தனிநாட்டுத் திமிருடன் வடக்கு மாகாணசபை செயற்பட்டு வருகிறது நாடாளுமன்றத்தில் மஹிந்த தரப்பு காட்டம்

நாடாளுமன்றத்திலிருந்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தனிநாடு என்ற திமிருடன் வடக்கு மாகாணசபை செயற்பட்டு வருகிறது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில், வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களின் எண்ணிக்கை, பயிர் நிலங்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை கேள்வியாக பத்ம உதயசாந்த குணசேகர சபையில் முன்வைத்தார். விவசாய அமைச்சர் சபையில் இல்லாதமையால் சபை முதல்வரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக, உரிய பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் கால அவகாசத்தைக் கோரியிருந்தார்.

இதனால் கோபம் அடைந்த அவர், மாகாணசபைகளில் ஏதேனும் கேள்விகளை முன்வைத்தால் அதே தினத்தில் அதற்கான பதில் வழங்கப்படுகின்றது. ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்து கேள்விகளை வடக்கு மாகாணசபைக்கு அனுப்பி வைக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலை அளிக்க வடமாகாணசபை தவறி வருகின்றது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒற்றை ஆட்சி நிலவுகின்ற இந்த நாட்;டில் தனியான நாடாக வடக்கு மாகாணசபை இயங்குவதே இதனூடாகப் புலப்படுகின்றது. நாடாளுமன்றத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாவிட்டால் அந்தச் சபை எதற்கு? வேறு மாகாணசபைகளிடம் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் வருகின்ற நிலையில், வடக்கு மாகாணசபையில் உள்ள அனைவரும் மன்னர்களா? எனவும் குற்றம்சாட்டியள்ளார்.