சம்பவம் ஒன்று படிப்பினை ஆயிரம்….

எப்படி இவரால் முடிந்தது என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாகவே இருக்கிறது.
தலைவன் என்பவன் வெறுமனே குறிசூட்டு பயிற்சிகளையும் வெடிமருந்து பாவனையையும் மட்டுமே சொல்லி தருபவன் அல்ல…தன்னுடன் இணையும் போராளிகளுக்கு மானுடத்தின் மகோன்னதம் பற்றியும் பேசும் வார்த்தைகளின் தார்ப்பரியம் பற்றியும் சொல்லி தந்தவர் தேசியதலைவர்.

ஒரு சம்பவம்::,83க்கு சற்று முந்தைய பொழுது ஒன்று.. இயக்கத்தில் இருந்த 24பேரில் ஒரு 19பேர் ஓரிடத்தில் தலைவருடன் நிற்கவேண்டி வந்துவிட்டது..
அந்த நேரத்தைய அலைச்சலில் இப்படியாக அநேக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நிற்கும் சந்தர்ப்பங்கள் அரிதே.
.
மிகவும் ஒரு பெரிய வீடு. வீட்டுகாரர் இல்லை.நாம் 19 பேரும்தான்.ஒரு ஊரின் பிரதான வீதியில் இருந்து உள்ளே நீண்ட தூரத்தில் அந்த வீடு அமைந்திருந்தது..மேலும் அந்த ஒழுங்கை நீளத்துக்கு நிறைய வீடுகளில் நாய்கள் இருந்தன.. யாராவது வெளிஆட்களின் நடமாட்டத்தை குலைத்தே காட்டித் தந்துவிடும்.. இயற்கை வேவு..அதனால் அந்தநேரத்தைய சுற்றிவளைப்பு பற்றி பெரிதாக பயமில்லை..

இப்படியான சந்தர்பங்களில் தலைவருடைய வேலை எல்லாம் எம் எல்லோருடைய மனஎண்ணங்களை படிப்பதற்காகவே செலவிடுவார். அதுவும் எமக்கு தெரியாமல்..தலைவர் தானே ஏதாவது ஒரு அந்த நேரத்தைய அரசியல், சமூக பிரச்சனை பற்றி ஒரு கருத்தை சொல்லிவிட்டு விடுவார். பிறகு அதை பற்றி கதை நடக்கும். மிக மௌனமாக ஒவ்வொருவரும் கதைப்பதை, அவர்களின் உடல்மொழியை , அடுத்தவர்க்கு பதில் தரும் விதத்தை என்று தலைவர் ஊன்றி கவனிப்பார்.

அன்றும் அப்படித்தான் தலைவர் ஒரு முக்கிய செயற்பாடு ஒன்று பற்றிய திட்டத்தை சொல்லி விட்டு நிறுத்துகிறார்.எல்லோரும் அதனை எப்படி செயற்படுத்துவது எப்படி நேர்த்தியாக நகர்த்துவது என்று கதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
அப்போது அங்கே இருந்த எமது உறுப்பினர் ஒருவர், அவர் அப்போது அங்கு நின்ற அமைப்பின் உறுப்பினர்களில் தலைவருக்கு அடுத்தடுத்த இடத்தில் என்ற வரிசையில் ஐந்துக்கு உள்ளே வரக்கூடியவர் தமது எண்ணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
தனக்கு தெரிந்த ஒரு முக்கியமான தேசியபற்றாளர் ஒருவரின் பெயரை சொல்லி “அவரை பாவித்து சில வேலைகளை செய்யலாம்” என்று சொன்னார். அந்த இடத்தில் இருந்த ஒருவருக்கு கூட அந்த “அவரை பாவித்து” என்ற சொல்லாடலின் தாக்கம் புரியவில்லை..
இந்த இடத்தில் தலைவர் இடையில் குறுக்கிட்டு ‘ “நிற்பாட்டுங்கோ, இன்டையில் இருந்து சொல்லுறன் யாராவது எமது உறுப்பினர்கள் எமது மக்களை பாவித்து இதை செய்யலாம் அதை செய்யலாம் என்று கதைக்க கூடாது என்று சொல்லிவிட்டு கதைத்த போராளியை நோக்கி ‘ நீ எத்தினை தொழிற்சாலைக்கு முதலாளி ‘ என்கிறார்

என்ன சொல்வது என்று அந்த போராளி திகைத்து நிற்கிறார்.மெதுமெதுவாக கயிறு இறுகுகிறது என்று மாத்திரம் தெரிகிறது அவனுக்கு..
தலைவரே தொடர்கிறார் “” அவங்கள் லாலாசோப், மில்கவைற், சுபாஸ்ஹொட்டல் முதலாளிகள்தான் தமக்கு கீழே பணிபுரிபவர்களை பாவிக்கிறர்கள். நாம் விடுதலைப் போராளிகள்.இங்கு யாரையும் பாவிக்கிறது கிடையாது..இங்கு எமக்கு பக்கபலமாக நிற்கும் மக்களின் ஆதரவை பெறுதல் மட்டுமே..இனி யாராவது இந்த ‘ அவனை பாவித்து ‘ ‘ இவனை பாவித்து ‘ என்று கதையுங்கோ நடக்கிறதே வேறை'”” என்று சொல்லி முடித்தார்

ஒரு சிறு சொல்..அதில்கூட மக்களின் பக்கபலம் கேவலப்படுத்தப்படக்கூடாது என்று நினைத்த அவரின் ஆழமான பார்வை இன்றும் வியப்பாக இருக்கிறது..
அவர் வெறுமனே ஒரு ஆட்சிமாற்றம், நாற்காலி மாற்றத்துக்காக இந்த அமைப்பை ஆரம்பித்து கட்டி எழுப்பவில்லை..
விடுதலை என்ற அவரது கருத்தியல் மிக விரிந்த அர்த்தங்கள் நிறைந்தது..மானுடம் மீதான அதிகபட்ச நேசமே அவரது விடுதலைக்கான போராட்டம்..அது என்றும் நிறைய கற்பிக்கும். தன் வாழ்வின் ஊடாக.. தான் கடந்த பாதைகள் வழியாக..தான் சந்தித்த தடைகள் மீது ஏறி இறங்கிய தருணங்கள் வழியாக.. கற்பதற்கு அவரிடம் நிறைய இருக்கிறது..அவரது வார்த்தையில் சொன்னால் “”வாழ்க்கை எனது தத்துவாசிரியன்.”” ஆம் அவரது வாழ்வு நிறைய கற்றுத்தரும். எந்நாளும்.

– சச முத்து