கிட்டு ஒரு தனி மனித வரலாறு….

நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.

வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிழந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக்கொண்டது. கிட்டு நீ சாகவில்லை. புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.”

தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள் … 1979இன் தொடக்கக் காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித் தளமிட்ட காலம். இக்காலகட்டத்தில்தான் கிட்டு விடுதலைப் போராளியாக வளர்ச்சி பெற்றார். இவரின் இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். வெங்கிட்டு என்பது இயக்கப் பெயர். பின்னாளில் தமிழீழ மக்களால் கிட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

கிட்டு தலைவர் பிரபாகரனிடம் நேரடியாகப் போரியலைக் கற்றார். கிட்டு வேகமும் விவேகமும் உள்ள துடிப்புமிக்க இளைஞர். 1983 மார்ச் 04 அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று சென்றது. அதில் கிட்டுவும் ஒருவர். வீதியில் நிலக்கண்ணி வெடிகளைப் பொருத்திவிட்டுப் பகைவனின் வரவை எதிர்பார்த்து இருந்தனர்.

சிங்கள இராணுவ கவச வண்டிகள் வருகின்றன. அவை நெருங்கும் நேரத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று எதிர்பாராமல் ஓடிவந்து கண்ணிவெடியை மிதித்து வெடிக்கச் செய்து விடுகிறது. வெடித்த மறுகணமே சிங்களப் படையினர் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். பின்வாங்குவது தவிர வேறு வழியில்லை. கிட்டு களநிலை பாதகத்தைக் கருத்திற் கொள்ளாது துணிந்து நின்று தாம் வைத்திருந்த G3 துப்பாகியால் கவச வண்டியைச் நோக்கி சுடுகிறார். சிங்களப் படை செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார் கிட்டு.

1983 சித்திரை இல் இருந்து விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிக்கு இரண்டாவது பொறுப்பாளராகக் கிட்டு அமர்த்தப் பட்டார். 1983ஆம் ஆண்டு இறுதியில் புதிய போராளிகளுக்கான பயிற்சிக்கென இந்தியா வந்தார்.

1984 மாசி மாதம் பயிற்சியை முடித்துத் தமிழீழம் திரும்பிய கிட்டு, குருநகர் படைமுகாம் தாக்குதல் உட்படப் பல தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தார். கிட்டு அண்ணா ஒரு தனி மனித வரலாறு. புலிகளின் ஆரம்ப கால உறுப்பினரும் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவருமான காப்பியநாயகன் கேணல் கிட்டு பிறந்தநாள் இன்று ஆகும்,புலிகளின் தொடக்க கால தாக்குதல் அனைத்திலும் கிட்டுவின் பங்கு அளப்பரியது .

1985 இல் முன்னணி போராளிகள் சிலர் (ராம் புலனாய்வுதுறை பொறுப்பாளர், ராஜேஷ் மன்னார் மாவட்டம் பொறுப்பாளர், கந்தையா, யோகன் மற்றும் பலர்) விலகிச்செல்லல்

1985 தை 09இல் முன்னிலை தளபதி கேப்டன் பண்டிதர், யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சுகந்தன் வீரச்சாவு. என்று ஒரு இறுக்கமான சூல்நிலையில்தான் தலைவர் கிட்டுவை யாழ்மாவட்ட தளபதி பொறுப்பை ஏற்கும்படி சொல்லி அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். ஒரு புறம் இராணுவ நடமாட்டம் மறுபுறம் மாற்று இயக்கங்களின் பொய் வசை பாடல்கள் மற்றும் சிறு தொகை ஆயுதங்களின் இருப்பு என பாரிய சுமையுடன் பொறுப்பை ஏற்று முதலில் ராணுவத்தை முகாமுக்குள் முடக்கினார்.

கிட்டு யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ் காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி அங்கிருந்த பெருந்தொகையையும் படைக் கருவிகளையும் கைப்பற்றினார். யாழ் மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றித் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப் படையை முற்றுமுழுதாக படை முகாம்களில் இருந்து இராணுவம் வெளியில் வராதபடி காப்பரண்கள் அமைக்கப்பட்டு உலக வரலாற்றில் கரந்தடி குழுவினரால் முதல் கட்டுபாட்டு பிரதேசம் யாழ் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டது.

