தமிழர்களைக் காப்பாற்ற நிச்சயம் ஒரு கடவுளை காலம் வெகுவிரைவில் வழங்கியே தீரும்.

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால்
மக்களின் இந்த சுயேட்சை வேட்பாளர் தெரிவுகள் மூலம் அனைத்துக்கட்சிகளையும் தமது அரசியல் பிரதிநிதித்துவங்களிலிருந்து மக்கள் தூக்கியெறிந்து விட்டனர் என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.

சுயேட்சைகளாக உள்ளூராட்சி சபை தேர்தலில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களை முன்னிறுத்தியது மக்களே!
யாரை தமது பிரதேசத்திற்கு தேர்ந்தெடுக்கவேண்டுமென்பதை மக்கள் ஏற்கனவே தெரிவுசெய்துவிட்டார்கள்.
இதன்போதே அனைத்துக்கட்சிகளும் அப்பிரதேச மக்களின் தீர்ப்புக்கள் முன்னே தோற்றுவிட்டன.

விழுந்தும் தங்கள் மீசையில் மண் முட்டவில்லை என்பதுபோல் கட்சிகளை முன்னிறுத்தி சலுகைகளாலும்,கள்ளவோட்டு வாக்குகளாலும் வென்றுவிடலாமெனும் கபடத்தனத்திலே பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
அனைத்துக்கட்சிகளும் தத்தமது கட்சிகளையும் அதன் சின்னங்களையும் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவைகளாக அடையாளப்படுத்தவே விரும்புகின்றன. அவைபற்றியே அவைகள் தமக்குள் பலபிளவுகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளன.தவிர மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியோ அல்லது அவர்களது வாழ்வாதாரம் பற்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகவோ அவர்கள் என்றுமே அடிபட்டுக்கொள்வதில்லை.

இப்படியானவர்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட இந்தக் கட்சிகளின் அசமந்தப்போக்கே பிரதேச மக்களை தமக்கான வேட்பாளர்களாக கட்சி சாராத தனிநபர்களை,தமது பிரதேச அபிவிருத்திக்காக சேவையாற்றக்கூடியவர்களை,சுயேட்சைகளாக நிறுத்துவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.
இதுவும் ஒருவகை புறக்கணிப்பு போராட்டமே.
தமக்கான உரிமைகளைத் தட்டிக்கேட்பதற்கும்.
தமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும்,வளர்ச்சியையும் தாமே முன்னெடுத்துச் செல்லவும்,
அரசியற் கட்சிகளில் நம்பிக்கையிழந்து நிர்க்கதியான நிலையில்,தமக்கு மறுக்கப்பட்டுவரும் அடிப்படை வாழ்வாதார மற்றும் சமூக கட்டுமானப் பிரச்சினைகளுக்கு எதிராக சிங்களப் பௌத்த மேலாதிக்க சிந்தனைகொண்ட அரசோடு போராடுவதற்கு அவர்கள் கையிலெடுத்த ஆயுதமே இந்த சுயேட்சை.

முல்லைத்தீவு,மன்னார்,மட்டக்களப்பு,
திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் அப்பிரதேச மக்களின் தன்னெழுச்சியானதொரு போராட்ட வடிவமாக உருப்பெற்றுள்ளது இந்த சுயேட்சைப் போராட்டம்.

மக்களின் தன்னெழுச்சியான இவ்வகைப் போராட்டங்கள் வெற்றிபெறுவதன் ஊடாகவே
தற்போதைய தமிழ்த் தலைமைகளாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களினதும்,கட்சிகளினதும் அரசியல் அயோக்கியத்தனம் அம்பலப்படுத்தப்படும்.

மக்களின் தலைமையில் சுயேட்சைகளாக களமிறங்கியிருப்பவர்களின் அரசியல் பிரவேசம்கூட பிரதேச அபிவிருத்தியை மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமைமீட்பு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
எனவேதான் கட்சிகளைப் புறக்கணித்து தாமே களத்திலிறங்குவதென மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.தாயக மக்களின் இந்த துணிச்சலான முடிவிற்கு புலம்பெயர் மக்களும்,விடுதலைப்புலிகள் அமைப்பில் களச்சமராடிய போராளிகளும் தமது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற்று,ஏமாற்றுத் தலைமைகளையும்,அவர்களின் கட்சிகளையும் புறக்கணிப்பதன் மூலமே தமிழர் இனவிடுதலைப் போராட்டம் புத்துயிர் பெறுவதற்கான காலச்சூழல் ஏற்படும்.

