சாவதற்கே வாழும் கறுப்பு மேகங்களே !

தியாகம் செய்து
மழையென பெய்து ஓய்கிறீர்கள்
எங்கள் கண்களின் குளங்களை நிரப்பி விட்டு..
நரக வீதிகளில்
” கறுப்பு மேகங்கள் ”
நாளெண்ணிக் கிடந்தோம்.
நாவுக்கடியில் சொற்களைப் புதைத்து
உயிர் மட்டும் சுமந்து
உலவித் திரிந்தோம்.
எங்கள் விதி செதுக்கும்
உங்கள் உயிர்களை
உளியாக்கினீர்கள்.
தமிழின விடிவின்
ஒளியாகினீர்கள்.
உரிமைக் குரலில்
ஒலியாகினீர்கள்
ஊமை உதடுகள் உச்சரிக்கும்
புதிய மொழியாகினீர்கள்.
கனத்தினை கரத்திலும்
உரத்தினை சிரத்திலும் கொண்ட புலியாகினீர்கள்.
எம்
உயிர்ப் பயிர்கள் விளையும்
நிலமாகினீர்கள்.
தமிழ் மரம் முளைக்க மீண்டும்
விதையாகினீர்கள்.
எங்கள் தலை நிமிர
உங்கள் நிலை மறந்தீர்கள்.
காற்றும் நுழையாத
சிங்கக் குகைகளை சிதற வைத்தீர்கள்.
வேற்று கிரகம் வரை
உங்கள் புகழ் மணக்கும்.
தூற்றும் துவேச வாய் கூட
பல சமயம் சொல் மறந்து பிளந்திருக்கும்.
நேற்று வரை புயல் அடித்தது காற்றுக்கு கூட தெரியும்..
கூற்றுவனை கட்டி யணைத்து
வரவேற்கும் துணிவை
பறை சாற்றிக் கொண்டு திரியும்..
புலி யென்றால் படையும் நடுங்குமென
புதுச் சரித்திரம்
படைத்தீர்கள்.
வெற்றியும்
வீரமரணமும்
ஒன்றானது உங்களில்த் தான்.
வெந்த தணலில்
வீர வேட்கை கொண்டு
செங்குருதி குளிக்கும்
மறத்தமிழர் நாமென்று
மார் தட்ட வைத்தீர்கள்..
உங்கள் மூச்சை
சுவாசிக்கும் காற்றும்
புயலாகும்..
ஓவ்வொரு மூச்சுக்கும் ஓராயிரம்
அர்த்தங்கள்
உங்கள் உணர்வின்
உயரம் அளந்தால்..
வானம் கூட உற்றேப்பார்க்கும்..
வென்று முடித்து
ஊமையாய்
ஊறங்குபவை
கல்லறைகள் அல்ல..
சில்லறைப் படைகளை
சிதற வைத்து தம்
உயிர் நீத்த தெய்வங்கள்
உறையும்
கருவறைகள்?

ஆக்கம் : தஷந்தி நிரேக்கா

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”