1449560248-9072

ஜெயலலிதாவின் மரணம் –சி.பி.ஐ. விசாரணை வழக்கு தள்ளிவைப்பு

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைஉயர் நீதிமன்றில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 22-ந்தேதி சேர்க்கப்பட்டார்.

அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியில் வந்தது. உண்மையில் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை. இந்த அறிக்கையை அவருடன் இருந்த சிலர் தயாரித்து போலி கையெழுத்து போட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி பொன்னையன், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆயிரம் விளக்கு காவல் துறை  புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’.

‘ஜெயலலிதா கடந்த 5-ந்திகதி இரவு இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவின் சாவில் பல மர்மங்கள் உள்ளன. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்று கடந்த 6-ந்திகதி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பினேன். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ஜெயலலிதாவின் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை கண்டுபிடிக்க அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை ஏற்க மறுத்தது. இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பதை முடிவு செய்ய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

இதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று (16)  காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகவில்லை. அவரது மாணவி என்று கூறி பாத்திமா என்பவர் ஆஜரானார்.

அவர், டிராபிக் ராமசாமிக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து விட்டதாகவும், அவரது இதயத்துடிப்பு 47 ஆக குறைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்’ என்று பாத்திமா கூறினார்.

இதற்கு நீதிபதிகள், ‘மனுதாரர் தானே வழக்கு தொடர்ந்துள்ளார். வக்கீல் யாரையும் அவர் நியமிக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், அவர் தான் நேரில் ஆஜராகி வாதிட வேண்டும். அல்லது ஒரு வக்கீலை தன் சார்பில் ஆஜராக நியமிக்கவேண்டும். வக்கீல் இல்லாத நீங்கள் இப்படி ஆஜராக முடியாது’ என்று கருத்து கூறினார்கள்.

அதற்கு பாத்திமா, டிராபிக் ராமசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நீதி மன்றில்  ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற ஜனவரி 9-ந்திகதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டனர்.