களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன்
தமிழீழ விடுதலைப் புலிகள்

தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பருதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்), 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்களஅரசின் உளவுப்பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.

தனது இளமைக்காலத்தில் 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காகப்
போராடத் தொடங்கிய கேணல்.பருதி அவர்கள் 2003 ஆம் ஆண்டிற் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புக்கமையப் பிரான்சு நாட்டின் கிளைப் பொறுப்பை ஏற்றுத் தனது இறுதிமூச்சு வரை விடுதலைக்காகவே உழைத்தார்.

அவர் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்த போதும், எமது விடுதலையமைப்பின் கட்டமைப்பையும் கட்டளைகளையும் முழுமனதுடன் உயிரினும் மேலாக ஏற்று மதித்துச் செயற்பட்ட மாவீரனாவார். முள்ளிவாய்க்காலுடன் எமது போராட்டம் முற்றுப்பெற்று விடவில்லை என்ற உண்மையை ஆணித்தரமாக மனதிலிருத்தி, அதை அனைவரும் உணரும் வண்ணம் விடுதலை நோக்கிய தனது செயற்பாடுகளை எதற்கும் அஞ்சாது முழுமூச்சாக முன்னெடுத்தார்.

2011 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் அவரது பணியக வாயிலில் வைத்து, எதிரிகள் அவரை வாளால் வெட்டிக் கொல்ல முயன்றார்கள். அதிலே படுகாயங்களுடன் உயிர் தப்பிய கேணல்.பருதி அவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பணியை அச்சமேதுமின்றி முன்னெடுத்தார்.

முள்ளிவாய்க்காலில் எமக்கேற்பட்ட இழப்புகளைக் கண்டு சோர்ந்து விடாமல், தனக்கு நேரக்கூடிய ஆபத்துக்களெதையும் பொருட்படுத்தாது, எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன், தனது பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு, தானே எல்லாவற்றுக்கும் முன்னின்று அயராதுழைத்தார். இறுதிக்கணம் வரை அவர் ஓயவில்லை. அதனாலேயே அவரை எதிரிகள் இலக்கு வைத்தார்கள்.

கேணல்.பருதி அவர்கள் தாயக விடுதலைப் பணியிலிருந்த போது, அவரது பணியக வாயிலிலேயே வைத்து எதிரிகளாற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார். இம்மாவீரனின் இழப்பு எமதமைப்புக்குப் பேரிழப்பாகும்.

முள்ளிவாய்க்காலை அடுத்துப் புலம்பெயர் நாடுகளிலும், எமது விடுதலைப் போராளிகளை இலக்கு வைத்துச் சிங்கள அரசானது தனது கொடுங்கரங்களை நீட்டியுள்ளது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கெதிராகத் தனது யுத்தப்
பேரிகையைக் கொட்டி ஆர்ப்பரித்து, மீண்டும் யுத்தப் பிரகடனம் செய்துள்ளது. இதை வெறுமனே பார்த்துக் கொண்டு நாம் வாளாதிருக்க முடியாது. இதன் மூலம் சிங்களத் தலைமையானது சிங்கள மக்களையும் மீண்டும் யுத்தத்துக்குட் தள்ளியுள்ளது. தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாத சூழல் நிலவும்வரை, சிங்களத் தலைமைகளும் சிங்கள மக்களும் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள அரசானது தமிழர்களின் பலத்தைச் சிதைத்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையே, அவர்களின் இந்தக் கொடுஞ்செயல் தௌளத்தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

தமிழர்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகளையும் சுயநலப் போக்குகளையும் பயன்படுத்தித் தமிழினத் துரோகிகளின்
துணையுடன், புலம்பெயர் மண்ணிலும் சிங்கள அரசின் உளவுப்பிரிவினர் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர். தமிழர்கள் நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்பதன் மூலமே நாம் சிங்கள அரசின் சதிச்செயல்கள் யாவற்றையும் முறியடித்துத் தாயக விடுதலையை வென்றெடுக்க முடியும். பிரிவினைகளை மறந்து எமது பொது எதிரிக்கெதிராக ஒன்றுபடுமாறு தமிழ்மக்கள் அனைவருக்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதுவே மாவீரன் கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவினூடாகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள செய்தியுமாகும்.

மாவீரன் கேணல்.பருதி அவர்கள் இறுதிவரை கடமையே கண்ணாக இருந்தார். அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி
அயல்நாட்டுச் சிறையிலே கழிந்தது. அவரது ஓய்வு நேரங்களும் விடுதலைப் பணியிலேயே கழிந்தன. புலம்பெயர்
மண்ணிலும் மிகமிக எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார். தனிப்பட்ட குடும்ப வாழ்வுக்காக நேரம் ஒதுக்காமற் தாயக விடுதலையையே எப்போதும் முன்னிறுத்தி வாழ்ந்த, அம்மாவீரனை இழந்து தவிக்கும் அவரது அன்பு மனைவிக்கும் ஆசை மகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாமும் அவர்களது துயரத்திற் பங்கு கொண்டு அவர்களது கரங்களை இறுகப்பற்றி ஆறுதல் கூறுகின்றோம்.

தன்னலமற்ற ஒரு விடுதலைப்போராளியாக, ஒரு தளபதியாக, ஒரு பொறுப்பாளராக அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவின் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சுடனும் வீறுடனும் முன்னோக்கி முடுக்கி விட்டுள்ளார். விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரன் கேணல்.பருதி அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தலைசாய்த்து எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்மாவீரனின் கனவுகள் நனவாகும் வரை, நெஞ்சிலெரியும் விடுதலை நெருப்போடு, நிழலாடும் அவரது நினைவுகளையும் சுமந்து தாயக விடுதலையை வென்றெடுக்கத் தளராது போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”