தமிழினப் படுகொலைகள்

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 35 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் — 15.05.2020

■1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத 35ம் ஆண்டு ஈரநினைவு நாள் இன்று

நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை

மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது.

குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தாங்கியிருக்கின்றனர். இவர்களிடம் செல்லும் சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய படகுப் பணியாளர் எங்கே இருக்கிறார் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டு வான் இறங்குதுறையிலும் நைனாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் அந்த தப்பிய படகுப்பணியாளரைப்பற்றி தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.

இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.

குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.

இச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

ஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

Kumuthinippadaku

இச்சம்பவத்தில் இறந்தவர் போலகிடந்த ஒரேஒரு படகுப்பணியாளர் மட்டும் உயிர்தப்பிக் கொண்டார். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனாவைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிரதப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். இருபெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். படகுப்பயணிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை அழித்துக்கொள்வதிலும் தேடிக்கொள்வதிலும் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர்.

போர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40,50 கடந்தாலும் போர்களை மீளவும் உயிர்பெற்று பெரும் விளைவுகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தும் அதேபோல விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக்காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மனச்சாட்டிகளை உலுப்பப்வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி இன்று அச்சம்காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

சாந்தலிங்கத்தின் வாக்குமூலம் !

குமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம். தன் அன்பு ம னைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்டபோது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.

நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.பச்சைக் குழந்தையைகூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்.

Kumuthinip Pdakil 2…..

“துவம்சம்” அல்லது நினைவறா நாள் – (15.05.1985)

குமுதினி ………
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்
இனிய தீவினை ……..
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்…….
ஓலையும், ஒடியலும் ………
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்……..
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
“மனிதமே, நேயமென்று”
தன் மடிமீது சுமந்து ……
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..
காலில் நசிபடும் செருப்பு ……..
தீபாவளிப் புத்தாடை …..
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….
எல்லாமே …… எல்லாமே ……….
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் – என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….
மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……
அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ……….
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..

பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….
குடவிலி, குவிந்தா …….
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..
பெருந்துறையீறாய்………
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் …….
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ……..
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..
அலைகடலின் மடியிருந்து ……
வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!

“மா.சித்திவினாயகம்” – மாவிலி” மலரிலிருந்து …

Kumuthinip Pdakil…..

நெடுந்தீவு !

அது யாழ் குடாநாட்டின் நகர மையத்திற்கு மேற்கே 34 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான தீவு.

10 சதுர மைல்கள் பரப்பினைக் கொண்ட தீவில் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பிற இடங்களில் இருந்து குடியேறி தமது வாழ்வினை ஆரம்பித்தனர். இப்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களையும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமான பதிவுகளையும் தன்னுள் சுமக்கிறது.

பொதுவாக இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வோடு ஒன்றித்துப்போன தேவைகள் சார்ந்தவற்றில் தன்னிறைவு கொண்டிருக்கவில்லை. தேவைகளின் பெரும்பாலானவை யாழ்குடா நாட்டுடன் தொடர்பு பட்டிருந்த தீவகத்தின் குறிகட்டுவான் எனும் இடத்திற்கு சென்று நிறைவு செய்தனர்.

தீவையும் குறிகட்டுவானையும் பிரித்து இருந்த ஒன்பது மைல் தொலைவு கடலாகியிருந்ததால் தீவுக்கான அனைத்து தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே நிகழ்ந்தது. மக்கள் தமது அன்றாட கடல் மார்க்கமான போக்குவரத்து ‘குமுதினி” என்ற பெயர் கொண்ட படகு மூலமே மேற்கொண்டனர். குமுதினி….!

தீவு வாழ்மக்களின் வாழ்வோடு ஒன்றித்துப்போன ஒரு இணைபிரியா அம்சமாகிப் போயிருந்தது. நாளுக்கு இரண்டு தடவை தீவின் மக்களை சுமந்து செல்லும் குமுதினி தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாக உயர்ந்து நின்றது. அன்று தீவின் மக்களுக்காக வாழ்ந்த குமுதினி இன்று அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாகி உயர்ந்து நிற்கிறது. 15.05.1985 …….!

அன்றுதான் தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாக சந்தித்தது.

அதன் பின்பு வந்தவைகள் எல்லாம் சோகத்தின் முகாரியாகவே கழிந்தது. அன்றைய காலைப் பொழுதில் குமுதினியும் வழமை போன்று தனது பணிக்கு தயாராகியது.

எப்போதும் போலவே எதிர்பார்ப்புகளாலும் தம்மைச் சுற்றிய நினைவுகளாலும் மனங்களை நிறைத்த மக்கள் கூட்டம் குமுதினியையும் நிறைத்தது. நேரம் காலை ஏழுமணியினைக் கடந்து கொண்டிருந்தது.

காலைப் பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல் நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகல விரித்தது. இயற்கையின் அரவணைப்பில் சுயத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்து இருந்தனர் மக்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை.

அமைதியைக் குலைத்து இறங்கு துறையினை வந்தடைந்த படையினர் குமுதினியை சல்லடை போட்டுத் தேடினர். பயணிகள் கடுமையான விசாரணைக்குள்ளாகினர். சற்று நேரத்தின் முன்பு நிலவிய அமைதி இப்போது பதட்டமாக மாறியது.

முன்பு பல தடவை இத்தகைய கசப்பான அனுபவப் பதிவுகளுக்கு சொந்தமாகிப் போனவர்கள். பழையனவற்றுடன் இதனையும் வரவு வைத்துக் கொண்டனர்.ஆனால் அன்றைய நிகழ்வு மாறானதாகவே அமைந்தது.