கிட்டுவின் பெயரைக் கேட்டாலே சிங்களப் படை கதிகலங்கிப் போகும். பின்னர் மக்களை ஒன்று திரட்டி வெகுசனப்போராட்டத்தை ஊக்குவித்தார்,போராளிகள் கட்டுப்பாடு என்பதில் மிகவும் கடினமாக நடந்துகொண்டார் பல திறமைகளை கொண்டு இருந்தபோதும் எல்லோருடனும் ஆலோசனை கேட்பார்,ஓவ்வொரு போராளியின் இழப்பின் போதும் யன்னல் கம்பிகளை இறுக பிடித்த்துக்கொண்டு அழுவார் . பின்னர் அந்த போராளி எப்படி இறந்தார் என்பதை அறிந்து எல்லா போராளிகளுக்கும் பாதுகாப்பு பற்றிய விளக்கம் தருவார். ஒருமுறை வெளிமாவட்ட போராளிகள் யாழ் போலீஸ் நிலைய தாக்குதலுக்காக வந்து இருந்த நேரம்ஒருப்போராளியின் தவறுக்காக நான் அடிவாங்கினேன்,பின்னர் அழைத்த்துக்கொண்டு வெளியில் போய் சொன்னார் அவர்கள் வெளியில் இருந்து வந்தப்போராளிகள் ஆதலால் தான் உனக்கு அடித்தேன் மனதில் என்னவோ போல் உள்ளது என்றார் ,அப்படிதான் எங்களை அவர் வளர்த்தார். தமிழீழம் முழுவதும் கிட்டுவின் புகழ் பரவியது.

மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் கிட்டு அக்கறை காட்டினார். நூலகம், தொழில் நிலையங்கள் மலிவு விலைக் கடைகள் எனப் பலவற்றை மக்களின் நலன் கருதி நிறுவினார். அவரின் சமூகப் பணிகள் இவ்வாறு விரிவடைந்து கொண்டேயிருந்தன. 1987 மார்ச்சு இறுதியில் துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலில் தமது காலை இழந்தார் கிட்டு. ஆனால் மன உறுதியை இழக்கவில்லை.

மருத்துவத்திற்காக இந்தியா சென்றார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதாமைகளை இந்தியாவில் இருந்தபடியே எழுதி வெளியிட்டார். இதனால் இந்திய அரசு அவரை வீட்டுக் காவலிலும் பின்பு சென்னை நடுவண் சிறையிலும் அடைத்தது. சிறையில் இருந்தபடியே ‘தேவி’ இதழுக்குப் போராட்டம் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப் போராட்டங்களை நடத்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து தமிழீழத்துக்கு அனுப்பி வைத்தது. 1989ஆம் ஆண்டு சிங்கள அரசுடன் பேச கொழும்பு சென்ற குழுவில் கிட்டுவும் இடம் பெற்றார். அவ்வாண்டே காலத்தின் தேவைகருதி தலைவர் சமாதான காலத்தில் கிட்டுவை சர்வதேச பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு London பயணமானார்.

புலம்பெயர் தேசம் எங்கும் தமிழர்களுக்குப் போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகள் கலைப் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புகளை வெளிநாடுகளில் அமைத்துச் செயல்பட்டார். ஈழ மண்ணைக் கிட்டு மிகவும் நேசித்தார்.

London வந்த கிட்டு அண்ணா புலம்பெயர் தேசத்தில் எல்லோரையும் ஒன்று இணைத்து எமது போராட்டத்திற்க்கு புதுப்பலம் சேர்த்தார் இதை கண்டு பொறுக்க முடியாத ரோவினர் தமது அரசாங்கத்தின் உதவியுடன் London இல் இருந்து வெளியேற்றபடுவதற்க்கான சூழல் உருவாகியது K.Pஇம் K.P சார்ந்தவர்களும் (இவர்கள் விடுதலைப்புலிகளின் பணத்தினாலே காரியம் சாதித்தவர்கள்) கிட்டுவுக்கான ஒரு இருப்புநிலையை உருவாக்கி கொடுக்கவில்லை.

இதன் காரணமாக விரைந்து தாயகம் திரும்பவே கிட்டண்ணாவும் விரும்பினார்.

1993 சனவரி 7இல் கிட்டுவும் 9 புலி வீரர்களும் எம்.வி. அகத் என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கிப் புறப்பட்டனர்.

1993 சனவரி 13இல் இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள பன்னாட்டுக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த இந்தியக் கடற்படை அவர்களை மறித்துச் சரணடையும் படி எச்சரித்தது. 16ஆம் நாள் காலை 6 மணி வரை கெடு விதிப்பதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும், இல்லையயனில் அதிரடிப் படை அவர்களைத் தாக்கிச் சிறை பிடிக்கும் என்றும் எச்சரித்தனர். 16 காலை சரியாக 6 மணிக்கு இரண்டு உலங்கு வானூர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிடுகின்றன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்க தயார் ஆகினர்.

1993 சனவரி 16 காலை 6.30 மணிக்கு இந்தியக் கப்பற்படை பீரங்கிக் குண்டுகளால் கிட்டுவின் கப்பலைத் தாக்குகிறது. சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்பிக்கச் சொல்கிறார் கிட்டு. கேணல் கிட்டுவுடன் லெப்ரினன் கேணல் குட்டிசிறி, லெப்ரினன் கேணல் மலரவன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா, லெப்ரினன் தூயவன், லெப்ரினன் நல்லவன், லெப்ரினன் அமுதன் ஆகியோர் வீரச் சாவைத் தழுவிக் கொள்கின்றனர். “கிட்டு ஒரு தனி மனித வரலாறு. ஆசியாவின் சேகுவாரா!

நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் ஈழ விடுதலை வரலாற்றின் ஒரு காலப் பதிவு.”