“கருணாநிதி ஏன் என்னை திருப்பி அனுப்பினார்?” – பார்வதி அம்மாள் வேதனை.

வல்வெட்டித் துறை: “சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?” என்று வேதனையுடன் பார்வதி அம்மாள் கேட்டார்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவுக்குப் போய், சிகிச்சைக்காக உரிய விசா பெற்று சென்னை வந்து, விமானத்தைவிட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் மலேசியா போய், ஒரு மாதம் கழித்து தன் சொந்த மண்ணுக்கு நொந்த மனதுடனும் மோசமடைந்த உடல் நிலையுடன் வந்து சேர்ந்துள்ளார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் எம்பியும்,  தலைவர் பிரபாகரனின் உறவினருமான எம்கே சிவாஜிலிங்கம் அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்.

வல்வை மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் எ மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் தமிழ்நெட் செய்தியாளர் விசாரித்ததற்கு, “முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். ஓரளவு சாப்பிடவும் ஆரம்பித்துள்ளார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர்” என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.

பார்வதி அம்மாளிடம் பேசியபோது, “நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் திருப்பி அனுப்பினார்?” என்று வேதனையுடன் கேட்டார்.

காலைத் தொட்டு வணங்கும் சிங்கள செய்தியாளர்கள்!

இதற்கிடையே, வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்து பார்வதி அம்மாளை பார்த்துவிட்டுச் செல்கின்றனர் கொழும்பிலுள்ள சிங்கள செய்தியாளர்கள் பலரும். அவர்கள் பார்வதி அம்மாவின் காலைத்தொட்டு வணங்கி, நலம் விசாரித்துவிட்டு கண்ணீருடன் திரும்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது என்றும் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.