சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், இந்த திட்டத்தை சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் முறியடித்துள்ளன.

இந்தச் சதித் திட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, நான்கு முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிரான்சில் உள்ள புலிகளின் தலைவர் ஒருவரின் கீழ் செயற்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.

நாட்டில் உடனடியாக தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினர் விழிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.