காவல்துறை காவலரணை அகற்றக்கோரி பிரார்த்தனை போராட்டம்!

மட்டக்களப்பு – மயிலம்பாவெளியிலுள்ள தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள காவல்துறை  காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர். 31.12.16 சனிக்கிழமை காலை மயிலம்பாவெளியில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள குறித்தகாவல்துறை காவலரணுக்கு முன்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் “காணியை ஒப்படைத்து மக்கள் நல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள், தர்ம நிறுவனத்தின் காணியை ஒப்படைத்து 150 வருட பொலிஸ் தினத்தை பெருமையுடன் கொண்டாடுங்கள், எங்களை அரவணைக்கும் சுவாமி இராமதாஸ் அமைப்பின் காணியை ஒப்படையுங்கள்” போன்ற சுலோகங்களுடனான பதாதைகளை ஏந்தியிருந்தனர். அமைதியான முறையில் பஜனைகளுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலம்பாவெளி பிரதேச மக்கள் கருணாலயம் இல்ல மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயத்துடன் இணைந்ததாக பிரதான வீதிக்கு அருகில் காணப்படும் இந்த காணியை ஒப்படைக்குமாறு, கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்ததாகவும் ஏறாவூர்ப்பற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(www.eelamalar.com)