கொழும்பு துறைமுகத்தை அதிர வைத்த கடற்கரும்புலிகள் -12.04.1996..!!! 

【】சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தமிழர் நெஞ்சில் சிங்களம் ஏறி மிதித்த இராணுவ நடவடிக்கை. தமிழர் போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் பேரழிவை தந்ததும், ஐந்து இலட்சம் மக்களை ஒரே இரவில் ஏதிலிகளாக துரத்திய அவலம் யாழ் மண்ணில் அன்று அரங்கேறியது.

புலிகள் குடாநாட்டை விட்டு வெளியேறும் போது அவர்களுடனேயே மக்களும் பின் சென்று, மக்களும்,புலிகளும் ஒன்று தான் என்பதை உலகுக்கு உணர்த்திய நாள். ஒரே ஒரு பிரதான பாதையான நாவற்குழி பாலம் ஊடாக மிகவும் வார்த்தையில் சொல்ல முடியாத சிரமங்களையும் தாங்கி மக்கள் புலிகளுடன் சென்றனர். இந்த துயரம் தமிழர் நெஞ்சில் வடுவாகவே என்றும் இருக்கும்.

எம்மூரை விட்டு கலைத்த பின் சிங்களம் அதை பெரும் பரப்புரையாக செய்து கொண்டிருந்த நேரம், எதிரியின் வாசலிலேயே போய்த் தாக்கும் முடிவை புலிகள் எடுத்தனர். அதன் தொடர்ச்சியாக அந்த நேரத்தில் கொழும்புத் துறைமுகம் பற்றிய மேலோட்டமான தகவல் புலிகளின் உளவுத்துறையினரிடம் இருந்தது. அதை வைத்து தாக்குதலுக்கான திட்டம் போடப் பட்டது.

அதற்காக மேலதிக தகவல் தலைவரால் கோரப்பட்டது. அந்த நேரத்தில் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் கண்காணிப்பில் இருந்த போராளியின் தொடர் கண்காணிப்பின் ஊடாகவும், சர்வதேச கப்பல்களின் நடமாட்டமும்,அதன் தரிப்பிடங்களும் குறிக்கப் பட்டன. மிகவும் துல்லியமான தகவல் கிடைக்கப் பெற்றதும் கடலாலும் வந்து கடற்புலிகளால் வேவு பார்க்கப் பட்டது.

எல்லாம் சாதகமாவே இருந்தது. தலைவர் தனது ஆலோசனையின் ஊடாக திட்டம் ஒன்று தயாரானது. முதலில் கடலாலும் தரையாலும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு திட்டம் போடப் பட்டு அந்த முடிவு சில காரணங்களால் நிறுத்தப் பட்டு, பின் கடலால் மட்டும் தாக்கும் முடிவு எடுக்கப் பட்டது. இந்த தாக்குதலை லேப்.கேணல் கங்கைஅமரன் அண்ணை நெறிப்படுத்தினார்.

இந்த தாக்குதலை கடற்கரும்புலிகளும், சுலோஜன் நீராடி நீச்சல் பிரிவை சேர்ந்த கரும்புலிப் போராளிகளான மேஜர்.ஜனாத்தணன், மேஜர்.பரண், மேஜர்.பொய்யாமொழி, மேஜர்.சுபாஸ், கப்டன் மதனி, கப்டன்.விக்கி ஆகியோர் இந்த தாக்குதலுக்காக பிரத்தியேகமாக புலிகளின் தொழில்நுட்ப பிரிவு போராளிகாளால் உருவாக்கப் பட்ட இருபது கிலோ நிறையுடைய வெடிகுண்டுகளை சுமந்தபடி நீந்திச்சென்று தங்களோடு சேர்த்து அந்த குண்டை வெடிக்க வைத்து கப்பலை தகர்த்த பின் ஏனைய கரும்புலிகளான லெப்.கேணல்.ரதீஸ், மேஜர்.ரதன், மற்றும் மேஜர்.ரவாஸ் ஆகியோர் குண்டு வெடித்ததும் ஏனைய சிங்கள தாக்குதல் கலங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.

திட்டம் போடப் பட்டு தாக்குதல் அணியும் தாக்குதலுக்கு தயாரானது. 12/04/1996 அன்று தாக்குதலணி,எதிரி சந்தேகம் கொள்ளக் கூடாது என்பதற்காக சாதாரண மீன்பிடி படகு ஒன்றில் (எம் மக்கள் இதை ரோலர் அல்லது வள்ளம் என்று அழைப்பார்கள்) ,தளபதிகள் மற்றும் போராளிகளை கட்டி அணைத்த பின் விடை பெற்றனர்.

