காதல் தேசமே…!

வானில் குழைத்தநற் சந்தணத்தில் – இட்ட
வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த – பின்னர்
வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனில்இழைந்த நற்பூ தழுவி – வந்த
தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன்…

அந்த ஆசையை ஊரெங்கும் சொல்லிவிடு
மேனி கருத்து மயங்குகிறேன் – எந்தன்
மெய்யும் துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே – னிந்த
ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சத்துருக்கள் – எந்தன்
தாயென் மொழிதனைக் கொல்லுகிறார்
ஆ.இனி என்னதான் காதலென்று – என
தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்
பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே – உயிர்
போலும் மிகுந்தொரு பாசமுற்றேன்…

வானில் பறக்கும் பறவையென – எமை
வந்து தழுவிடும் காற்றுனைப்போல்
தேன்நிலவோடும் சுதந்திரத்தை – எங்கள்
தெள்ளு தமிழ் தேசம் கொள்ளவெனப்
போயின்னல் தீரப் புது உலகம் – செய்யப்
பூமியின் மேல் வெகு காதலுற்றேன்
மானின் விடுதலை மக்கள் பெற – மயி
லாடும் களிப்பினை நித்தம்கொள்ள
தாய்நீ தமிழே உன்செல்லமகன் – தமிழ்
தாய்நில மீட்பினில் காதல்கொண்டேன்.
நானிலத்தில் இந்தக் காதல்வென்று – அதில்
நானும் பிழைதிடக் கூடிடுமோ
வாநீ தோழா, தமிழீழ மண்ணை – எங்கள்
வாழ்வு செழித்திடச் செய்குவையோ?!
மாநிக ரற்றநம் மண்ணினையே – மீட்டு
மாளும்தமிழ் பெற்ற பிள்ளைகளை
ஏனின் னும்விட்டு இருந்தனையோ – தம்பி
எல்லாம் அழியமுன் காவல் கொள்ளு
தாநீ எமதீழ மண்ணையென – ஒரு
தர்ம நிலைகொண்டு கேட்டிடுவோம்
போநீ யேதுமிலை என்றுசொன்னால் – பஞ்ச
பாண்டவராய் நீதி பார்த்திடுவோம்.

“கப்டன் ஜாக்ஸ்பரோ”