தமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல : மைத்திரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து !

காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் கோரி வருவது நீதியையே அன்றி நிதியை அல்ல என சிறிலங்கா அரசுத்தலைவரின் கூற்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துரைத்துள்ளது.

காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்’ என சிறிலங்காவின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது யாழ்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுவிவகாரங்கள் அமைச்சு, தமிழ்மக்கள் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரநீதியை கோரிவருகின்றார்கள். ஆனால் அனைத்துலக சமூகமோ தமிழர்களுக்கு நிலைமாறுகால நீதியை வழங்கியுள்ளது. இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்காமல் நிவாரணமாக நிதியை வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதானது, காணாமல் ஆக்கப்பட்டதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே உள்ளது.

போரின் இறுதி மூன்று நாட்களும் முப்படைகளுக்குமான பாதுகாப்புதுறை பதில் தலைவராக மைத்திரிபால சிறிசேனாவே இருந்துள்ளார். இந்நிலையில் போரின் இறுதி நாட்களில் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் மைத்திரியும் உள்ளார் என நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.