ஜல்லிக்கட்டோடு ஓய்ந்துவிடுவோமா? – புகழேந்தி தங்கராஜ்

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நிகழ்ச்சியில் சென்றவாரம் கலந்துகொண்டபோது பழைய (இளைய) நண்பர்கள் இருவரை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இருவருமே 2009 ஜனவரி இறுதியில் கொளத்தூரில் முத்துக்குமார் திருவுடல் வைக்கப்பட்டிருந்த 3 நாளும் அகலாது அணுகாது அங்கேயே இருந்தவர்கள். (இருவரில் ஒருவர் இப்போது ஐ.டி. நிறுவனமொன்றில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.)

அவர்கள் இருவருடனும் பேசியதிலிருந்து ஒரு உண்மையை உணரமுடிந்தது. 2009ல் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய இளைஞர்களின் உணர்வு மரத்துவிடவுமில்லை அப்போதிருந்த தி.மு.க. அரசின் துரோகத்தை அவர்கள் மறந்துவிடவுமில்லை. ‘மறப்போம் மன்னிப்போம் என்பதெல்லாம் எதிரிகளுக்காகச் சொல்லப்பட்டவை… துரோகிகளுக்காக அல்ல’ என்றார்கள் அவர்கள்.

ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களின் பங்களிப்பு குறித்து அவர்களிடம் பேசியபோதுதான் சென்னைக் கடற்கரை அறப்போராட்டத்தின் வெற்றிக்கு ஐ.டி. ஊழியர்கள் எப்படியெல்லாம் காரணமாக இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது. ”முத்துக்குமாரால் களத்துக்கு வந்தவர்கள் நாங்கள். ஜல்லிக்கட்டோடு ஓய்ந்துவிடுவோமா என்ன! 2009 இனப்படுகொலைக்கு நீதி கேட்பதிலிருந்து பின்வாங்கவே மாட்டோம்….” என்று அவர்கள் உறுதியாகத் தெரிவித்தபோதுதான் முத்துக்குமார் மூட்டிய தீ இன்னும் அணைந்துவிடவில்லை என்பது புரிந்தது.

ஈழத்தை எரித்த குண்டுநெருப்புக்கு எதிர்வினை – முத்துக்குமார். அவன் மூட்டிய தீ எப்படி அணையும்!

‘இனப்படுகொலைக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பது மட்டுமே இலங்கையின் நோக்கமல்ல…. அப்படியொரு விசாரணையே நடக்கக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம்… அதற்கான சூழ்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது… தமிழர் தலைவர்களில் சிலரை வைத்தே காய் நகர்த்துகிறது’ என்றெல்லாம் அந்த நண்பர்கள் குமுறினர். அது அவர்களது குமுறல் மட்டுமே இல்லை. ஒட்டுமொத்த OMR சாலையின் குமுறல்.

அந்த நண்பர்கள் சொன்னமாதிரியே இரண்டொரு நாளில் இன்னொரு சூழ்ச்சியை அரங்கேற்றியது இலங்கை. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சி – என்கிற திரைக்கதை வசனம் வெளியானது. இது ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்ட நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை நடத்துகிற கள்ளபார்ட் நாடகம்.

தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்று ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைஇ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு – என்றெல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெளிவாகவும் தீர்மானமாகவும் எடுத்துச்சொல்லி நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை இந்த விஷயத்தில் ஒரு துரும்பைக்கூடத் தூக்கி வைக்கவில்லை இலங்கை. ஒவ்வோராண்டும் ஒவ்வொரு மாதிரி சாக்குப்போக்கு சொல்லும். வெட்கமேயில்லாமல் அந்த இழிபிறவியின் குரலை இந்தியா வழிமொழியும். இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கைக்கு ஒவ்வொரு முறையும் வாய்தா கிடைக்கும்.

‘சொன்னதையெல்லாம் செய்தாயா இல்லையா’ என்று அடுத்தமாதக் கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் கேட்கப் போகிறது. ”செய்ய வேண்டுமென்றுதான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரனுக்கே புலிகள் குறிவைக்கிற நிலை.. இப்படியொரு ஆபத்தான நிலையில் ராணுவத்தை அங்கிருந்து எப்படி வெளியேற்ற முடியும்? பயங்கரவாதம் இருக்கிற நிலையில் அதைத் தடுக்கிற சட்டத்தை எப்படி தவிர்க்க முடியும்’ என்றெல்லாம் திருவாளர் இலங்கை சமத்காரமாகப் பேசப் போகிறார். அதற்காகத்தான் சுமந்திரனை வைத்து நாடகம் நடத்துகிறது இலங்கை.