சோரம்போன தமிழ் அரசியற் தலைமைகளிடமிருந்து
தமிழினம் தன்னை விடுவித்துக்கொண்டால் மட்டுமே ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியான வடக்கு,கிழக்கை தமிழர்கள் சிங்களப் பேரினவாத்திடமிருந்து தனதாக்கிக்கொண்டு ஆட்சி செலுத்த தம்மை தயார்படுத்திக்கொள்ள முடியும்.

இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் காலந்தொட்டு தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுகிறோமெனக்கூறிய தமிழர் தரப்பு கட்சிகள்அனைத்தும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களப் பௌத்த பேரினவாத அரசுடன் கூட்டுச்சேர்ந்து தாமும் ஏமாந்து,மக்களையும் ஏமாற்றி இறுதியில் தமிழர்களின் உரிமைகளைச் சிங்களவருக்கு தாரைவார்க்கும் இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாலும்,
சிங்களப் பேரினவாதத்திடமிருந்து எதனையும் பேசிப்பெறமுடியாதெனும் இறுதி முடிவை அறிவித்துவிட்டு தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டுமெனக்கூறிய தந்தை செல்வாவின் எதிர்பார்ப்புமே தமிழரின் கடவுளாக தலைவர் பிரபாகரனின் வருகையும் ஆயுதப் போராட்டமும் தோற்றம்பெற முக்கிய காரணமாய் அமைந்தது.

எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது தாக்குதல் கூட இலங்கை பேரினவாதக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு கூட்டுச்சேர்ந்து தமிழர்களின் நில,மொழி உரிமைகளை சிங்களவர்களுக்கு தாரைவார்க்கத் துணைபோன யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா மீதான துப்பாக்கி சூட்டுடனேயே ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் அமிர்தலிங்கம்,நீலன் திருச்செல்வம்,கதிர்காமர் என பட்டியல் தொடர்ந்தது.

இவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும்,அன்றைய இளைய சமுதாயத்தாலும் தமிழ் அரசியற் தலைமைகள் அனைத்தும்,அவைகளின் கட்சிகளும் தூக்கியெறியப்பட்டன.தமது கட்சிகளுடன் கொழும்பிலும் சிலர் இந்தியாவிலும் அடைக்கலம் புகுந்தனர்.இது வரலாறு.
இந்தக்கட்சிகளையும்,அரசியல் பிழைப்புவாதிகளையும் தமிழர்கள் தமது அரசியற் செயற்பாடுகளிலிருந்து தூக்கியெறிந்ததாலேயே ஈழத்தமிழினம் முப்பது ஆண்டுகாலம் விடுதலைப்புலிகளின் தலைமையில் உலகமே வியக்க முப்படைகள் அமைத்து,நிழல் அரசை நிறுவி,தலைநிமிர்வோடு வாழமுடிந்தது. இதனையே வரலாறு எமக்கு கண்முன்னே காட்டி உணர்த்திச் சென்றுள்ளது.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் காலம் மீண்டுமொரு சுழற்சியில் இன்று வந்துநிற்கிறது.

அரசியல் அயோக்கியத்தனங்கள்,
இனவிரோதச் செயற்பாடுகள்,
நில ஆக்கிரமிப்புகள்,திட்டமிட்ட குடியேற்றங்கள்.
பொருளாதார வளச் சுறண்டல்கள்,
வறுமை வாழ்வு,
தொடர் இராணுவ அடக்குமுறைகள்,
பாதுகாப்பின்மை,
மொழி உரிமை,கல்வி,வேலைவாய்ப்பு மறுக்கப்படல்,கைதுகள்,காணாமல் போதல்கள்,காட்டிக்கொடுப்புகள்,
கொலைகள்,கொள்ளைகள்,பாலியல் வல்லுறவுகள்,சமூகசீர்கேடுகள்,
பண்பாட்டுச்சிதைவுகள்,
மதப்பிரிவினைகள்,சாதியம் பேசுதல்,சிறுவர் துஸ்பிரயோகம்,போதைவஸ்துக்கு அடிமையாதல் என தமிழர் தாயகமெங்கும் தலைவிரித்தாடுகிறது.

தமிழரைக் காப்பாற்ற கடவுளைத் தேடும் நிலைக்கு மீண்டும் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.ஏனெனில் அல்பிரட் துரையப்பாக்களும்,கதிர்காமர்களுமே இன்றைய தமிழ் தலைமைகளாக வலம்வருகின்றனர்.எனவே தமிழர்களைக் காப்பாற்ற நிச்சயம் ஒரு கடவுளை காலம் வெகுவிரைவில் வழங்கியே தீரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

புலவர்
கடற்புலிகள்.