12/04/1996 அன்று லெப்.ரதீஸ்.தலைமையில் இலக்கு நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். அன்று சனிக்கிழமை என்பதால் சிங்களத்தின் ஓய்வு நாள், அடுத்த நாளும் ஓய்வு என்பதால் பாதுகாப்பில் சிறு தளர்வு உள்ளது வேவின் மூலம் அறிந்தமையால் இந்த நாளை புலிகள் தெரிவு செய்தனர். திட்டத்தின் படி துறைமுகத்தில் இருந்து 6கடல் மைல் தூரத்தில் நீராடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் வெடிகுண்டுகளுடன் கடலில் இறக்கப் பட்டனர்.

கரும்புலிகள் இலக்கை நோக்கி நீந்த ஆரம்பித்த போது இயற்கை எமக்கு சாதகமாய் இருக்கவில்லை. அந்த நேரத்தில் காற்று எதிர் திசையில் வீசியமையால் அவர்களால் நீந்தி செல்வது சிரமமாக இருந்தது. இவர்களுடன் நிறை கூடிய குண்டும் இருந்தமையால் தாக்குதலுக்கான நேரத்தில் அவர்களால் நீந்தி சென்று இலக்கை நெருங்க முடியவில்லை. அந்த நேரத்தில் துறைமுகத்திற்கு வெளியில் பல பன்னாட்டு கப்பல்கள் தரித்து நின்றன, அவர்களால் அதை இலகுவாக தாக்கி அழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. தலைவரின் கட்டளையும் அதுவே.!

அதனால் தொடர்ந்து எம் வீரர்கள் சிங்களத்தின் போர்க் கப்பலை நோக்கியே நீந்தி சென்றனர். ஆனபோதும் கடல்நீர் அவர்களை நீந்த விடாது பின்னிளுத்தது. அதிகாலை சென்று அடைய வேண்டிய இலக்கிற்கு காலை 6.30 மணிக்கும் போய்ச் சேரவில்லை. அதனால் தங்களுடன் கொண்டு சென்ற வெடிகுண்டுகளை தங்களுடன் சேர்த்து வெடிக்கவைத்து தம்மையும் அழித்தனர்.

அதன் பின்பு ரதீஸ் தலைமையிலான அணியினர் துறைமுகத்தினுள் ஊடுருவி பெரும் தாக்குதலை தொடுத்தனர். தம்மிடம் இருந்த ஆயுத எறிகணைகள், ரவைகள் தீர்ந்த பின் தங்கள் படகையும் வெடிக்கவைத்து வீரகாவியம் ஆகினர். உண்மையில் புலிகள் நினைத்த சேதத்தை எதிரிக்கு கொடுக்க முடியாது போனாலும் சிங்களத்தின் வாசலுக்கே கடற்புலிகள் வந்தமை சர்வதேச செய்திகளில் முதலிடம் பிடித்திருந்தது. தம்மால் எங்கும் வந்து தாக்க முடியும் என்பதை சிங்களத்திற்கு உணர்த்திய புலிகள்,அவர்களுக்கு இதன் மூலம் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்திருந்தனர்.

இதில் மேஜர். ரதன் கடல் புலிகளை சாராத போராளி. இவன் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்ட படையணியில் இருந்த போது ஒரு காலை இழந்த போராளி. அதன் பின் 1991ம் ஆண்டிலிருந்து படைத்துறை செயலகத்தில் பணியில் இருந்தான். மிகவும் மென்மையான போராளி. யாரையும் மனம் நோகாது எல்லா போராளிகளுடனும் உறவாடும் உன்னத போராளி. ரதன் MO வில் இருக்கும் போது ஆங்கிலப் திரைப் படங்கலுக்கு தமிழில் குரல் கொடுக்கும் பகுதிக்கான பொறுப்பாளர்.

இவனது தமிழாக்கத்தில் உருவான திரைப்படத்தில் மிக முக்கியமான திரைப்படம் “ஹிளிவ் கங்கர்” இந்த படத்திற்கான நேர்த்தியான தமிழாக்கத்தை பார்த்த தலைவர் ரதனை நேரில் கூப்பிட்ட தலைவர் அவனை வாழ்த்தி அவனது நிர்வாகத்தை விஸ்தரிப்பதற்காக இரண்டு லட்சம் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்கி இருந்தார். இப்படி கூறிக் கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒரு வரலாறு ஒளிந்துள்ளது…!!!
நினைவுகளுடன் துரோணர்…!!!