சம்பந்தன், சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது!

24.02.18 வவுனியாவில் முச்சந்தியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் ஆலயத்தின் முன்பாக ஒன்றுகூடி பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

இதனையடுத்து கோவிலுக்கு முன்பாக இருந்து கடை வீதி வழியாக ஊர்வலமாக வந்த உறவுகள் தாம் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் உருவப்பொம்மைகளை தாங்கியவாறு முச்சந்தி நோக்கி சென்ற அவர்கள் அங்கு வைத்து இறுதிக்கிரியைகளை இரு உருவப்பொம்மைகளுக்கும் முன்பாக செய்தனர்.

இந் நிலையில் போராட்ட தளத்திற்கு அருகாமையிலும் நகர்ப்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் கிறிஸ்தவ மதகுருமார் பேராட்டத்திற்கு ஆதரவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.