இருப்பினும் தமக்கு நிகழப்போகும் அனர்த்தம் எதனையும் அப்பாவியான அவர்களால் அறிந்திருக்க நியாயம் இல்லை.

படையினரின் கெடுபிடிகள் முடிவுக்கு வந்த போது குமுதினி தனது பயணத்துக்கான நேரத்தை தவறவிட்டிருந்தது. இருந்தும் காலை 8.30 மணியளவில் தீவின் இறங்குதுறையில் இருந்து குமுதினி விடைபெற்றது.

ஆர்ப்பரித்தெழுந்த நீலக்கடலலை மெல்லக் கடந்த குமுதினியைப் பார்த்து இறங்குதுறை மௌனமாகி நின்றது.

தினமும் நிகழும் இப்பார்வையின் மௌனம் அன்று மட்டும் கனதியாகி இருந்தது.

ஆர்ப்பரித்தெழுந்த கடலின் மடியில் குமுதினி சென்று கொண்டிருந்தது. வெள்ளைக் கொக்குகள் குமுதினிக்கு மேலாக பறந்து தமது பார்வையினை விரித்து விட்டுப் போயின. சூரியனின் ஒளிக்கீற்று அன்று சற்று வெப்பமாக இருந்தது. நயினைக் கடலில் குமுதினி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் கடலம்மாவின் இதயத்தைக் குதறியவாறு சிறீலங்காவின் கடல் வல்லூறுகள் வந்து கொண்டிருந்தது. குமுதினியின் கண்களுக்குத் தெரிந்தது. எதனையுமே விபரீதமாக பார்க்கத் தெரியாத ஏதுமறியா அப்பாவிகளின் பயணம் தொடர்ந்தது.

தூரத்தில் தெரிந்த கடல் வல்லூறுகள் இப்போது குமுதினியை நோக்கிப் பாய்ந்து வந்தன. தாய் வல்லூறுக்குத் துணையாக வந்திருந்த இரண்டு வல்லூறுகள் வேகமாக வந்து குமுதினியை வழிமறித்தது.

ஆர்ப்பரித்தெழுந்த கடல் மாதாவின் மடியில் குமுதினி மௌனமாகியது. கடல் மாதாவின் இதயத்தைக் குதறிய தாய் வல்லூறு குமுதினியை நெருங்கி வந்து கொலை வெறிபிடித்த கொடுரமான தனது பார்வையால் குமுதினியை குதறியது.

பார்வையின் கொடுரத்தைப் பொறுக்காத கடலம்மா தனது அலைக்கரங்களால் ஓங்கியறைந்து கரைகளில் வந்து மோதினாள். இருந்தும் வல்லூறு பணியாது கோபம் கொண்டு ஆடியது. நிகழப் போகும் விபரீதத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் நிதானிப்பதற்கிடையில் அது நிகழ்ந்தது. தாய் வல்லூறு குமுதினியை வழிமறிக்க குட்டி வல்லூறுகளில் இருந்து கறுப்பு நிற உடையணிந்த பேய்கள் கைக்கோடாரிகள் , வாள் , இரும்புக் கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் குமுதினியுள் பாய்ந்தனர். தமது அன்றாட வாழ்வின் தேவை தேடி கடல் வழியில் பயணிப்பவர்களால் என்னதான் செய்யமுடியும் ?

கடல் பேய்களிடமிருந்து தப்பிப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.கடல் ஆர்ப்பரித்துக் கொண்டது.

அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது.தமது இயலாமையினை நாம் அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் எழுப்பினர்.ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின. கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.

அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடி பெருமையுடன் சு10ட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது.

பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர்.

குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் எவருக்கும் தெரியாது அன்று வீசிய சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று போனது.

புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ….?

என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது.அந்த மழலையால் கூட அன்பையும் அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளான அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது போனது.

ஏதும் அறியாத இந்த மழலை மேனியும் முக்கூர் முனை கொண்ட ஆயதத்திற்குப் பலியாகிப்போனது. ஒன்றரை மணி நேரமாக குமுதினியைக் குதறியவர்கள் நடுக்கடலில் கைவிட்டு அங்கிருந்து மறைந்தனர். முன்பெல்லாம் தீவின் மக்களை சுமந்த குமுதினி அன்று அவர்களின் குருதியையும் சுமந்தது. குமுதினியில் இருந்து வடிந்த குருதியினால் கடல் அன்னை சிவப்பாகிப் போனாள்.

உச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையில் வீற்றிருந்த புத்தபகவானும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக் கொண்டு மௌனமாகினர். எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை.

அவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர். குமுதினி மௌனமாகிப் போனதால் தனிமையான தொலை தீவில் வாழ்ந்த மக்களுக்கு தமது உறவுகளின் மரணங்கள் கூட கிட்டாது போனது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தர்மத்தின் முறையிலும் நீதியின் சார்பாகவும் திகழ்ந்து இலங்கையினை ஆட்சி புரிந்த தமிழர்களின் மன்னன் எல்லாளன்.

அந்த உத்தமனின் நாமத்தினை நினைவாக்கும் எல்லாரா எனும் பெயர் கொண்ட கப்பலினையே இப்பாதக செயலுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் பயன்படுத்தி எல்லாளனின் நாமத்தில் அழியாத வடுவினையும் பதிவாகியது.

சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் 70பது வயது தெய்வானையோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.

ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்….

ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது. உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா….?

நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா…? கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா…?

32ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 32ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.