புலிகள் சுட்டு வீழ்த்திய போதும் தொடர்ந்து அதன் கோரத்தாண்டவம் குறைவில்லாது அரங்கேறியது.

அதனால் அவர்களில் தங்குமிடத்திலேயே வைத்து ஒட்டு மொத்தமாக அழிக்க புலிகள் முடிவெடுத்தனர். பலசுற்றுப் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்ட கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தையும், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தையும் ஒரே நேரத்தில் தாக்க புலிகள் முடிவெடுத்தனர்.

அந்த நேரத்தில் இதற்கான வேவுப் பணியில் புலிகளின் உளவுத்துறையினரும் ஈடுபட்டிருந்தனர். உளவுப் போராளிகளின் கடும் முயற்சியால் விமானத் தளத்தினுள் நுழைந்து வேவு பார்ப்பதற்கான இடம் ஒன்று இனம் காணப்பட்டது. சிங்களத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தை கொண்ட பெரும் இலக்கை புலிகள் அழிக்க தெரிவு செய்திருந்தனர்.

பல தடவை வேவுப் புலிகள் தளத்தினுள் நுழைந்து தகவலை திரட்டியபின் பத்திரமாக தளம் திரும்பிய பின் 15 பேர் கொண்ட கரும்புலிகள் அணியொன்று தெரிவு செய்யப்பட்டு பல விவாதங்களுக்கு பின் துல்லியமான திட்டமிடலின் இறுதியில், அதற்கான மாதிரி ஒன்றை உருவாக்கி போராளிகளுக்கு கடும் பயிற்சியின் பின் தாக்குதலுக்கான நாளும் குறிக்கப் பட்டு கரும்புலிகள் இலக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர்.

இலக்கை அடைந்த பின் போராளிகளுக்கு மேலதிக கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்ட பின் ஒரு அணி ரோசா (ROSA) பஸ் ஒன்றில் வந்து இறங்கியது இன்னொரு அணி ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர். அந்த நேரத்தில் அந்த மைதானத்தில் சிங்கள இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதை புலிகள் அந்த நேரத்தில் எதிர் பாக்கவில்லை.

அணிகளும் இலக்கு நோக்கி நகர்த்தப்பட்ட வேளை, மீண்டும் தளம் திரும்ப முடியாத நிலை.! அதனால் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த புலிகள் 24/07/2001 அதிகாலை 3.00 மணிக்கு கழிவு நீர் செல்லும் மதகு ஒன்றின் ஊடாக உள் நுழைந்தது ஒரு அணி விமானப் படைத்தளத்தினுள்ளும், இன்னொரு அணி சர்வதேச விமானத் தளத்தினுள்ளும் நுழைந்து தயாரானது.

புலிகள் தலைமையால் போட்ட திட்டத்துக்கு அமைய முதலாவது தாக்குதல் மின்சாரத்தை தடை செய்யும் நோக்கில் அங்கிருந்த ரான்ஸ்போமர் மீது தாக்குதல் மேற்கொண்டு அந்த பிரதேசத்தை இருட்டில் மூழ்கடித்தபின் கரும்புலிகளின் ஊழித்தாண்டவம் ஆரம்பமானது. மின்னல் வேக தாக்குதல், ஆனால், மிகவும் நிதானமாக தமது இலக்கை அழித்தனர் கரும்புலிகள்.

இதில் சிங்கள விமானப் படைத்தளத்தில் நின்று சண்டை இட்ட போராளிகளுக்கு பார்ப்பதெல்லாம் இலக்கே. காரணம் அவைகள் படைத்துறை சார்ந்தவை. ஆனால் சர்வதேச விமான நிலையத்துக்குள் நுழைந்த போராளிகளுக்கு இறுக்கமான இரண்டு உத்தரவுகள் தலைவரால் போடப்பட்டிருந்தது. ஒன்று அங்கு வந்து போகும் எந்த சாதாரண பயணிக்கும் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது. இரண்டு சிங்கள அரசின் விமானங்களைத் தவிர வேறு எந்த நாட்டு விமானங்கள் மீதும் ஒரு துப்பாக்கிச் சூடும் பட்டுவிடக்கூடாது என்பதே தலைவரின் இறுக்கமான கட்டளை.

அது போலவே எந்த பயணிக்கோ அல்லது விமானங்களுக்கோ எதுவும் நடவாதும் தலைவரின் கட்டளையை சிறிதளவும் பிசகாது நிறைவேற்றி இருந்தனர் எம் வீரர்கள். ஒரு படை கட்டமைப்பில் பிரதானமானது கட்டளைக்கு கீழ் படிதலும், அதை நிறைவேற்றுவதும். உலகின் எல்லா இராணுவ வரலாறுகளையும் ஆராய்ந்தால் புலிகளைப் போல ஒழுக்கமானவர்களும், கட்டளைகளுக்கு கீழ்படிபவர்களும் இல்லை என்பதே என் வாதம்.

சண்டை தொடங்கியதும் சிங்களத்தின் 500 பேர் கொண்ட அதி சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவத்தினர் கொண்டு வந்து களத்தில் இறக்கப்பட்டனர். இவர்களை எதிர்த்து 15 கரும்புலிகள் சண்டையிட்டபடி தமது இலக்குகளையும் அழித்தனர். தம்மிடம் இருந்த ரவைகள், எறிகணைகள் தீரும் வரை காலை 8.30 வரை சண்டையிட்டனர்.

அதன் பின் எஞ்சியோர் தம்முடலில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்து அதன் மூலமும் பெரும் சேதங்களை விளைவித்தனர். இந்த தாக்குதலில் 1 எம்ஐ-17 உலங்குவானூர்தி, 2 எம்ஐ-24 உலங்குவானூர்தி, 3 கே-8 பயிற்சி விமானங்கள், 2 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 சண்டை விமானம், 3 ஏர் பஸ், சேதமாக்கப்பட்ட வானூர்திகள்: 5 கே-8 பயிற்சி விமானங்கள், 5 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 கிபிர் சண்டை விமானம், 2 ஏர்பஸ், 1 இராணுவ வானூர்திகள் போன்றன அழிக்கப்பட்டன..

இதில் குறித்த நேரத்தில் சண்டை ஆரம்பமாகி இருந்தால் இன்னும் அதிகமான சேதத்தை உண்டு பண்ணியிருப்பார்கள் புலிகள். அதிகாலையின் பின்னும் சண்டை நீடித்தமையால் வெளிச்சம் காரணமாக எதிரிக்கு சாதகமான நிலை இருந்த போதும் புலிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை விட கூடுதல் சேதத்தை உண்டு பண்ணியபின் தாக்குதலை நிறைவு செய்தனர்.

பெரும் வெற்றியை பெற்று தந்து எம் மக்களின் மனங்களில் நிரந்தரமாக குடிகொண்டார். இந்த தாக்குதலில் சிங்களம் மட்டுமல்ல உலகமே உறைந்து போனது. தமிழர் வீரம் கண்டு உலகம் வியக்க, தமிழர் தலை நிமிர்ந்தனர். இந்தத் தாக்குதலில் புலிகளின் இராணுவ வல்லமையை பறைசாற்றி நின்றது..!!

– நினைவுகளுடன் துரோணர்.