ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது -வீ.ஆனந்தசங்கரி

மாவை சேனாதிராஜா பேய் வீட்டில் வாழ்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்: தமிழரசு கட்சி முறையற்று செயற்படுகின்றது. வீடு தனியே வீடு மட்டும் அல்ல. அது பேய் வீடு. அந்த பேய் வீட்டில்தான் மாவை சேனாதிராஜா வாழ்கிறார். இன்றைய அரசியலில் சுமந்திரன், சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் மோசமாக நடந்து கொள்கின்றார். அத்துடன் ரணிலும் மிக மோசமாக செயற்படுகிறார். இன்று ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக நான் தெரிவித்தால் பலர் அதனை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்தில் மக்களின் ஜனநாயக உரிமையினை பறித்தெடுத்து விட்டு தான் ஆட்சி நடத்தியது. இதே வேலையை தான் சந்திரிக்காவும் செய்துள்ளார். தமிழ் மக்களை அவர்கள் எப்பொழுதும் கறிவேப்பிலை மாதிரி பாவிக்கின்றார்கள். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.