கல்லறைகள் மூச்சுவிடும்…!

எமக்காய் அல்லும் பகலும்
காடும் மேடுமாய்
அலைந்து – காவலானவர்
கல்லறைகள் விடும் மூச்சிலே
வீரமாய் பவனி வந்தோம்…!

வையமெங்கும் விரவிக்கிடக்கும்
தமிழன் மார்தட்ட
களமாடி வீரமாய் சாந்த
தெய்வங்கள் உறங்கிய
கோவில்கள்…!

உடைக்கட்டும்
மண்ணோடு கிண்டி எறியட்டும்
எஞ்சிய கற்களை அரைத்து
தூற்றட்டும்…!

காடுமேடெங்கும் வீசியெறிந்து
மறைக்கட்டும்
அரண் அமைக்கட்டும்
படிகட்டி – எதிரி
குந்தியிருக்கட்டும்…!

ஒருவகை சந்தோசம்
கல்லறைகள் மூச்சுவிடும்
உறுதியாகிவிட்டது
நிருபணமாகிவிட்டது!
பொங்கி வரும் வீரமாய் ஒன்று…!

கல்லறைத்துகல்கள்
அண்டவெளிகளில் வீசப்படவில்லை
அட்லாண்டிக் கடலிலும்
கரைக்கப்படவில்லை…!

கோவிலாய் உறங்கிய தெய்வங்கள்
இன்று ஈழதேசமெங்குமாய்
மண்ணில் கல் கட்டி உறங்கியவர் – இன்று
மண்ணோடு இரண்டறக் கலந்து…!

நிச்சயம் மலரும்
எங்குமாய் வியாபித்த
தோழர் ஆணையாய்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கவிஞர்:அரவிந்தன்