கால்நூற்றாண்டுக்கு மேலாக சிறையில் வாடுவோரையும் விடுதலைசெய்யவேண்டும் – முத்தரசன் வலியுறுத்து!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை விடுவிக்கும்போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரையும் விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து 02.01.17 அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் கோரியதை கவனத்தில் கொண்டு அவர்களையும் இப்பட்டியலில் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும். அதுபோல பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 45 இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விசாரணைக் கைதிகளாகவே நீண்ட நெடுங்காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளையும் சேர்த்து விடுதலை செய்ய வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் மீதும், அமைப்பினர் மீதும் தேசத் துரோக வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குமரியில் அண்மையில் போராடிய மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்ற அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவை அனைத்தையும் அரசு பரிசீலித்து வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.