காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்- (08)

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (71)
-இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (73)
-அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.

காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்
மாணத் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (74)
-கவின் –அழகு; மாணம் –மாட்சிமை.

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (75)

உவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (76)
-உவட்டுதல் –அருவருக்கத்தக்க

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (77)
-மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (78)
-குழுமாடு –காடையர்.

நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (79)
-வன்புணர்ச்சி -கற்பழிப்பு

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (81)
-திரை –அலை.

-அன்புடன்
அகரம். அமுதன்