சுமந்திரன் இந்த விஷயத்தில் பயன்படுத்தப் படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. ‘இனப்படுகொலை என்றெல்லாம் சொல்லாதீர்கள்… அப்படிச் சொல்வதால் நமக்கு நியாயம் கிடைக்கிற வாய்ப்பை இழந்துவிடுவோம்’ என்று உலகமெங்கும் போய் தமிழ் உறவுகளுக்குத் தத்துவம் போதித்த போதிசத்துவர் அவர். பல இடங்களில் வாங்கிக் கட்டிக்கொண்டு வருபவர். இப்படியெல்லாம் பேசுபவரைத் தீர்த்துக்கட்ட புலிகள் முயல்கிறார்கள் என்று ஒரு பச்சைப் பொய்யைக் கிளப்பிவிட்டால் கூட அடிப்படையில் அதற்கு ஒரு லாஜிக் இருப்பதாகத் தோன்றும். அதனாலேயே அவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

இதே போன்ற ஒரு தகவலை வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் முன்பு தெரிவித்திருந்தார். தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாகக் கிடைத்த தகவல் ஒன்றைக் குறிப்பிட்ட அவர் ‘என்னைக் கொலை செய்துவிட்டு அந்தப் பழியைப் புலிகள் மீது போட சூழ்ச்சி நடப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது’ என்றார். சுமந்திரன் இப்படியெல்லாம் உண்மை பேசுவார் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பேயில்லை. ஏனென்றால் இவர் விக்னேஸ்வரன் இல்லை.

இதற்கான பிளாட்பாரத்தை முன்கூட்டியே அமைத்துக் கொடுத்தவர் சாட்சாத் சுமந்திரன் தான். ‘திருச்செல்வத்தைப் போல எனக்கும் குறி வைக்கிறீர்களா’ என்று அவர் கேட்டபோதுஇ எதற்காகத் திடீரென்று இந்தக் கேள்வியை எழுப்புகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது இலங்கை அரசும் அவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்கிற உண்மை.

நீங்கள் அப்படிப் பேசுங்கள்…
அதன் தொடச்சியாக புலி புரளியைக் கிளப்பிவிடுவோம்….
நாட்டில் பயங்கரவாதம் நீடிப்பதாக அடித்துச் சொல்வோம்…..
இப்படியெல்லாம் அவர்களுக்குள் ஒரு டீல் இருக்க நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது.

சுமந்திரனின் அரசியல் ஜாதகத்தை வைத்தே இதைச் சொல்கிறேன். சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவாவுக்கு சுமந்திரன் அனுப்பப்பட்டபோதெல்லாம் என்ன நடந்தது என்பதைத் திரும்பிப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் 2009 இனப்படுகொலைக்கு நீதி பெறுவதற்கான வாய்ப்புகளில் முதன்மையானது. அந்தக் கூட்டம் நடக்கிற சமயங்களில்இ ஜெனிவாவிலேயே முகாமிட்டுஇ இலங்கை ராணுவம் செய்த இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முயல்கிற புலம்பெயர் உறவுகள் பலர். தமிழினத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்துடன் நடமாடும் அவர்களுடன் கல்லம் மேக்ரே போன்ற மானுடர்களும் இணைந்துகொண்டு தமிழர் தரப்பைப் பலப்படுத்துவதுண்டு.

இப்படியொரு சூழலில்தான் ஜெனிவாவுக்கு வந்து சேருவார் திருவாளர் சுமந்திரன். இனப்படுகொலைக்கு நீதி பெறுவதற்காக ஒட்டு மொத்தத் தமிழினமும் உருவாக்கிவைத்திருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தனது சூழ்ச்சித்திறத்தால் அடித்து நொறுக்குவார்.

ஜெனிவா என்பது ஒரு சர்வதேசக் களம். தமிழர் தாயகத்திலிருந்து வருபவர் என்கிற முறையில் தனக்குக் கிடைக்கிற வாய்ப்புகளால் சர்வதேசத்தைக் குழப்பிவிட சுமந்திரன் என்கிற அயோக்கிய அறிவாளியால் நிச்சயமாக முடியும். முடிந்திருக்கும். (அவர் அறிவாளி என்பதில் எனக்கு ஐயமில்லை. அந்த அறிவு யாருக்குப் பயன்படுகிறது என்பதில்தான் பிரச்சினை!) இந்தியாவைப் போலவே மீண்டும் இலங்கைக்கு வாய்தா வாங்கிக் கொடுக்க வழிவகுப்பதன் மூலம் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பை நீர்த்துப் போக வைத்துவிட்டுத்தான் கொழும்புக்குத் திரும்புவார்.

சென்ற ஆண்டு ஜெனிவாவில் சர்வதேச விசாரணை தொடர்பிலான தீர்மானத்தைத் தானும் சேர்ந்தே கொண்டுவருவதாக ஒரு சீன் போட்டது இலங்கை. தான் தான் அதற்குக் காரணம் என்பதைப் போல தன் பங்குக்கு சுமந்திரனும் சீன் போட்டார். என்னைப் போலவே நீங்களும் அதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நாடகத்தின் அடுத்த காட்சிதான் – புலிகள் சுமந்திரனைக் குறிவைக்கிறார்கள் – என்கிற சீன்.

