காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் …

தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை

கோப்பையில் ஒரு குளிர்மையான பெரிய மாந்தோப்பு. அந்த மாந்தோப்பு வளவில் விடுதிகள் போன்று ஆங்காங்கே காணப்படும் வீடுகள். ஒருபுறத்தில் பாடசாலைக் கட்டிடம். இன்னொரு புறத்தில் பெரியதொரு சமையற்கூடம். முன்புறத்தில் தண்ணீர் தாங்கி அழகான, அமைதி நிறைந்த ஒரு பூங்காவிற்குள் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

மாந்தோப்பை மெல்லென பற்றிப் படரும் காற்றாய், மாங்கிளையில் கூடுகட்டி தாவிப் பறந்து திரியும் குருவிகளாய், சுதந்திரமான மகிழ்வுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் கூட்டம் நாம் உள்ளே சென்றதும் “மதிய வணக்கம் மாமா”, “மதியவணக்கம் மாமா” என்று எம்மை வரவேற்றனர். மூன்று வயது தொடக்கம் பதினைந்து வயதுவரையிலான சிறுவர்களை அங்கே காணக்கூடியதாக இருந்தது. ஆம், அதுதான் காந்தரூபன் அறிவுச்சோலை.

ஓர் இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சிரித்தபடி ஓர் இளைஞனின் உருவப்படம். அது கரும்புலியாய் சென்ற மாவீரரான கடற்கரும்புலி மேஜர் காந்தரூபனின் படம்.

காந்தரூபன் தாமே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்றதையும், முன்பு பெற்றோரை இழந்து யாருமற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததையும், தலைவர் பிரபாகரனிடம் “யாருமற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையிலிருந்து மீட்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டதையும் பொறுப்பாளர் எம்மிடம் விளக்கினார்.

அந்த மாவீரனின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் அவனுடைய பெயரிலேயே இந்த இல்லம் இயங்குகிறது. இந்த இல்லம் தலைவர் அவர்களினாலேயே 01.11.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் 45 பிள்ளைகளுடன் இவ்வில்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களினால் பெற்றோரை இழந்தவர்களும், வேறு பாதிப்புக்குள்ளானவர்களும் இவ்வில்லத்தில் வாழ்கின்றனர். காலையிலிருந்து இரவுவரை ஓர் ஒழுங்குமுறையான வழிநடத்தலில் இவர்கள் வளர்ந்து வருகின்றார்கள். அதிகாலையில் உடற்பயிற்சி; பின்பு காலை உணவு; எட்டுமணிக்குப் பாடசாலை; ஒரு மணிவரை படிப்பு; பின்னர் பகல் உணவு; இரண்டுமநிவரை ஒய்வு; மூன்று மணிக்கு விளையாட்டு; யோகாசனம் போன்றவை; பின்னர் படிப்பு; இரவு எட்டரை மணிக்கு உணவு; ஒன்பது மணிக்கு படுக்கை. இவாறான ஒழுங்கில் இவர்களது தினசரி வாழ்வு மகிழ்வுடன் கழிகிறது.

ஒன்பதாம் ஆண்டு வரையிலான கல்வி, அறிவுச்சோலை பாடசாலையிலேயே நடைபெறுகின்றது. இதற்கென ஏழு ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏனைய வகுப்பு மாணவர்கள் அண்மையில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

வயது குறைந்த சிறுவர்களைப் பராமரிக்க தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து குழந்தைகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் இவர்கள் சிறுவர்களைக் கவனித்துக்கொள்வர்.

கிழக்கு மாகாணம், வன்னி, குடாநாடு என சகல பிரதேசங்களிலிருந்தும் வந்துள்ள சிறுவர்கள் இங்கே பாதுகாத்து வளர்க்கப்படுகின்றனர். இவர்கள் தலைவர் கூறுவதைப் போல தமிழன்னையின் புதல்வர்கள். இவர்கள் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகளாக உருவாக்கப்பட்டு வளர்ந்து வருகின்றார்கள். அறிவியல் கல்வியை ஊட்டி சகல துறைகளிலும் சிறந்த முறையில் வளர்ந்து, மிகச் சிறந்த எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதே இவ்வறிவுச் சோலையில் குறிக்கோள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”