சிறிலங்காவுக்கு ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா உதவுவதாக வாக்குறுதி!

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானிய நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளன.

நேற்றைய தினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்த அமெரிக்கத் தூதுவர், பிரித்தானிய, மற்றும் ஜப்பான் தூதுவர்கள் இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமா பல்வேறு துறைகளில் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார். கூடிய விரைவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் மின் பிறப்பாக்கிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஜப்பானில் இருந்து சிறப்பு மீட்புக் குழுவொன்றும் சிறிலங்கா வரவுள்ளது.

அதேவேளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், எந்த நேரத்திலும் சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் சிறிலங்காவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தமது நாடு தயாராக இருப்பதாக பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.