இனப்படுகொலைக்கான நீதியை மறுப்பதற்கும் போர்க்குற்றங்களை மூடி மறைப்பதற்கும் தமிழர் தரப்பில் இருக்கிற சிலரை எப்படியெல்லாம் இலங்கை பயன்படுத்தும் என்பதற்கு சுமந்திரன் என்பவர் ஒரு ஆகப்பெரிய சான்று. இந்த சூழ்ச்சிகளை முறியடிக்கிற கடமை தமிழகத்திலிருக்கிற 8 கோடி தமிழர்களுக்கும் இருப்பதால்தான் இனப்படுகொலைக்கு நீதி கேட்பதில் தமிழகம் முன் நிற்க வேண்டுமென்று மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறேன் நான். ஒன்றரை லட்சம் உயிர்களுக்காகப் பேசுவது ஜல்லிக்கட்டைக் காட்டிலும் முக்கியமில்லையா என்று கேட்கிறேன்.

2008 – 2009ல் ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை – ஒன்றரை லட்சம் உறவுகளைக் கொன்று குவித்ததோடும் மேலும் ஒரு லட்சம் பேருக்கு படுகாயத்தை ஏற்படுத்தியதோடும் பல்லாயிரம் சகோதரிகளுக்கு ஆறா மனத்துயரை ஏற்படுத்தியதோடும் நின்றுவிடவில்லை. அந்த இனப்படுகொலையின் விளைவு இந்தப் பேரழிவு மட்டுமல்ல!

ஒன்றரை லட்சம் தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்பட்டபோது 26வது மைலில் இருந்த 8 கோடி தமிழனும் என்ன செய்துகொண்டிருந்தான் – என்கிற கேள்வி இந்த இனத்துக்கு ஏற்படுத்தி இருப்பது – நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ‘பேரிழிவு’! இதுவும் இனப்படுகொலையின் விளைவுதான்! ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய வரலாற்றுப் பேரிழிவு இது.

‘நான் ஒரு கடைந்தெடுத்த கோழை’ என்று ஒவ்வொரு தமிழனும் தனக்குத்தானே பச்சை குத்திக் கொண்ட 2009 பேரிழிவுக்கு ஒரே ஒரு பிராயச்சித்தம் தான் இருக்கிறது. அது – நடந்த இனப்படுகொலைக்குஇ அந்தப் பேரழிவுக்கு நீதி தேடித்தருவது!

கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்றத் தவறிய நாம்இ அவர்களுக்கு நீதி பெறுவதற்காவது களத்தில் இறங்க வேண்டாமா? நீதி கொடுக்கக்கூட மறுப்பவர்களை மோதி மிதிக்க வேண்டாமா? இனப்படுகொலைக்கு நீதி கேட்டாக வேண்டும் – என்கிற தீர்மானங்களும் வார்த்தைகளும் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வாகி விடுமா? அதைச் சாத்தியமாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? இதுதான் நம் முன்னிருக்கும் கேள்வி.

நீதிக்கும் தமிழனுக்கும் இடையிலான தூண்களை யாரும் தூக்கிவைக்கத் தேவையில்லை. அப்படியெல்லாம் தூக்கி வையுங்கள் – என்று நான் சொல்லப்போவதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் ஒரு துரும்பைத் தூக்கி வைத்தால் கூட போதும்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்….. ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய இளைஞர் பெருந்திரள் கூட தூண்களைத் தூக்கி வைத்துவிடவில்லை. ஆளாளுக்கு ஒரு துரும்பைத்தான் தூக்கிவைத்தார்கள். ஒரே இடத்தில் நின்று அவர்கள் விட்ட மூச்சுக் காற்றிலேயே தகர்ந்துவிட்டன ஜனநாயகத்தின் நான்கு தூண்களும்!

அதெல்லாம் முடியாது – என்று அடம்பிடித்த அரசும் நிர்வாகமும் நீதிமன்றமும் ஜனவரி 17க்குப் பிறகு அப்படி அடம் பிடிக்க முடிந்ததா? இதெல்லாம் எங்களுக்கு ஒரு செய்தியே அல்ல – என்று புறக்கணித்த நான்காவது தூண் (ஊடகங்கள்). ஜனவரி 17க்குப் பிறகு அப்படிப் புறக்கணிக்க முடிந்ததா? அதுகுறித்த செய்திகளை எங்காவது ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டு அரசியல் சினிமா அக்கப்போர்களையே முதல் பக்க செய்தியாக்கிய பத்திரிகைகள் ஜனவரி 17க்குப் பிறகு அதைத் தவிர வேறெதைப் பற்றியாவது எழுத முடிந்ததா? மக்கள் சக்தியை முறியடிக்க எந்த சக்தியாலும் முடியாது என்பதுதான் மெரினா படைத்த வரலாறு.

இப்படியொரு சக்தியை 2009ல் பயன்படுத்தத் தவறியதால்தான் 26வது மைலில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்க நேர்ந்தது. கொன்றவர்கள் மட்டும் தான் குற்றவாளிகள்… கைகட்டி வேடிக்கை பார்த்த நாங்கள் நிரபராதிகள் என்கிறீர்களா? இந்தக் குற்றவுணர்வு இருப்பதால்தான் ‘இனப்படுகொலைக்கு நீதி கேட்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்கிறார்கள் அந்த ஐ.டி. இளைஞர்கள். அவர்கள் முன்மொழிவதை நாம் ஒவ்வொருவரும் வழிமொழிய வேண்டாமா?